/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
ரூ.2.49 கோடியில் 48 பணிகளுக்கு டெண்டர்
/
ரூ.2.49 கோடியில் 48 பணிகளுக்கு டெண்டர்
ADDED : மே 10, 2025 07:05 PM
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாநகராட்சியில் பல்வேறு வளர்ச்சி பணிகள் நிலுவையில் இருப்பதாகவும், தங்களது வார்டுகளில் மேற்கொள்ள வேண்டிய சாலை, மழைநீர் கால்வாய், குடிநீர் குழாய், பாதாள சாக்கடை அடைப்பு போன்ற பிரச்னைகளை கவுன்சிலர்கள் தெரிவித்தபடி உள்ளனர்.
மாநகராட்சி கூட்டத்திலும் இது சம்பந்தமாக கவுன்சிலர்கள் கூச்சலிட்டும் பேசி வருகின்றனர். ஆனால், பல வார்டுகளில் நீண்ட காலமாக தீர்க்கப்படாத பிரச்னை அப்படியே உள்ளன.
கவுன்சிலர்கள் கேட்டு வரும் பிரச்னைகளையும், பொதுமக்கள் தெரிவித்த பிரச்னைகளையும் சேர்த்து, 4 மண்டலங்களில் தேவையான பணிகளுக்கு மொத்தமாக மாநகராட்சி நிர்வாகம் டெண்டர் விட்டுள்ளது.
எம்.ஜி.ஆர்.,நகர் மேற்கு முடங்கு வீதியில் கழிவுநீர் கிணறு அமைத்து மோட்டார் பொருத்துதல், பாரதி நகரில் பாதாள சாக்கடை கழிவுநீர் வெளியேற்றும் நிலையம் அமைத்தல், மாரியம்மன் கோவில் தெருவில் மழைநீர் கால்வாய் அமைத்தல், தாயார்குளம் தெருவில் மழைநீர் கால்வாய் மூடியுடன் அமைத்தல், பெரியார் நகரில் மாநகராட்சி வணிக கடைகள் கட்டுதல் என, மொத்தம் 48 பணிகள், 2.49 கோடி ரூபாய் மதிப்பில் மொத்தமாக டெண்டர் விடப்பட்டுள்ளது.
டெண்டர் பணிகள் முடிந்தவுடன், படிப்படியாக இப்பணிகள் துவங்கி நடைபெற உள்ளன.
மாநகராட்சியின் 51 வார்டுகளில் பெரும்பாலான வார்டுகள் இப்பணிகளில் இடம் பெற்றுள்ளன. கட்டடம் கட்டுதல், கால்வாய் அமைத்தல் போன்ற திட்டங்கள் நிறைவேற்றும் அதேசமயம், மாநகராட்சி முழுதும் சேதமாகி கிடக்கும் சாலைகளை எப்போது மாநகராட்சி நிர்வாகம் சீரமைக்கும் என, நகரவாசிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.