ADDED : பிப் 20, 2026 06:07 AM
காஞ்சிபுரம்: மாநகராட்சி, நகராட்சி, ஊராட்சிகளில் உள்ள நாய்களுக்கு இனவிருத்தி கட்டுப்பாட்டு அறுவை சிகிச்சை, கடந்த 13ம் தேதி முதல் மேற்கொள்ளப்படுவதாக, காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
காஞ்சிபுரம் மாவட்டத்தில் கால்நடை பராமரிப்புத் துறையின் மூலம் சமூக நாய்களுக்கு இன விருத்தி கட்டுப்பாட்டு அறுவை சிகிச்சை, கடந்த 13ம் தேதி முதல் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அறுவை சிகிச்சை மேற் கொள்ள வாலாஜாபாத், படப்பை கால்நடை மருந்தகம் மற்றும் காஞ்சிபுரம் கால்நடை பெருமருத்துவமனை ஆகிய மூன்று மையங்கள் செயல்பட்டு வருகின்றன.
இந்த மையங்களில் சம்பந்தப்பட்ட ஊராட்சி, நகராட்சி மற்றும் மாநகராட்சிக்குட்பட்ட இடங்களிலுள்ள சமூக நாய்களுக்கு இனவிருத்தி கட்டுப்பாட்டு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு வருகிறது.
மாநகராட்சி, நகராட்சி, ஊராட்சி துாய்மை பணியாளர்களால் உரிய முறையில் பிடித்துக்கொண்டு வரப்படும் சமூக நாய்களுக்கு இம்மையங்களில் இனவிருத்தி கட்டுப்பாட்டு அறுவை சிகிச்சை மற்றும் வெறி நோய் தடுப்பூசி போடப்பட்டு மாநகராட்சி, நகராட்சி, ஊராட்சி பணியாளர்கள் மூலமாக முறையாக, 5 நாட்கள் நல்லமுறையில் பராமரிக்கப்பட்டு பிடித்த இடத்திலேயே ஆரோக்கியமான நிலையில் திரும்ப அதன் வாழ்விடத்தில் விடப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
