ADDED : செப் 01, 2025 02:01 AM

வாலாஜாபாத்:வாலாஜாபாத், சேர்க்காடு பகுதியில் மறு நடவு செய்த ஆலமரம் நன்கு வளர்ந்துள்ளது.
வாலாஜாபாத் ஒன்றியம், புத்தகரம் கிராமத்தில், இரண்டு ஆண்டுகளுக்கு முன், தனியார் நிலம் வீட்டு மனை பிரிவுகளாக்கப்பட்டன. அப்போது அங்கிருந்த ஆலமரம் ஒன்றை அகற்ற வேண்டி இருந்தது.
இத்தகவலை அறிந்த விதைகள் தன்னார்வ அமைப்பினர் அந்த மரத்தை மறுநடவு செய்ய திட்டமிட்டனர்.
அதன்படி, மரத்தின் கிளைகளை அகற்றி, ஜே.சி.பி., இயந்திர உதவியோடு ஆலமரத்தை வேரோடு எடுத்து, 2023, ஆகஸ்ட் 28ம் தேதி, வாலாஜாபாத் பேரூராட்சி, சேர்க்காடு கிராமத்திற்கு கொண்டு வந்து மயானம் அருகே பொது இடத்தில் மறுநடவு செய்யப்பட்டது.
ஆலமரம் மறுநடவு செய்து, இரண்டு ஆண்டுகள் நிறைவு பெற்ற நிலையில் அம்மரம் புது கிளைகள் மற்றும் அடர்த்தியாக இலைகள் துளிர்விட்டு பசுமையாக காட்சி அளிக்கிறது.
சாலை விரிவாக்கம் உள்ளிட்ட பல காரணங்களுக்காக அழிக்கப்படும் அரசன், புங்கன் மற்றும் ஆலமரங்களை இவ்வாறு மறு நடவு செய்து பசுமை ஏற்படுத்தும் முயற்சியை தாங்கள் தொடர்ந்து மேற்கொண்டு வருவதாக, விதைகள் தன்னார்வ அமைப்பைச் சேர்ந்த சரண் கூறியுள்ளார்.