/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
காஞ்சியில் புது பஸ் நிலையத்திற்கு... ராசியில்லை! வழக்குக்கு மேல் வழக்கால் சிக்கல்
/
காஞ்சியில் புது பஸ் நிலையத்திற்கு... ராசியில்லை! வழக்குக்கு மேல் வழக்கால் சிக்கல்
காஞ்சியில் புது பஸ் நிலையத்திற்கு... ராசியில்லை! வழக்குக்கு மேல் வழக்கால் சிக்கல்
காஞ்சியில் புது பஸ் நிலையத்திற்கு... ராசியில்லை! வழக்குக்கு மேல் வழக்கால் சிக்கல்
ADDED : நவ 21, 2025 01:21 AM

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் பொன்னேரிக்கரையில், 35 கோடி ரூபாயில் புதிய பேருந்து நிலையம் அமைக்கும் திட்டம் அறிவிக்கப்பட்டு, எட்டு ஆண்டுகளாகியும் பணிகளை துவக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. திட்டத்திற்கான இடம் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து, தனியார் அறக்கட்டளை நிர்வாகம் ஏற்கனவே மூன்று வழக்குகள் தொடுத்துள்ள நிலையில், பேருந்து நிலையம் கட்டுவதற்காக இடத்தை வழங்காமல் மாநகராட்சி நிர்வாகம் இழுத்தடிப்பதாக, டெண்டர் எடுத்த தனியார் நிறுவனம், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.
காஞ்சிபுரம் நகரின் மையப் பகுதியில், 60 ஆண்டுகளுக்கு முன், 7 ஏக்கரில் அமைக்கப்பட்ட பேருந்து நிலையம், பயன்பாட்டில் உள்ளது. இங்கு, சராசரியாக ஒரு நாளைக்கு, 300 பேருந்துகள் வந்து செல்கின்றன.
நகரில் நிலவும் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணவும், மேற்கு மாவட்டங்களான கோவை, கிருஷ்ணகிரி போன்ற மாவட்டங்களுக்கு பேருந்துகளை இயக்க வதியாகவும், புதிய பேருந்து நிலையம் அமைக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது.
இடைக்கால தடை இதற்காக, 2017 முதல் கீழ்கதிர்பூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில், பேருந்து நிலையத்துக்கு இடம் தேர்வு செய்யப்பட்டாலும், நிலத்தை கையகபடுத்துவதில் சிக்கல் ஏற்பட்டது.
இந்நிலையில், அறக்கட்டளை பயன்பாட்டில் இருந்து மாநகராட்சியிடம் ஒப்படைக்கப்பட்ட, 19 ஏக்கர் அரசு இடத்தில், 11 ஏக்கர் இடம் பேருந்து நிலையத்திற்கு ஒதுக்கப்பட்டது.
அதைத் தொடர்ந்து, பேருந்து நிலையம் அமையும் இடத்தை, மாநகராட்சி நிர்வாகம் வேலி அமைத்து, தன் கட்டுப்பாட்டில் எடுக்க முயற்சி மேற்கொண்டது.
இதற்கிடையே, 'பேருந்து நிலையத்திற்கு ஒதுக்கப்பட்ட இடம் எங்களுக்கு சொந்தமானது. மாநகராட்சி இழப்பீடு தர வேண்டும்' என, தனியார் அறக்கட்டளை நிர்வாகம், சென்னை நீதிமன்றத்தை நாடியது. கடந்த ஜனவரியில், நிலத்தை எடுக்க இடைக்கால தடை விதித்து, நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனால், பேருந்து நிலையத்திற்கான நடவடிக்கைகள் இழுபறியாகி உள்ளது.
நீதிமன்ற உத்தரவு ஒருபுறம் இருக்க, கடந்த மே மாதம், பொன்னேரிக் கரையில், 35 கோடி ரூபாய் மதிப்பில், பேருந்து நிலையம் அமைக்க மாநகராட்சி நிர்வாகம் டெண்டர் கோரியது. குடியாத்தம் வி.எம்., கன்ஸ்ட்ரக் ஷன் என்ற நிறுவனத்திற்கு, ஜூலை 7ல் பணி ஆணை வழங்கப்பட்டது.
பணி ஆணை வழங்கப்பட்டும், பேருந்து நிலையம் அமையும் இடத்தை மாநகராட்சி நிர்வாகம் வழங்காததால், வி.எம்., கட்டுமான நிறுவனம், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.
பேருந்து நிலையத்திற்கான நில எடுப்பு பணிகளுக்கு எதிராக, தனியார் அறக்கட்டளை ஏற்கனவே மூன்று வழக்குகள் தொடர்ந்த நிலையில், நான்காவதாக டெண்டர் எடுத்த தனியார் நிறுவனம் வழக்கு தொடர்ந்திருப்பது மேலும் சிக்கலை ஏற்படுத்தி உள்ளது.
இதுகுறித்து, வருவாய் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
பேருந்து நிலையத்திற்கு தேர்வு செய்யப்பட்ட இடம் தொடர்பாக, தனியார் அறக்கட்டளை தொடர்ந்த மூன்று வழக்குகளில், சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. மூன்று வழக்குகளையும் ஒன்றாக சேர்த்து விசாரிக்க, செப்., 28ல், நீதிபதி சுந்தர் முன்பாக வழக்கு பட்டியலிடப்பட்டது.
இடப்பிரச்னை ஆனால், அவர் மணிப்பூர் உயர் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டார். அதனால், விசாரிக்க முடியாமல் போனது. வேறு நீதிபதி முன் வழக்கு விசாரணை வர உள்ளது.
இந்நிலையில் தான், பேருந்து நிலைய பணிக்கு டெண்டர் எடுத்த நிறுவனம், இடத்தை மாநகராட்சி ஒப்படைக்கவில்லை; விரைந்து ஒப்படைக்க உத்தரவிட வேண்டும் என, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளது.
டெண்டர் விதிகளின்படி, 2027 ஜூலை மாதத்திற்குள் பேருந்து நிலைய கட்டுமான பணிகளை முடிக்க வேண்டும் என்பதால், ஒப்பந்த நிறுவனம் நீதிமன்றத்தை நாடியுள்ளது. விரைவில் தீர்வு கிடைக்கும் என நம்புகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.

