/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
வல்லக்கோட்டையில் கந்த சஷ்டி திருக்கல்யாண உத்சவம் விமரிசை
/
வல்லக்கோட்டையில் கந்த சஷ்டி திருக்கல்யாண உத்சவம் விமரிசை
வல்லக்கோட்டையில் கந்த சஷ்டி திருக்கல்யாண உத்சவம் விமரிசை
வல்லக்கோட்டையில் கந்த சஷ்டி திருக்கல்யாண உத்சவம் விமரிசை
ADDED : அக் 28, 2025 11:51 PM

ஸ்ரீபெரும்புதுார்: கந்த சஷ்டி விழாவின் நிறைவு நாளான நேற்று, வல்லக்கோட்டை முருகன் கோவில், திருக்கல்யாண உத்சவ விழா வெகு விமரிசையாக நடைபெற்றது.
ஸ்ரீபெரும்புதுார் அருகே, வல்லக்கோட்டை முருகன் கோவிலில், ஆறு ஆண்டுகளுக்கு பின், கந்த சஷ்டி விழா கடந்த 22ம் தேதி வெகு விமரிசையாக துவங்கியது.
நாள்தோறும் மூலவருக்கு சிறப்பு மகா அபிஷேகமும், உற்சவர் ஆறுமுகப்பெருமானுக்கு அர்ச்சனை, விசேஷ யாகபூஜைகளும் நடைபெற்றன.
உற்சவர் வள்ளி தெய்வானை சமேத முருகன் வெவ்வேறு அலங்காரங்களில் நாள்தோறும் அருள்பாலித்தார்.
விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹார விழா நேற்று முன்தினம் மாலை நடந்தது. இதில், கஜமுகாசூரன், தாரகாசூரன், சூரபத்தமனை முகப்பெருமான் வதம் செய்தார்.
கந்த சஷ்டி விழாவின் இறுதி நாளான நேற்று, இந்திரனின் மகளாகிய தெய்வானை தேவியை கரம்பிடிக்கும் திருக்கல்யாண உத்சவம் நடந்தது.
கோவில் அர்ச்சகர் சந்திரசேகர குருக்கள் தலைமையில் மந்திரங்கள் ஓதிட, மங்கல வாத்தியங்கள் முழங்கிட, மாங்கல்யதாரணம் நடைபெற்றது.
ஏராளமான பக்தர்கள் பங்கேற்று, அரோகரா, அரோகரா கோஷமிட்டு முருகப்பெருமானை வணங்கினர். சஷ்டி விரதமிருந்த பக்தர்கள் முருகனை வணங்கி விரதத்தை நிறைவு செய்தனர்.
இரவு, உற்சவர் முருகன் கல்யாண கோலத்துடன், வீதியுலா சென்று அருள்பாலித்தார்.
விழா ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் செந்தில்குமார், அறங்காவலர் குழு தலைவர் செந்தில்தேவ்ராஜ், அறங்காவலர்கள் விஜயகுமார், கலைச்செல்வி கோபால், மோகன கிருஷ்ணன், செல்வ குமரன் செய்திருந்தனர்.

