/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
புதிய பேருந்து நிலையம் அமைக்க ரூ.35 கோடியில்... 'டெண்டர்': விரிவான திட்ட அறிக்கையுடன் மாநகராட்சி மும்முரம்
/
புதிய பேருந்து நிலையம் அமைக்க ரூ.35 கோடியில்... 'டெண்டர்': விரிவான திட்ட அறிக்கையுடன் மாநகராட்சி மும்முரம்
புதிய பேருந்து நிலையம் அமைக்க ரூ.35 கோடியில்... 'டெண்டர்': விரிவான திட்ட அறிக்கையுடன் மாநகராட்சி மும்முரம்
புதிய பேருந்து நிலையம் அமைக்க ரூ.35 கோடியில்... 'டெண்டர்': விரிவான திட்ட அறிக்கையுடன் மாநகராட்சி மும்முரம்
ADDED : மே 03, 2025 01:06 AM
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் அருகே, பொன்னேரிக்கரையில் புதிய புறநகர் பேருந்து நிலையம் அமைப்பதற்கு, 35 கோடி ரூபாயில், காஞ்சிபுரம் மாநகராட்சி டெண்டர் விட்டுள்ளது. நீதிமன்ற வழக்குகள் ஒருபுறம் இருந்தாலும், விரிவான திட்ட அறிக்கை தயாரித்து, பேருந்து நிலையம் அமைப்பதற்கான அடுத்தகட்ட நடவடிக்கையை மாநகராட்சி நிர்வாகம் எடுத்துள்ளது.
காஞ்சிபுரம் நகரின் மையப் பகுதியில், 60 ஆண்டுகளுக்கு முன், 7 ஏக்கரில் பேருந்து நிலையம் அமைக்கப்பட்டு, தற்போதும் பயன்பாட்டில் உள்ளது. தினமும் 300 பேருந்துகள் வந்து செல்கின்றன.
பேருந்துகள் நகருக்குள் வந்து செல்வதால், போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது. ரெட்டை மண்டபம், ராஜவீதிகள், காமராஜர் சாலை போன்ற இடங்களில் வாகன நெரிசல் ஏற்படுகிறது.
பேருந்து நிலையம் விஸ்தாரமாக இல்லாததால், பேருந்துகள் நிறுத்துவதற்கு இடமின்றி தர்மபுரி, கோவை, கிருஷ்ணகிரி, ஈரோடு, திருப்பூர் போன்ற மேற்கு மாவட்டங்களுக்கு பேருந்துகள் இயக்கப்படுவதில்லை.
இதனால், சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில், புதிய பேருந்து நிலையம் அமைக்க வேண்டிய தேவை, 10 ஆண்டுகளுக்கு முன்பே ஏற்பட்டது.
புதிய பேருந்து நிலையம் அமைக்க, 2017ம் ஆண்டு முதல், கீழ்கதிர்பூர் உள்ளிட்ட பல்வேறு இடங்கள் தேர்வு செய்த பின்னும், நிலங்களை கையகப்படுத்துவதில் சிக்கல் ஏற்பட்டது.
இறுதியாக, பொன்னேரிக்கரையில் உள்ள தனியார் அறக்கட்டளை பயன்பாட்டில் இருந்த இடத்தை, மாவட்ட நிர்வாகம் ஆய்வு செய்தது. அந்த இடம், அரசு நிலம் என்பதற்கான பல்வேறு ஆவணங்கள் கிடைத்தது.
இதையடுத்து, சில மாதங்களுக்கு முன், காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி, பொன்னேரிக்கரையில் உள்ள 19 ஏக்கர் நிலம், அரசுக்கு சொந்தமானது என, உத்தரவுகளை பிறப்பித்தார்.
அதில், பேருந்து நிலையம் அமைவதற்கு, 11 ஏக்கர் நிலம், மாநகராட்சி நிர்வாகத்திற்கு ஒப்படைக்கப்பட்டது. நிலையத்திற்கான உள் நுழைவு பகுதிக்கான அனுமதியையும், மாவட்ட நிர்வாகம், மாநகராட்சிக்கு வழங்கியது.
தொடர்ந்து, பேருந்து நிலையம் அமையும் இடத்தை, மாநகராட்சி நிர்வாகம் வேலி அமைத்து, தன் கட்டுப்பாட்டில் கொண்டு வரும் முயற்சியை மேற்கொண்டது.
இதற்கிடையே, தனியார் அறக்கட்டளை நிர்வாகம், நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து, கலெக்டர் நடவடிக்கைக்கு இடைக்கால உத்தரவு பெற்றது.
இதனால், பேருந்து நிலையம் அமைவதற்கான அடுத்தகட்ட பணிகள் எப்போது நடக்கும் என, கேள்வி எழுந்தது. இடைக்கால உத்தரவை நீக்குவதற்கான மனுவையும், நீதிமன்றத்தில், மாவட்ட நிர்வாகம் தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், காஞ்சிபுரம் மாநகராட்சி நிர்வாகம், பொன்னேரிக்கரையில், 35 கோடி ரூபாய் மதிப்பில், பேருந்து நிலையம் அமைப்பதற்காக 'டெண்டர்' கோரியுள்ளது.
நீதிமன்ற வழக்குகள் மத்தியில், பேருந்து நிலையம் அமைப்பதற்கான டெண்டர் பணிகளை, மாநகராட்சி நிர்வாகம் துவக்கியுள்ளதால், அடுத்தக்கட்ட பணிகள் வேகமாக நடக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
நீதிமன்ற வழக்குகள் பற்றி காஞ்சிபுரம் மாவட்ட உயரதிகாரி ஒருவர் கூறியதாவது:
பேருந்து நிலையம் அமைப்பது தொடர்பாக, அறக்கட்டளை நிர்வாகம் மூன்று வழக்குகள் தொடர்ந்துள்ளன.
முதலாவதாக, பொன்னேரிக்கரையில் போக்குவரத்து அலுவலகம் செல்லும் சாலையோரம் உள்ள இடத்தை பேருந்து நிலையம் அமைக்க கையகப்படுத்த முயன்றபோது, அறக்கட்டளை நிர்வாகத்தினர் நீதிமன்ற வழக்கு தொடர்ந்து, 2023ல் தடை உத்தரவும் பெற்றனர்.
இதனால், நிலத்தை கையகபடுத்துவதை விடுத்து, கல்வி நிறுவனங்கள் அருகே உள்ள அரசு இடத்தில் பேருந்து நிலையம் அமைக்க, மாவட்ட நிர்வாகம் முயன்றது. அதற்கான உத்தரவை, கலெக்டர் நான்கு மாதங்கள் முன்பாக பிறப்பித்தார்.
இந்த உத்தரவுக்கு எதிராக, 19 ஏக்கர் நிலம் தங்களுடையது என, அறக்கட்டளை நிர்வாகத்தினர் உரிமை கோருகின்றனர்; நிலத்துக்கான இழப்பீடும் கேட்கின்றனர். ஆனால், அது அரசு நிலம்.
இதனால், இரண்டாவது வழக்கை தொடர்ந்து, அதற்கும் நீதிமன்ற இடைக்கால உத்தரவு பெற்றனர்.
பேருந்து நிலையம் அமையும் இடத்தில் உள்ள ஆக்கிரமிப்பு கட்டடங்கள் சம்பந்தமாக, தனியார் அறக்கட்டளைக்கு 'நோட்டீஸ்' வழங்கினோம். அதற்கும் மூன்றாவதாக வழக்கு தொடர்ந்தனர்.
ஆனால், ஆக்கிரமிப்பு அகற்ற நோட்டீஸ் கொடுக்கப்பட்டதற்கு நீதிமன்றம் இடைக்கால தடை விதிக்கவில்லை.
பேருந்து நிலையம் அமைக்கும் முயற்சியின் இடையூறாக மூன்று வழக்குகளை அறக்கட்டளை நிர்வாகம் தொடுத்துள்ளது. மூன்று வழக்குகளையும் ஒன்றாக சேர்த்து நீதிமன்றம் விசாரிக்க உள்ளது.
விசாரணையின்போது, நாங்கள் அனைத்து அரசு ஆவணங்களையும் தாக்கல் செய்ய தயாராக உள்ளோம். பொன்னேரிக்கரையில் உள்ள 19 ஏக்கர் நிலம், அரசு இடம்தான் என்பதற்கான அனைத்து ஆவணங்களும் உள்ளன.
இடைக்கால தடை உத்தரவை நீக்க மனு தாக்கல் செய்துள்ளோம். பேருந்து நிலையம் அமைப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.