/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
ஏகாம்பரநாதர் கோவிலில் இருந்த 16 சிலைகளால்... நீடிக்கும் மர்மம்!
/
ஏகாம்பரநாதர் கோவிலில் இருந்த 16 சிலைகளால்... நீடிக்கும் மர்மம்!
ஏகாம்பரநாதர் கோவிலில் இருந்த 16 சிலைகளால்... நீடிக்கும் மர்மம்!
ஏகாம்பரநாதர் கோவிலில் இருந்த 16 சிலைகளால்... நீடிக்கும் மர்மம்!
ADDED : டிச 31, 2024 01:49 AM

காஞ்சிபுரம், ஏகாம்பரநாதர் கோவிலில், எந்த ஆவணமும் இன்றி கண்டெடுக்கப்பட்ட 16 சிலைகள் பற்றி, சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து, மூன்று ஆண்டுகளான நிலையில், மந்தகதியில் விசாரணை நடப்பதாக பக்தர்கள் புகார் தெரிவிக்கின்றனர். மத்திய தொல்பொருள் ஆய்வுத் துறையும் ஆய்வு நடத்தாததால், சிலைகள் பற்றிய மர்மம் நீடிக்கிறது.
காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில், உற்சவர் சிலை செய்ததில் முறைகேடு வழக்கு, இரட்டை திருமாளிகை பிரச்னை, வெள்ளி பல்லக்கில் கிலோ கணக்கில் வெள்ளி மாயமானது என, பல்வேறு விவகாரங்கள், தொடர்ந்து பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
கடந்த 2020 அக்டோபரில், கோவிலில் நடந்த நகை சரிபார்ப்பு பணியின்போது, கோவிலின் நகை அறையில், உலோகத்திலான 16 சுவாமி சிலைகள் மற்றும் ஒரு திருவாச்சி இருந்தது தெரியவந்தது.
அதிகாரிகள் அதிர்ச்சி
இதனால், அதிர்ச்சியடைந்த கோவில் நிர்வாகிகள், அவற்றை வெளியே எடுத்து ஆய்வு செய்ததில், 16 சிலைகள் மற்றும் ஒரு திருவாச்சி குறித்து எந்த ஆவணமும் இல்லை என்பது தெரியவந்தது.
கோவிலின் நகை அறையில் எந்த ஆவணமும், குறிப்புகளும் இன்றி, 16 உலோக சிலைகள் இருந்தது, ஹிந்து அறநிலையத்துறை அதிகாரிகளுக்கே அதிர்ச்சியாக இருந்தது.
இதைத் தொடர்ந்து, சிலைகளை புகைப்படம் எடுத்து, சிலைகள் குறித்த விபரம் மற்றும் அறிக்கையை, ஹிந்து அறநிலையத்துறை ஆணையருக்கு, அப்போதைய கோவில் செயல் அலுவலர் அறிக்கை அனுப்பி இருந்தார்.
இந்த விவகாரம் வெளியே தெரிந்த பின், சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார், ஏகாம்பரநாதர் கோவிலில் ஆய்வுகள் நடத்தினர். ஆனால், இந்த சிலைகள் எங்கிருந்து வந்தது என்பன போன்ற எந்த விபரமும் இதுவரை தெரியவில்லை.
ஏகாம்பரநாதர் கோவில் நகை அறைக்குள் சிலைகள் வந்தது குறித்து, தீவிர விசாரணை நடத்தப்படவில்லை என, பக்தர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
இந்த விவகாரத்தில், சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் தீவிர விசாரணை நடத்தினால் மட்டுமே, 16 சிலைகளும், ஒரு திருவாச்சியும் எங்கிருந்து, யார் வாயிலாக ஏகாம்பரநாதர் கோவிலுக்குள் வந்தது என்பது குறித்து அறிந்து கொள்ள முடியும்.
மத்திய தொல்பொருள் ஆய்வுத் துறையும் ஆய்வு நடத்தவில்லை. இதற்கிடையே, வெங்கட்ராமன் என்பவர் அளித்த புகாரின்படி, 12 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். வழக்குப்பதிவு செய்து மூன்று ஆண்டுகளான நிலையில், 16 சிலைகள் குறித்த விசாரணைகள் தீவிரமடையாத நிலையில் உள்ளது.
105 சிலைகள்
கோவில் நிர்வாகம் அறநிலையத் துறைக்கு ஏற்கனவே அனுப்பிய அறிக்கையில் கூறியிருப்பதாவது:
கோவிலில், 16 உலோக சிலைகள் மற்றும் ஒரு திருவாச்சி ஆகியவை இருந்தன. தொழில்நுட்ப அலுவலர், நுண்ணறிவு தொழில்நுட்ப அலுவலர், அறநிலையத் துறை சரக ஆய்வாளர் ஆகியோர் முன்னிலையில் அளவீடு செய்யப்பட்டு, எடை போட்டு, புகைப்படம் எடுக்கப்பட்டுள்ளது.
இந்த சிலைகள் கோவில் நகை அறைக்குள் வந்தது குறித்து எந்த விபரமும் அறிய முடியவில்லை. இக்கோவிலில், நீண்டகாலமாக வழிபாட்டில் உள்ள 105 சிலைகள் மட்டுமே, தொல்பொருள் துறையில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
மத்திய தொல்பொருள் ஆய்வுத் துறைக்கு புகைப்படங்களை அனுப்பி, அவர்கள் ஆய்வு செய்து பதிவு செய்யவும் அனுமதிக்க வேண்டும். ஆய்வு மேற்கொள்ளும் வரை, கோவிலிலேயே சிலைகள் பாதுகாப்பாக வைத்திருக்க அனுமதிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.
இதுகுறித்து, சிலை கடத்தல் தடுப்பு பிரிவு எஸ்.பி., சிவகுமாரிடம் கேட்டபோது, “ஐ.ஜி.,யிடம் இதுபற்றி கேட்ட பிறகு தெரிவிக்கிறேன்,” என்றார்.
சிலைகள் பற்றி போலீசார் விசாரித்து வருகின்றனர். அதுபற்றி வேறு எதுவும் தெரிவிக்க இயலாது. போலீசார் கேட்கும் விபரங்களை நாங்கள் அளிக்கிறோம்.
முத்துலட்சுமி,
ஏகாம்பரநாதர் கோவில் செயல் அலுவலர்,
காஞ்சிபுரம்.