/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
சாலை மீடியனில் கொடி கம்பங்கள் வேடிக்கை பார்க்கும் நெ.சா.துறை
/
சாலை மீடியனில் கொடி கம்பங்கள் வேடிக்கை பார்க்கும் நெ.சா.துறை
சாலை மீடியனில் கொடி கம்பங்கள் வேடிக்கை பார்க்கும் நெ.சா.துறை
சாலை மீடியனில் கொடி கம்பங்கள் வேடிக்கை பார்க்கும் நெ.சா.துறை
ADDED : ஜன 11, 2025 11:23 PM

உத்திரமேரூர்:உத்திரமேரூரில் இருந்து புக்கத்துறை வழியாக, செங்கல்பட்டு செல்லும் நெடுஞ்சாலை உள்ளது. இந்த நெடுஞ்சாலையை பயன்படுத்தி, 1,000-க்கும் மேற்பட்ட வாகனங்கள் செங்கல்பட்டு, தாம்பரம் ஆகிய பகுதிகளுக்கு தினமும் சென்று வருகின்றன.
இரு வழிச்சாலையாக இருந்த சாலை, கடந்த 2022ல், 54 கோடி ரூபாய் செலவில், நான்கு வழிச்சாலையாக விரிவாக்கம் செய்யப்பட்டது. அப்போது, சாலையின் நடுவே மீடியன் அமைக்கப்பட்டு, அதன் மீது அரளி செடிகள் நடப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றன.
தொடர்ந்து, உத்திரமேரூர் பகுதியில் உள்ள நெடுஞ்சாலை மீடியனில் கட்சி தலைவர்கள் வருகை, பொதுக்கூட்டம் ஆகியவற்றை முன்னிட்டு, அரசியல் கட்சியினர் கொடிகளை கட்டி வருகின்றனர்.
உத்திரமேரூர் பி.டி.ஓ., அலுவலகம் அருகே செல்லும் நெடுஞ்சாலை மீடியனில், நேற்று அரசியல் கட்சியினர், கட்சி கொடிகளை நட்டுள்ளனர். இதனால், அவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகளுக்கு கவனச்சிதறல் ஏற்பட்டு, விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.
மேலும், கொடி கட்டி வைக்கப்பட்டுள்ள இரும்பு குழாய்கள் காற்றின் வேகத்தில், வாகன ஓட்டிகளின் மீது சாய்ந்தும் வருகிறது. இருப்பினும், மீடியனில் கொடி நடுவது குறித்து, துறை அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் வேடிக்கை பார்த்து வருகின்றனர்.
எனவே, நெடுஞ்சாலை மீடியனில், கொடி நடுவோர் மீது மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.