/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
காசிமேடில் பேரம் பேசி மீன் வாங்கிய சீனர்கள்
/
காசிமேடில் பேரம் பேசி மீன் வாங்கிய சீனர்கள்
ADDED : பிப் 05, 2024 08:09 AM

காசிமேடு : காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில், சீனா நாட்டைச் சேர்ந்த மூவர், பேரம் பேசி மீன், இறால்களை வாங்கிச் சென்றனர்.
காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில், ஞாயிற்றுக்கிழமையான நேற்று, மீன் பிடிக்கச் சென்ற 40க்கும் மேற்பட்ட படகுகள் கரை திரும்பின.
இதில், குறைந்த அளவிலான மீன்களே விற்பனைக்கு வந்தன. ஆனாலும், மக்கள் கூட்டம் அலைமோதியதால், மீன் விலை உயர்ந்து காணப்பட்டது.
அப்போது, காசிமேடில் மீன்கள் வாங்க, சீனா நாட்டைச் சேர்ந்த மூவர் வந்திருந்தனர். அவர்கள், அங்கிருந்த வியாபாரிகளிடம் பேரம் பேசி மீன், இறால்களை, 'பிளாஸ்டிக் பக்கெட்'டில் வாங்கிச் சென்றனர்.
இதுகுறித்து அவர்கள் கூறியதாவது:
கடந்த இரண்டு ஆண்டுகளாக சென்னையில் வசித்து வருகிறோம். எங்களுக்கு மீன்கள் மிகவும் பிடிக்கும். காசிமேடில் மீன்கள், இறால்கள் நல்ல தரத்துடன் கிடைக்கின்றன. இவை சுவையாக இருக்கும்.
அதிலும் குறிப்பாக, இங்கு கிடைக்கும்,'டைகர்' இறால்கள் மிகவும் பிடிக்கும்.
தற்போது, நான்காவது முறையாக காசிமேடில் மீன்களை வாங்கிச் செல்கிறோம்.
மேலும், தமிழகத்தை மிகவும் நேசிக்கிறோம்.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.
மேலும் தங்களுக்கே உரிய பாணியில்,'ஐ லவ் தமிழ்நாடு' என கூறிவிட்டுச் சென்றனர். தற்போது இந்த வீடியோ, சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

