ADDED : ஜூன் 22, 2025 08:37 PM
பரந்துார்:பரந்துாரில் காஸ் சிலிண்டர்களை தொடர்ந்து, டிராக்டர் பேட்டரிகள் திருடி செல்வது, அரங்கேறி வருகிறது.
காஞ்சிபுரம் அடுத்த, பரந்துார் ஊராட்சியில், பள்ள பரந்துார், மேட்டு பரந்துார், நாகப்பட்டு ஆகிய துணை கிராமங்கள் உள்ளன. இந்த பகுதி மக்கள், விவசாயம் மற்றும் அதை சார்ந்த தொழில்கள் தான் பிரதானமாக செய்து வருகின்றனர்.
சில மாதங்களுக்கு முன், வீடுகளில் இருக்கும் கூடுதல் காஸ் சிலிண்டர்கள் மர்ம நபர்கள் திருடிச் சென்று வந்தனர். சில நாட்களாக விவசாயிகளின் வீடுகள் மற்றும் கிராமங்களில் சாலையோரம் நிறுத்தப்படும் டிராக்டர் வாகனங்களில் இருக்கும், பேட்டரிகளை மர்ம நபர்கள் திருடி சென்று வருகின்றனர்.
குறிப்பாக, நேற்று முன் தினம் இரவு விவசாயிகளின் டிராக்டர்களில் இருந்து, இரண்டு பேட்டரிகளை மர்ம நபர்கள் திருடிச் சென்று உள்ளனர்.
இதுகுறித்து, பொன்னேரிக்கரை போலீசாரிடம் விவசாயிகள் புகார் அளித்துள்ளனர்.