/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
கழிவுநீர் குட்டையாக மாறிய குளம் வல்லக்கோட்டை ஊராட்சி மெத்தனம்
/
கழிவுநீர் குட்டையாக மாறிய குளம் வல்லக்கோட்டை ஊராட்சி மெத்தனம்
கழிவுநீர் குட்டையாக மாறிய குளம் வல்லக்கோட்டை ஊராட்சி மெத்தனம்
கழிவுநீர் குட்டையாக மாறிய குளம் வல்லக்கோட்டை ஊராட்சி மெத்தனம்
ADDED : பிப் 05, 2025 12:07 AM

ஸ்ரீபெரும்புதுார்:ஸ்ரீபெரும்புதுார் ஒன்றியம் வல்லக்கோட்டை ஊராட்சியில் கங்கை அம்மன் கோவில் அருகே, ஊராட்சிக்கு சொந்தமான குளம் உள்ளது. இக்குளம், 20 ஆண்டுகளுக்கு முன், அப்பகுதிவாசிகளின் முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்கியது.
முக்கிய விழா நாட்களின் போது, இந்த குளத்தில் இருந்து தண்ணீர் எடுத்து சென்று, பெண்கள் பொங்கல் வைத்து வழிபடுவது வழக்கம். நாளடைவில் குளம் பராமரிப்பு இல்லாமல் போனது. தற்போது, குப்பை கொட்டும் இடமாக மாறியுள்ளது.
குளக்கரையில் மது அருந்தும் 'குடி'மகன்கள் காலி மதுபாட்டில், பிளாஸ்டிக் பாட்டில்களை குளத்தில் வீசி செல்வதால், குளம் முழுதும் பிளாஸ்டிக் குப்பை நிறைந்து காணப்படுகிறது.
அதேபோல், அருகே உள்ள வீடு, கடை, தனியார் திருமண மண்டபத்தில் இருந்து வெளியேறும் கழிவுநீர், நெடுஞ்சாலையோரம் உள்ள மழைநீர் கால்வாய் வழியாக, நேரடியாக குளத்தில் கலக்க விடுகின்றனர். இதனால், தண்ணீர் மாசடைந்து துர்நாற்றம் வீசுவதுடன், எவ்வித பயன்பாட்டிற்கும் உபயோகிக்க முடியாத நிலை உள்ளது.
எனவே, பல ஆண்டுகளாக மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்து வந்த குளத்தை சீரமைத்து, கழிவுநீர் கலப்பதை தடுத்து, துார்வாரி வேலி அமைக்க, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.