/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
வெங்கச்சேரி செய்யாறு அணைக்கட்டு சீரமைக்க 'டெண்டர்' ...ரூ . 1 8 கோடி:2,000 ஏக்கர் பயன்பெறும் என்பதால் விவசாயிகள் நிம்மதி
/
வெங்கச்சேரி செய்யாறு அணைக்கட்டு சீரமைக்க 'டெண்டர்' ...ரூ . 1 8 கோடி:2,000 ஏக்கர் பயன்பெறும் என்பதால் விவசாயிகள் நிம்மதி
வெங்கச்சேரி செய்யாறு அணைக்கட்டு சீரமைக்க 'டெண்டர்' ...ரூ . 1 8 கோடி:2,000 ஏக்கர் பயன்பெறும் என்பதால் விவசாயிகள் நிம்மதி
வெங்கச்சேரி செய்யாறு அணைக்கட்டு சீரமைக்க 'டெண்டர்' ...ரூ . 1 8 கோடி:2,000 ஏக்கர் பயன்பெறும் என்பதால் விவசாயிகள் நிம்மதி
ADDED : அக் 12, 2025 10:38 PM

காஞ்சிபுரம்:செய்யாற்றின் குறுக்கே சேதமடைந்த வெங்கச்சேரி அணைக்கட்டை சீரமைக்கும் பணிக்கு, 18 கோடி ரூபாயில் டெண்டர் விடப்பட்டுள்ளது. நான்கு ஆண்டுகளாக இழுபறியில் இருந்த அணைக்கட்டு சீரமைப்பு பணி துவங்க உள்ளதால், 2,000 ஏக்கர் விளைநிலங்களில் தடையின்றி பயிர் செய்ய முடியும் என, விவசாயிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். காஞ்சிபுரம் மாவட்டம், செய்யாறு குறுக்கே, 8 கோடி ரூபாய் மதிப்பில், வெங்கச்சேரி கிராமத்தில், 2017ல் புதிதாக அணைக்கட்டு கட்டப்பட்டது.
இந்த அணைக்கட்டின் ஷட்டரில் இருந்து வெளியேறும் தண்ணீர், நீர்வரத்து கால்வாய் மூலம், காவாந்தண்டலம் ஏரியை நிரப்பும். செய்யாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும்போதெல்லாம், காவாந்தண்டலம் ஏரிக்கு செல்வதற்காகவே இந்த அணைக்கட்டு கட்டப்பட்டது.
சேதம் இந்த அணைக்கட்டால், காவாந்தண்டலம், மாகரல் , வெங்கச்சேரி உள்ளிட்ட, 40க்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள 2,000 ஏக்கர் விவசாய நிலங்களுக்கும் பயன்பெறும். தவிர, அப்பகுதிகளின் நிலத்தடி நீரை உயர்த்தவும் முடிந்தது.
இந்நிலையில், 2021ல் பெய்த கனமழை காரணமாக, செய்யாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அப்போது, அணைக்கட்டின் அடிப்பகுதி சேதமானது.
கட்டி முடிக்கப்பட்டு நான்கு ஆண்டுகளிலேயே அணைக்கட்டின் அடிப்பகுதி சேதம் ஆனதால், காவாந்தண்டலம் ஏரிக்கு சீராக நீர் செல்லவில்லை.
இதனால், ஏரி பாசனத்தை நம்பியுள்ள விளை நிலங்களுக்கு தண்ணீர் பாய்ச்ச முடியாமல், விவசாயிகள் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே, காவாந்தண்டலம் ஏரிக்கு தண்ணீர் எடுத்து வர வழிவகை செய்ய வேண்டும் என, அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
இந்நிலையில், நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், கடந்த மார்ச் மாதம், வெங்கச்சேரி அணைக்கட்டை சீரமைக்கவும், பக்கவாட்டு கால்வாய் கட்டவும், 18 கோடி ரூபாய் ஒதுக்கப்படும் என அறிவித்தார்.
ஒதுக்கீடு அதுமட்டுமல்லாமல், தாமல் ஏரியின் மதகு 6ல், ஏரிக்கரையின் பின்பகுதியில், 6 கோடி ரூபாய் மதிப்பில் பாதுகாப்பு சுவர் அமைக்கப்படும் எனவும், கோவிந்தவாடி கிராமத்தில் பெரிய ஏரி மற்றும் சிற்றேரியை, 1 கோடி ரூபாய் மதிப்பில் சீரமைக்கப்படும் எனவும் தெரிவித்தார்.
அறிவிப்பு வெளியாகி ஆறு மாதங்கள் கடந்த நிலையில், வெங்கச்சேரி அணைக்கட்டை சீரமைக்கவும், பக்கவாட்டு கால்வாய் கட்டவும், நீர்வளத்துறை டெண்டர் விட்டுள்ளது.
அணைக்கட்டை சீரமைக்க 11 கோடி ரூபாய், பக்கவாட்டு கால்வாய் கட்டுவதற்கு 7 கோடி ரூபாய் என, பணி துவங்க டெண்டர் விடப்பட்டுள்ளது.
அணைக்கட்டு சேதமாகி நான்கு ஆண்டுகளுக்கு பின், தற்போது சீரமைக்க நிதி ஒதுக்கி பணி துவங்க உள்ளதால், 2,000 ஏக்கரில் விவசாயம் செய்ய முடியும் என, விவசாயிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து, நீர்வளத்துறை அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, 'அணைகட்டு மற்றும் பக்கவாட்டு சுவர் அமைக்க தேவையான நிதியை அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.
'தற்போது டெண்டர் விட்டுள்ளோம். அடுத்தபடியாக சீரமைப்பு பணிகள் துவங்கும். மழை அதிகளவு பெய்தால், பருவமழைக்கு பின் தான் பணிகள் துவங்கும். மழை குறைவாக இருந்தால், பணிகள் விரைவாக துவங்கப்படும்' என்றார்.