சகதியாக மாறிய சுரங்கப்பாதை: ரயில்வே நிர்வாகம் பாராமுகம்
சகதியாக மாறிய சுரங்கப்பாதை: ரயில்வே நிர்வாகம் பாராமுகம்
UPDATED : அக் 17, 2026 07:35 PM
ADDED : அக் 17, 2026 07:24 PM

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ரயில்வே சாலை, பரஞ்சோதியம்மன் கோவில் எதிரே உள்ள ரயில்வே சுரங்கப்பாதையில் தேங்கியுள்ள மழைநீர், சகதிநீராக மாறியுள்ளதால், வாகன ஓட்டிகளும், பாதசாரிகளும் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.
காஞ்சிபுரம், ரயில்வே சாலை பரஞ்சோதியம்மன் கோவில் எதிரே, ரயில்வே இருப்பு பாதையின் கீழ் சுரங்கப்பாதை உள்ளது. இப்பாதை வழியாக இருசக்கர வாகனங்கள், ஆட்டோக்கள் மற்றும் கார்கள் அதிகளவில் சென்று வருகின்றன.
இந்நிலையில், காஞ்சிபுரத்தில் நேற்று முன்தினம் பெய்த மழையால், சுரங்கப்பாதையில் தேங்கிய மழைநீர் சகதியாக மாறியுள்ளது. இதனால், சுரங்கப்பாதை வழியாக செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள், சகதிநீரில் வாகனங்களை இயக்க முடியாமல் தடுமாறுகின்றனர்.
வேகமாக செல்லும் வாகனங்களால் சகதிநீர் பாதசாரிகள் மீது தெறிக்கும் நிலையும் உள்ளது. குறிப்பாக, இரவு நேரங்களில் போதிய வெளிச்சம் இல்லாதபோது, தேங்கியுள்ள மழைநீரை கடந்து செல்வது வாகன ஓட்டிகளுக்கு பெரும் சவாலாக உள்ளது.
காஞ்சிபுரத்தில் மழை பெய்யும் போதெல்லாம், சுரங்கப்பாதையில் மழைநீர் தேங்குவது தொடர்கதையாக இருந்து வருகிறது.
எனவே, ரயில்வே சுரங்கப்பாதையில் தேங்கியுள்ள மழைநீரை உடனே அகற்றவும், மழைக்காலங்களில் தண்ணீர் தேங்காத வகையில் நிரந்தர தீர்வு காண, ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகளும், பாதசாரிகளும் வலியுறுத்தி வருகின்றனர்.
