ADDED : செப் 16, 2026 08:14 PM
* டெண்டர் விடுவதில் வழிகாட்டு விதிகளை மாற்றி தில்லுமுல்லு * ஒப்பந்ததாரருக்கு அதிகாரிகள் துணை போவதாக குற்றச்சாட்டு
காஞ்சிபுரம், செப். 17–
வாலாஜாபாதில் குடிநீர் பணிகளுக்கு, டெண்டர் விடுவதில் வழிகாட்டு விதிகளை கடைபிடிக்காமல், தனக்கு சாதகமான ஒப்பந்தாரருக்கு அதிகாரிகள் சிண்டிகேட் அமைத்து, துணை போவதாக, ஒப்பந்ததாரர்களே குற்றஞ்சாட்டுகின்றனர்.
காஞ்சிபுரம், வாலாஜாபாத், குன்றத்துார், ஸ்ரீபெரும்புதுார், உத்திரமேரூர் ஆகிய ஐந்து வட்டார வளர்ச்சி அலுவலகங்களின் கட்டுப்பாட்டில், 274 ஊராட்சிகள் உள்ளன.
இந்த ஊராட்சிகளுக்கு, ஒன்றிய பொது நிதி, 15வது மத்திய நிதி குழு மானியம், தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களின் கீழ் வளர்ச்சி பணிகள் செய்யப்படுகின்றன.
இதுபோன்ற வளர்ச்சி பணிகளுக்கு, வட்டார நிர்வாகத்தை கவனிக்கும், வட்டார வளர்ச்சி அலுவலரே டெண்டர் அறிவிப்பு வெளியிட்டு, எந்த ஒரு ஒப்பந்ததாரர் குறைந்த ஒப்பந்தப் புள்ளி வழங்கி உள்ளார்களோ அவர்களுக்கு பணி ஆணை வழங்குவார் என்பதே நடைமுறை வழக்கமாக உள்ளது.
ஆனால், ஒரு சில வட்டார வளர்ச்சி அலுவலர்கள், டெண்டர் விதிமுறைகளை முறையாக கடைபிடிப்பதில்லை. மேலும், தனக்கு வேண்டியவர்களுக்கு சாதகமான முடிவுகளை தன்னிச்சையாக எடுப்பதாக, ஒப்பந்தததரர்கள் இடையே குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
உதாரணமாக, காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் வட்டார வளர்ச்சி அலுவலகம் இயங்கி வருகிறது. இங்கு, வாலாஜாபாத் ஒன்றிய பொது நிதியின் கீழ், ஒட்டிவாக்கம் ஊராட்சியில், இரண்டு குடிநீர் பணிகள்; தொள்ளாழி ஊராட்சி கொசப்பட்டு துணை கிராமத்தில், ஒரு குடிநீர் பணி என, மூன்று விதமான பணிகளுக்கு, 26 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், கடந்த மாதம் டெண்டர் அறிவிக்கப்பட்டது.
ஆக.,13ம் தேதி முதல் 21ம் தேதி வரையில் டெண்டர் எடுப்பவர்கள் விண்ணப்பிக்கலாம் என, அறிவிக்கப்பட்டு இருந்தது. இதில், ஐந்திற்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்து இருந்தனர்.
ஒரு சிலர், 23 சதவீதம் ஒப்பந்தப்புள்ளி கோரி இருந்தனர். ஒரு சிலர், 28 சதவீதம் வரையில் ஒப்பந்தப்புள்ளி கோரி இருந்தனர். சம்பந்தப்பட்ட வட்டார வளர்ச்சி அலுவலர், 20 சதவீதத்திற்கு அதிகமான ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டுள்ளதால், டெண்டர் ரத்து செய்யப்படுகிறது என ஆக., 28ம் தேதி அறிவித்துள்ளார்.
இதையடுத்து, ஆக.,31ம் தேதி முதல் செப்.,10ம் தேதி வரையில் மறு டெண்டர் அறிவிக்கப்பட்டது. இதில், 20 சதவீதம் ஒப்பந்தப்புள்ளிக்கு, 19.97 சதவீதம் ஒப்பந்தப் புள்ளியை ஒப்பந்ததாரர் ஒருவர் கோரி இருந்தார். அதே போல, 28 சதவீதம்; 24 சதவீதம்; 20 சதவீதம் உள்ளிட்ட பல்வேறு ஒப்பந்தப்புள்ளி கோரி சிலர் விண்ணப்பித்து இருந்தனர்.
இதில், 28 சதவீதம் குறைந்த ஒப்பந்தப்புள்ளி கோரிய ஒப்பந்தம் எடுத்தவருக்கு டெண்டரை பெண் வட்டார வளர்ச்சி அலுவலர் வழங்கி உள்ளார்.
அரசியல் நெருக்கடியா, எதிர்கட்சியைச் சேர்ந்த மக்கள் பிரதிநிதிகளின் நெருக்கடியா, அல்லது ஆளும்கட்சியினர் தலையீடா என, தெரியவில்லை என, ஒப்பந்ததாரர்கள் குற்றச்சாட்டி வருகின்றனர்.
இது ஒருபுறம் இருக்க, குறைந்த ஒப்பந்த புள்ளி கோரிய ஒப்பந்ததாரர் சம்பந்தப்பட்ட வட்டார வளர்ச்சி அலுவலக மேலாளரிடம் கேட்ட போது, பி.டி.ஓ., எனும் வட்டார வளர்ச்சி அலுவலர் என்ன முடிவு செய்கிறாரோ அது தான் இறுதி முடிவு என, ஒப்பந்ததாரர்களிடம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக, ஏதேனும் புகார் அளித்தால், விசாரணையில் அவர் பார்த்து கொள்வார் என, அவருக்கு பதில் அளிக்கப்பட்டுள்ளது.
பொறுப்பு உணர்வுடன் இருக்க வேண்டிய அதிகாரியே, வழிகாட்டி விதிகளை கடைபிடிக்க மறுப்பு தெரிவிப்பது வேதனையாக உள்ளது என, ஒப்பந்ததாரர்கள் குற்றச்சாட்டு வருகின்றனர்.
இதுகுறித்து, ஒப்பந்ததாரர் ஒருவர் கூறுகையில், ‛எந்த ஒரு காரணம் காட்டி டெண்டரை ரத்து செய்தார்களே அந்த காரணத்தை அதிகாரிகள் முறையாக கடைபிடிக்கவில்லை. யாரை திருப்திபடுத்துவதற்கு இது போல செயல்களை அதிகாரிகள் செய்கிறார்கள் என, தெரியவில்லை. ஒப்பந்தம் அறிவிப்பு நோட்டீஸ் கூட தாமதமாக தான் ஒட்டுகின்றனர். அதிகாரிகளின் செயல்பாடுகளை மாவட்ட நிர்வாகம் தான் கண்காணிக்க வேண்டும்’ என்றார்.
இதுகுறித்து, வாலாஜாபாத் வட்டார வளர்ச்சி அலுவலர் சூர்யா கூறுகையில், ‘‘குடிநீர் பணிகளுக்கு விடப்பட்ட டெண்டரை மீண்டும் ரத்து செய்து, புதிய டெண்டரை விட உள்ளோம்,’’ என்றார்.
இதுகுறித்து, ஊரக வளர்ச்சி முகமை செயற்பொறியாளர் பாலசுப்பிரமணியன் கூறுகையில், ‘‘குறைந்த ஒப்பந்தப்புள்ளி கோரியவருக்கே, ஒப்பந்தம் வழங்க வேண்டும். அதிக ஒப்பந்தப்புள்ளி கோரியவருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என கூறுகிறீர்கள் ஆய்வு செய்து தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்,’’ என்றார்.
