/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
10 நாட்கள் நடந்த புத்தக திருவிழா நிறைவு ரூ.ஒரு கோடிக்கு விற்பனை
/
10 நாட்கள் நடந்த புத்தக திருவிழா நிறைவு ரூ.ஒரு கோடிக்கு விற்பனை
10 நாட்கள் நடந்த புத்தக திருவிழா நிறைவு ரூ.ஒரு கோடிக்கு விற்பனை
10 நாட்கள் நடந்த புத்தக திருவிழா நிறைவு ரூ.ஒரு கோடிக்கு விற்பனை
ADDED : பிப் 11, 2025 01:06 AM

காஞ்சிபுரம், காஞ்சிபுரம் மாவட்ட மக்கள் மற்றும் பள்ளி, கல்லுாரி மாணவ - மாணவியர் பயன்பெறும் வகையில், 2025ம் ஆண்டுக்கான புத்தக திருவிழா, கலெக்டர் வளாகத்தில் உள்ள மைதானத்தில், கடந்த 31ல் துவங்கியது.
இப்புத்தக திருவிழா நேற்று வரை 10 நாட்கள் தொடர்ந்து நடந்தது. புத்தக திருவிழா தினமும் காலை 10:00 மணிக்கு துவங்கி, இரவு 9:00 மணி வரை நடந்தது. இதில், தென்னிந்தியா முழுதும் இருந்து பதிப்பாளர்கள் மற்றும் புத்தக வெளியீட்டாளர்கள் பங்கேற்கும் வகையில், பல்வேறு அரங்குகளில், 1,000க்கும் மேற்பட்ட எழுத்தாளர்களின் படைப்புகள் அமைக்கப்பட்டு, லட்சத்திற்கும் மேற்பட்ட புத்தகங்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தன.
கலை நிகழ்ச்சிகள், இல்லம் தேடி கல்வி, மகளிர் குழுவினர் உற்பத்தி பொருட்கள் விற்பனை, அறிவியல் இயக்க செயல்பாடு போன்றவைக்கு தனி அரங்குகள் அமைக்கப்பட்டு, வாசகர்களுக்கு காட்சிபடுத்தப்பட்டு இருந்தன.
எழுத்தாளர்கள், பேச்சாளர்கள், கருத்தாளர்கள், தன்னம்பிக்கை பேச்சாளர்கள் என, பலரும் பங்கேற்று பேசினர். பள்ளி, கல்லுாரி மாணவ - மாணவியர் 1,500 பேர், தினமும் நடந்த கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்றனர்.
தினமும் ஆயிரக்கணக்கான வாசகர்கள், பள்ளி மாணவ - மாணவியர், இளைஞர்கள், முதியோர், நடுத்தர வயதினர் என, பல தரப்பினரும் புத்தகங்களை ஆர்வத்துடன் வாங்கி சென்றனர்.புத்தக திருவிழாவில், ஐந்து லட்சம் பேர் பங்கேற்றுள்ளனர் எனவும், 1 கோடி ரூபாய்க்கு புத்தகங்கள் விற்பனை நடந்திருப்பதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
புத்தக திருவிழாவில் பணியாற்றிய அரசு அலுவலர்கள் 253 பேருக்கு, பாராட்டு சான்றிதழ் மற்றும் கேடயங்களை, கலெக்டர் கலைச்செல்வி நேற்று வழங்கினார். புத்தக திருவிழாவுக்கு நன்கொடை அளித்த 10 பேருக்கு நினைவு பரிசுகளும் வழங்கப்பட்டன.