/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
காஞ்சிபுரம் தொகுதியில் தி.மு.க.,வினர் இடையே... சலசலப்பு!அ.தி.மு.க.,விலும் மாற்றத்தை எதிர்பார்க்கும் கட்சியினர்
/
காஞ்சிபுரம் தொகுதியில் தி.மு.க.,வினர் இடையே... சலசலப்பு!அ.தி.மு.க.,விலும் மாற்றத்தை எதிர்பார்க்கும் கட்சியினர்
காஞ்சிபுரம் தொகுதியில் தி.மு.க.,வினர் இடையே... சலசலப்பு!அ.தி.மு.க.,விலும் மாற்றத்தை எதிர்பார்க்கும் கட்சியினர்
காஞ்சிபுரம் தொகுதியில் தி.மு.க.,வினர் இடையே... சலசலப்பு!அ.தி.மு.க.,விலும் மாற்றத்தை எதிர்பார்க்கும் கட்சியினர்
ADDED : டிச 15, 2025 04:05 AM

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் சட்டசபை தொகுதியில் தி.மு.க.,வில் மாற்று சமூகத்தைச் சேர்ந்த நிர்வாகிக்கு இம்முறை 'சீட்' வழங்க வேண்டும் எனவும், அ.தி.மு.க.,வில் காஞ்சிபுரத்தை கூட்டணி கட்சிக்கு விட்டு கொடுக்கக்கூடாது எனவும் கருத்துக்கள் நிலவுவதால், இப்போதே இரு திராவிட கட்சிகளிலும் சலசலப்பு எழுந்துள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் நான்கு சட்டசபை தொகுதிகள் உள்ளன. இதில், மாவட்டத்தின் தலைநகரான காஞ்சிபுரம் தொகுதியில் போட்டியிட தி.மு.க., - அ.தி.மு.க., - பா.ம.க., என, மூன்று கட்சிகளைச் சேர்ந்தோர் அதிகம் ஆர்வம் காட்டுவர்.
அந்த வகையில், வரக்கூடிய சட்டசபை தேர்தலுக்காக, அ.தி.மு.க., - தி.மு.க., என இரு கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகள், தங்களை முன்னிலைப்படுத்தி, கட்சி மேலிடத்திடம் 'சீட்' வாங்க திட்டமிட்டு வருகின்றனர்.
தி.மு.க.,வை பொறுத்தவரையில், காஞ்சிபுரம் தொகுதியில், இரண்டு முறை தொடர்ந்து வெற்றி பெற்றுள்ள நிலையில், மூன்றாவது முறையாக ஹாட்ரிக் வெற்றி பெற வேண்டும் என நினைக்கின்றனர்.
வாய்ப்பில்லை
இதனால், தி.மு.க.,வில் கூட்டணி கட்சியினருக்கு காஞ்சிபுரம் தொகுதி வழங்க வாய்ப்பில்லை என கட்சியினர் தெரிவிக்கின்றனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கட்சிக்குள் பலர் போர்கொடி துாக்கி வருகின்றனர்.
இதுகுறித்து, காஞ்சி புரம் தி.மு.க.,வினர் கூறியதாவது:
முன்னதாக நடந்த சட்டசபை தேர்தல்களில், தி.மு.க., கூட்டணியில், பா.ம.க., சார்பில் போட்டியிட்ட கமலாம்பாள், உலகரட்சகன் ஆகியோரும், தி.மு.க., சார்பில் போட்டியிட்ட எழிலரசன் என அனைவரும், வன்னியர் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள். இதனால், இம்முறை மாற்று சமூகத்தைச் சேர்ந்த நிர்வாகிக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும்.
இந்த தொகுதியில் 3 லட்சம் வாக்காளர்களில், பட்டியலினத்தவர்கள், வன்னியர், முதலியார் ஆகிய சமூகத்தினர் என 2 லட்சம் பேர் உள்ளனர். மீதமுள்ள 1 லட்சம் பேர் மற்ற சமூகத்தைச் சேர்ந்தவர்கள்.
மாற்று சமூகத்தைச் சேர்ந்தோர், தங்களுக்கான ஒரு பிரதிநிதியை கட்சி வேட்பாளராக கொண்டு வர வேண்டும் என நினைப்பதால், மாவட்ட செயலர் சுந்தர் வாயிலாக, சீட் பெற முயற்சிக்கின்றனர்.
மாற்றம் வேண்டும்
தவிர, காஞ்சிபுரம் தொகுதியில் நகர்ப்புறம் 50 சதவீதமும் கிராமப்புறம் 50 சதவீதமும் உள்ளது. நகர்ப்புறத்தில் முதலியார் சமுதாயமும், கிராமப்புறத்தில் பட்டியலினத்தவர்களும், வன்னியர்களும் அதிகளவில் உள்ளனர். தொகுதியில் வெற்றி பெற இந்த மூன்று சமுதாய ஓட்டுகளும் மிக முக்கியமானதாக உள்ளது.
தொடர்ந்து, வன்னியர் சமூகத்தைச் சேர்ந்த நிர்வாகிகளுக்கே சீட் வழங்கப்பட்டதால், யாதவர், முதலியார், பட்டியலினத்தவர் உள்ளிட்ட நிர்வாகிகள் கேள்வி எழுப்புகின்றனர். கட்சி மேலிடம் தங்களை புறக்கணிப்பதாக நினைக்கின்றனர்.
தி.மு.க., மற்றும் அதன் கூட்டணி கட்சியினர் என, 20 ஆண்டுகளாகவே, வன்னியர் சமுதாயத்தைச் சேர்ந்தவர்களுக்கே சீட் வழங்கப்படுவதால், இம்முறை மாற்றம் வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
கூட்டணி கட்சிக்கு காஞ்சியை
கொடுக்க விரும்பாத அ.தி.மு.க.,
காஞ்சிபுரம் தொகுதியில், 2016ல், அ.தி.மு.க., சார்பில் போட்டியிட்ட, அ.தி.மு.க., அமைப்பு செயலர் மைதிலி, கட்சி நிர்வாகிகளின் ஒத்துழைப்பு இல்லாததால் தோற்கடிக்கப்பட்டார்.
அதையடுத்து, 2021ல், காஞ்சிபுரம் தொகுதி, அ.தி.மு.க., கூட்டணி கட்சியான பா.ம.க.,விற்கு வழங்கப்பட்டது. அக்கட்சி சார்பில் மாவட்ட செயலர் மகேஷ் போட்டியிட்டு, தோல்வியடைந்தார். இதனால், இரண்டாவது முறையாக, எழிலரசன் வெற்றி பெற முடிந்தது.
இரண்டு முறை தி.மு.க.,விடம் காஞ்சிபுரத்தை இழந்த காரணத்தால், இம்முறை வெற்றி பெற்றே ஆக வேண்டும் என, அ.தி.மு.க.,வினர் நினைக்கின்றனர். இதனால், மாவட்ட செயலர் சோமசுந்தரம், காஞ்சிபுரம் தொகுதியில் போட்டியிட வேண்டும் என்கின்றனர். ஆனால் அவர், உத்திரமேரூர் தொகுதியில் போட்டியிட திட்டமிடுவதாக, அ.தி.மு.க.,வில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. மாவட்ட செயலர் சோமசுந்தரம், உத்திரமேரூர் தொகுதியில் போட்டியிட்டால், காஞ்சிபுரம் தொகுதி கூட்டணி கட்சிக்கு வழங்க வேண்டிய நிலை வரும் எனவும், அ.தி.மு.க.,வினர் புலம்புகின்றனர்.
காஞ்சிபுரம் தொகுதியை கூட்டணி கட்சிக்கு வழங்கினால், தி.மு.க., வெற்றி பெறும் சூழல் உருவாகும் என்பதால், கூட்டணி கட்சிக்கு காஞ்சிபுரத்தை வழங்க அ.தி.மு.க.,வினர் விரும்பவில்லை. இன்று விருப்ப மனு பெறும் நிலையில் எந்த நிர்வாகி எந்த தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவிக்கிறார் என்பது தெரியவரும்.

