/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
ஒரே மாதத்தில் பல்லிளித்த தார் சாலை
/
ஒரே மாதத்தில் பல்லிளித்த தார் சாலை
ADDED : செப் 25, 2024 03:54 AM

ஸ்ரீபெரும்புதுார் : குன்றத்துார் ஒன்றியம், வட்டம்பாக்கம் ஊராட்சியில், புதிதாக போடப்பட்ட தார் சாலை, ஒரே மாதத்திற்குள் சேதமடைந்துள்ளதால், தரமற்ற சாலையால் மக்களின் வரிப்பணம் பல லட்சம் ரூபாய் வீணாகி உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
குன்றத்துார் ஒன்றியம், வட்டம்பாக்கம் ஊராட்சியில் 2,000க்கும் அதிகமான வீடுகள் உள்ளன. இப்பகுதியினரின் பிரதான சாலையாக உள்ள, வட்டம்பாக்கம், பனப்பாக்கம் சாலை வழியே, வண்ட லுார் -- வாலாஜாபாத் சாலையை வந்தடைந்து, அங்கிருந்து, ஒரகடம், படப்பை, தாம்பரம்உள்ளிட்ட பகுதிகளுக்கு, தினமும் ஏராளமானோர் சென்று வருகின்றனர்.
தவிர, உமையாள்பரணச்சேரி, காஞ்சிவாக்கம், நாட்டரசம்பட்டு, வளையக்கரணை உள்ளிட்ட கிராமங்களை இணைக்கும் முக்கிய சாலையாக உள்ளது.
தினசரி பள்ளி, கல்லுாரி, வேலைக்கு செல்லும் 5க்கும் மேற்பட்ட கிராமத்தினர், இந்த சாலையை பயன்படுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், 10 ஆண்டுகளுக்கு மேலாக இந்த சாலை முழுதும் சேதமடைந்து, குண்டும் குழியுமாக மாறி போக்குவரத்திற்கு லாயக்கற்ற நிலையில் இருந்தது.
ஒவ்வொரு மழைக்கும் இந்த சாலையில் மழைநீர் தேங்கி நிற்பதால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்தற்கு ஆளாகி வந்தனர்.
இப்பகுதியினரின் தொடர் கோரிக்கையை அடுத்து, 'மிக்ஜாம்' புயல் சாலை சீரமைப்புதிட்டத்தில், 2 கோடி ரூபாய்மதிப்பில், கடந்த மார்ச் மாதம் இந்த சாலைசீரமைப்பு பணிகள் துவங்கின. இதையடுத்து, ஐந்து மாதங்களுக்கு மேலாக மந்த கதியில் நடந்த பணி, கடந்த ஆகஸ்ட் மாதம் நிறைவடைந்தது.
இந்த நிலையில், புதிதாக அமைக்கப்பட்ட தார் சாலை ஒரே மாதத்தில் சேதமடைந்துள்ளது. மக்களின் வரிப்பணத்தில், பல லட்சம் ரூபாய் மதிப்பில் போடப்பட்ட தார் சாலை ஒரே மாதத்தில் சேதமடைந்துள்ளது அப்பகுதி மக்களுக்கிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
எனவே, இது குறித்து உயர் அதிகாரிகள் ஆய்வு செய்து, சாலைகளின் தரத்தை பரிசோதித்து, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.