மறுகுடியமர்வு மாதிரி வீடுகள் மருத்துவமனைக்கு....ஒப்படைக்க முடிவு!:பரந்துார் திட்டம் கைவிடப்பட்டதால் அரசு திட்டம்
மறுகுடியமர்வு மாதிரி வீடுகள் மருத்துவமனைக்கு....ஒப்படைக்க முடிவு!:பரந்துார் திட்டம் கைவிடப்பட்டதால் அரசு திட்டம்
UPDATED : செப் 27, 2026 05:17 AM
ADDED : செப் 26, 2026 08:21 PM

* . *
காஞ்சிபுரம், செப். 27-
பரந்துார் விமான நிலைய திட்டம் கைவிடப்பட்டதால், அங்கு கட்டப்பட்டுள்ள மறுகுடியமர்வு மாதிரி வீடுகளை, ஆரம்ப மருத்துவ நிலையத்திற்கு ஒப்படைக்க அரசு முடிவு செய்துள்ளது. இதன் காரணமாக, பரந்துார் மக்களுக்கு கூடுதல் மருத்துவ வசதிகள் கிடைக்கும் என, மருத்துவ துறையினர் தெரிவித்தனர்.
சென்னையின் இரண்டாவது விமான நிலையத்திற்காக, காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருக்கும் ஸ்ரீபெரும்புதுார் மற்றும் காஞ்சிபுரம் ஆகிய இரு தாலுகாக்களில், 5,320 ஏக்கர் பரப்பளவில், பரந்துார் சுற்றியுள்ள, 20 கிராமங்களில் அமைக்கும் திட்டம் அறிவிக்கப்பட்டது.
இதற்கு, பரந்துார், நெல்வாய், வளத்துார், மடப்புரம், கூத்திரம்பாக்கம், ஏகனாபுரம், குணகரம்பாக்கம், மகாதேவிமங்கலம் உள்ளிட்ட 20 கிராமங்களில், 3,774 ஏக்கர் நிலம் கையகப்படுத்தும் பணியை, 'டிட்கோ' எனும் தமிழக தொழில் வளர்ச்சி நிறுவனம் செய்து வந்தது.
கடந்தாண்டு மார்ச் மாத இறுதி வரை கணக்கெடுப்பில், 2,500 ஏக்கர் நிலங்களுக்கான நில எடுப்பு பணிகள் முடிந்து விட்டதாக வருவாய் துறையினர் தெரிவித்தனர்.
அதே சமயம், விமான நிலைய திட்டத்தில் பாதிக்கப்படுபவர்களுக்கு, மறு குடியமர்வு செய்வதற்கான நிலம், வீடு ஆகியவை கட்டி கொடுக்கப்படும் என, முந்தைய அரசு அறிவித்து இருந்தது.
மறுகுடியமர்வு பயனாளிகளுக்கு, இரண்டு மாதிரி வீடுகள், பரந்துாரில் உள்ள அரசு மருத்துவமனை வளாகத்தில், 'டிட்கோ' கட்டி முடித்துள்ளது.
இதுதவிர, மறுகுடியமர்வு இடத்தில், அங்கன்வாடி மையம், பள்ளி, நீர் தொட்டி, ஆரம்ப மருத்துவமனை உள்ளிட்ட மாதிரிகளை புகைப்பட கண்காட்சியாக அமைக்கப்பட்டு இருந்தன.
தேர்தல் பிரசாரத்தின்போது அளித்த வாக்குறுதிப்படி, த.வெ.க., ஆட்சி அமைந்ததும், பரந்துார் விமான நிலைய திட்டத்தை கைவிடுவதாக, விஜய் தலைமையிலான தமிழக அரசு அறிவித்துள்ளது.
இதனால், பரந்துார் விமான நிலைய திட்டம் நிலம் கையகப்படுத்தும் பணி மற்றும் பிற வளர்ச்சிகள் முடங்கியுள்ளன.
இருப்பினும், மறுகுடியமர்வுக்கு கட்டி கொடுக்கப்பட்ட மாதிரி வீடுகளை, அரசு ஆரம்ப மருத்துவ நிலையத்திற்கு வழங்க, டிட்கோ நிறுவனம் முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து, காஞ்சிபுரம் மாவட்ட ஆரம்ப மருத்துவ நிலைய அதிகாரி ஒருவர் கூறியதாவது:
பரந்துார் விமான நிலைய திட்டத்தால் பாதிக்கப்படும் குடியிருப்புகளுக்கு மாதிரி வீடுகளை, அரசு ஆரம்ப மருத்துவமனை பகுதியில் கட்டப்பட்டுள்ளது.
விமான நிலைய திட்டம் கைவிடப்பட்டு உள்ளதால், டிட்கோ நிர்வாகம், கட்டிய வீடுகளை சுகாதார துறையினரிடம் ஒப்படைக்க முடிவு செய்துள்ளது.
அவ்வாறு ஒப்படைக்கும் பட்சத்தில், மகப்பேறு மருத்துவத்திற்கு கட்டடம் பயன்படுத்தப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
