தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/காஞ்சிபுரம், செங்கை போலீஸ் எல்லை குழப்பத்துக்கு கிடைத்தது தீர்வு!தெளிவாக பிரித்து அரசாணை வெளியிட்டது அரசு

காஞ்சிபுரம், செங்கை போலீஸ் எல்லை குழப்பத்துக்கு கிடைத்தது தீர்வு!தெளிவாக பிரித்து அரசாணை வெளியிட்டது அரசு

காஞ்சிபுரம், செங்கை போலீஸ் எல்லை குழப்பத்துக்கு கிடைத்தது தீர்வு!தெளிவாக பிரித்து அரசாணை வெளியிட்டது அரசு


UPDATED : செப் 21, 2026 08:51 PM

ADDED : செப் 21, 2026 07:42 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 21, 2026 08:51 PM ADDED : செப் 21, 2026 07:42 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்கள் பிரிக்கப்பட்டபோது ஏற்பட்ட போலீஸ் எல்லை குழப்பத்தால், ஆறு ஆண்டுகளாக அவதிப்பட்டு வந்த, 14 கிராம மக்களுக்கு தீர்வு கிடைத்துள்ளது. இந்த கிராமங்களை மதுராந்தகம், மேல்மருவத்துார் காவல் நிலையங்களுடன் இணைத்து, தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருந்து செங்கல்பட்டு மாவட்டம், 2019ல் பிரிக்கப்பட்டது. அப்போது, நிர்வாக ரீதியாக செங்கல்பட்டு மாவட்டத்தில் அமைந்துள்ள சில கிராமங்கள், காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள உத்திரமேரூர் காவல் நிலைய எல்லையில் தொடர்ந்தது.

இதனால், செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த அந்த கிராம மக்கள், தங்கள் பகுதிகளில் ஏற்படும் பிரச்னைகள் தொடர்பாக புகார் அளிக்கவும், கோவில் திருவிழாக்கள் உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கு போலீஸ் பாதுகாப்பு கோரவும், உத்திரமேரூர் காவல் நிலையத்துக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது.

சில கிராமங்களில் இருந்து உத்திரமேரூர் காவல் நிலையம், 20 கி.மீ., தொலைவில் இருப்பதால், பொதுமக்கள் தேவையின்றி அலைக்கழிக்கப்பட்டு வருவதாக, கிராம மக்கள் தொடர்ந்து புகார் தெரிவித்து வந்தனர்.

போலீஸ் நிலையத்துக்கு சென்று வருவதற்கான கூடுதல் செலவு, நேர விரயம் என, பல்வேறு சிரமங்களை சந்தித்தனர்.

தேர்தல் சமயத்திலும், செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள இந்த கிராமங்களுக்கு, உத்திரமேரூர் போலீசார் பாதுகாப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டியிருந்தது.

மாவட்ட எல்லைகள் மாற்றப்பட்டு ஆறு ஆண்டுகளாகியும், போலீஸ் எல்லைகள் வரன்முறை செய்யப்படாமல் இருந்ததால், கிராம மக்களின் சிரமம் நீடித்து வந்தது.

இதுகுறித்து, போலீஸ் உயரதிகாரிகள் தரப்பிலும், அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டு, உரிய காவல் நிலையங்களுடன் கிராமங்களை இணைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அறிக்கைகள் அனுப்பினர்.

இருப்பினும், போலீஸ் எல்லைகளை மாற்றுவதற்கான நடவடிக்கைகள் நீண்ட காலமாக இழுபறியில் இருந்து வந்தன.

இந்நிலையில், இந்த குழப்பத்துக்கு தற்போது முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த 14 கிராமங்களை, அங்குள்ள மதுராந்தகம் மற்றும் மேல்மருவத்துார் காவல் நிலையங்களுடன் இணைத்து, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கான அரசாணையும் வெளியிடப்பட்டு உள்ளது.

அதன்படி, மேல்மருவத்துார் காவல் நிலைய எல்லையில் எல்.எண்டத்துார், லாடக்கரணை, பாரதிநகர், கடம்பூர், ஆலப்பாக்கம், நெல்லி ஆகிய ஆறு கிராமங்கள் இணைக்கப்பட்டு உள்ளன.

மதுராந்தகம் காவல் நிலைய எல்லையில் தீடாளம், பெரும்பாக்கம், வைப்பணை, வைப்பணைபுதுார், பாப்பநல்லுார், திருவேங்கடபுரம், கோழியாளம், பாம்பயம்பட்டு ஆகிய எட்டு கிராமங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.

இதன் மூலம், 14 கிராமங்கள் நிர்வாக ரீதியாக ஒரு மாவட்டத்திலும், போலீஸ் நிர்வாக ரீதியாக வேறு மாவட்டத்தில், தொலைதுாரத்தில் உள்ள காவல் நிலையத்துடனும் இணைக்கப்பட்டு, மக்கள் அழைக்கப்பட்டு வந்த நிலை மாறியுள்ளது.

ஆறு ஆண்டுகளாக நீடித்த போலீஸ் எல்லை குழப்பத்துக்கு அரசு தற்போது தீர்வு கண்டுள்ளதால், 14 கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் இனி தங்கள் பகுதியை ஒட்டிய காவல் நிலையங்களில் புகார் அளிக்கவும், போலீஸ் பாதுகாப்பு உள்ளிட்ட சேவைகளை எளிதாக பெறவும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us