/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
கத்தரி, மிளகாய் நாற்று உற்பத்தி இல்லை ஆடி பட்டத்திற்கு பயிரிட முடியாத நிலை
/
கத்தரி, மிளகாய் நாற்று உற்பத்தி இல்லை ஆடி பட்டத்திற்கு பயிரிட முடியாத நிலை
கத்தரி, மிளகாய் நாற்று உற்பத்தி இல்லை ஆடி பட்டத்திற்கு பயிரிட முடியாத நிலை
கத்தரி, மிளகாய் நாற்று உற்பத்தி இல்லை ஆடி பட்டத்திற்கு பயிரிட முடியாத நிலை
ADDED : ஆக 07, 2025 01:46 AM
காஞ்சிபுரம்:தோட்டக்கலை பண்ணைகளில், கத்தரி, மிளகாய் நாற்று உற்பத்தி செய்து விவசாயிகளுக்கு வழங்கவில்லை என, குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
காஞ்சிபுரம் மேல்கதிர்பூர், மேல் ஒட்டிவாக்கம், விச்சந்தாங்கல், பிச்சிவாக்கம் ஆகிய நான்கு அரசு தோட்டக்கலை பண்ணைகள் மற்றும் பிச்சிவாக்கம் தென்னை உற்பத்தி செய்யும் நாற்றங்கால் பண்ணை இயங்கி வருகின்றன.
ஒவ்வொரு பண்ணைக்கும், தலா ஒரு தோட்டக்கலை அலுவலர், தலா ஒரு உதவி தோட்டக்கலை அலுவலர்கள் என, 10 பணியிடங்கள் உள்ளன. இதுதவிர, தினக்கூலி அடிப்படையில் தோட்டம் பராமரிப்பாளர்கள் உள்ளனர்.
கடந்த ஆண்டு வரையில் பெரும்பாலான தோட்டக்கலை பண்ணைகளில், மிளகாய், கத்தரிக்காய் உள்ளிட்ட பல்வேறு நாற்று உற்பத்தி செய்து வந்தனர். இதுதவிர, கொய்யா, தென்னை உள்ளிட்ட கன்றுகள் உற்பத்தி செய்து விவசாயிகள் மற்றும் மக்களுக்கு விற்பனை செய்து வந்தனர்.
நடப்பாண்டு முதல் கத்தரி, மிளகாய் உள்ளிட்ட நாற்றுகளை தனியார் நிறுவனத்தின் மூலமாக கொள்முதல் செய்து விவசாயிகளுக்கு வழங்கி வருவதாகவும் தரமில்லாத செடிகளுக்கு வாய்ப்பு அதிகம் இருப்பதாகவும் விவசாயிகள் இடையே குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதுகுறித்து, வாலாஜாபாத் வட்டாரத்தைச் சேர்ந்த விவசாயி ஒருவர் கூறியதாவது:
தோட்டக்கலை துறையில், ஆடி பட்டத்தில் தோட்டக்கலை பயிர்கள் பயிரிடுவதற்கு காய்கறி விதைகள் கேட்டால் விதைகள் வரவில்லை. கத்தரி, மிளகாய் நாற்றுகள் கேட்டால் உற்பத்தி செய்யவில்லை. அரசு திட்டம் வந்த பின் கூறுகிறோம் என்கின்றனர்.
தனியார் விதை கடைகளில் விதைகளை வாங்கி சாகுபடி செய்ய வேண்டிய சூழ்நிலை உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
தோட்டக்கலை துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
வெண்டை, கீரை, தக்காளி உள்ளிட்ட ஆறு வகையான விதை தொகுப்பு வழங்கி வருகிறோம். இதுதவிர, கொய்யா, எலுமிச்சை, பப்பாளி ஆகிய பழத்தொகுப்பு வழங்கி வருகிறோம்.
தேவைப்படுவோர், உழவன் செயலியில் பதிவு செய்து பயன் பெறலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.