/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
கூட்டுறவு சங்கங்களின் வருவாயை பெருக்க...புதிய முயற்சி:சிறு மண்டபங்கள் திறப்பு திட்டம் விரிவாக்கம்
/
கூட்டுறவு சங்கங்களின் வருவாயை பெருக்க...புதிய முயற்சி:சிறு மண்டபங்கள் திறப்பு திட்டம் விரிவாக்கம்
கூட்டுறவு சங்கங்களின் வருவாயை பெருக்க...புதிய முயற்சி:சிறு மண்டபங்கள் திறப்பு திட்டம் விரிவாக்கம்
கூட்டுறவு சங்கங்களின் வருவாயை பெருக்க...புதிய முயற்சி:சிறு மண்டபங்கள் திறப்பு திட்டம் விரிவாக்கம்
ADDED : ஜூலை 20, 2025 11:15 PM

காஞ்சிபுரம்:நிதி நெருக்கடியில் கூட்டுறவு சங்கங்கள் சிக்கித் திணறுவதை தடுக்கவும், அவற்றின் வருவாயை பெருக்கவும், 'மினி பார்ட்டி ஹால்' என்ற சிறு மண்டபங்கள் கட்டி வாடகைக்கு விடும் புதிய முயற்சியில் கூட்டுறவுத் துறை ஈடுபட்டுள்ளது. வில்லிவலம் கிராமத்தில் கிடைத்த வரவேற்பை அடுத்து, காஞ்சிபுரம் மாவட்டம் முழுதும் சிறு மண்டபங்கள் திட்டம் விரிவாக்கப்படுகிறது.
காஞ்சிபுரம் மண்டல கூட்டுறவு இணைப்பதிவாளர் அலுவலக கட்டுப்பாட்டில், காஞ்சிபுரம் மத்திய கூட்டுறவு வங்கி, 52 காஞ்சிபுரம் மத்திய கூட்டுறவு வங்கி கிளைகள், 53 தொடக்க வேளாண் கடன் சங்கங்கள், ஏழு நகர கூட்டுறவு கடன் சங்கம், மூன்று ஊரக வளர்ச்சி கடன் சங்கம், இரண்டு நகர கூட்டுறவு வங்கி, 23 பணியாளர்கள் கூட்டுறவு கடன் சங்கங்கள் என, 141 கடன் சங்கங்கள் இயங்கி வருகின்றன.
இந்த கடன் சங்கங்களின் மூலமாக, காஞ்சிபுரம், வாலாஜாபாத், குன்றத்துார், ஸ்ரீபெரும்புதுார், உத்திரமேரூர் ஆகிய ஐந்து ஒன்றியங்களைச் சேர்ந்த விவசாயிகள், மகளிர் குழுவினர், தனி நபர் ஆகியோருக்கு வங்கி கடன் வழங்கப்படுகிறது.
சீரழிந்த நிலை
இதுதவிர, பணியாளர்கள் கூட்டுறவு கடன் சங்கங்களிலும் கடனுதவிகள் வழங்கப்படுகின்றன.
இதில், 53 தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களின் மூலமாக, நெல், உளுந்து உள்ளிட்ட பயிர்கள் சாகுபடி செய்யும் விவசாயிகளின் விளைப்பொருட்களை விற்பனை செய்யும் நேரத்தில், விலை சரிவு ஏற்பட்டால் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்களில் அடமான கடன் வசதி மூலமாக விளைப்பொருட்களை இருப்பு வைக்க கிடங்கு வசதிகளும் ஏற்படுத்தி கொடுக்கப்பட்டுள்ளன.
அதன்படி, 53 தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களுக்கு, 49 கிடங்குகள் உள்ளன. ஒவ்வொரு கிடங்குகளிலும், தலா 100 டன் விளைப்பொருட்களை இருப்பு வைக்கும் அளவிற்கு இடவசதி உள்ளது.
இருப்பினும், அரசு நேரடி கொள்முதல் நிலையங்களின் வருகைக்கு பின், பெரும்பாலான தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களின் கிடங்குகளில், விவசாயிகள் விளைப்பொருட்களை இருப்பு வைப்பது அறவே குறைந்து விட்டது.
இதை முறையாக பராமரிக்க வேண்டி கூட்டுறவு துறையினரும் பராமரிக்காததால், பெரும்பாலான கிடங்குகள் சீரழிந்த நிலையில் காணப்படுகிறது. இதனால், கூட்டுறவு சங்கங்கள் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளன.
இதை கருத்தில் கொண்டு, தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களில், வருவாயை பெருக்கும் வகையில், கிராமப்புறங்களில் சிறு மண்டபங்கள் கட்டுவதற்கு, கூட்டுறவு துறை மாற்று திட்டத்தை செயல்படுத்தி வருகின்றனர்.
அதன்படி, காஞ்சிபுரம் மாவட்டம் முத்தியால்பேட்டை தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கத்தில், வில்லிவலம் கிராமத்தில், சிறு மண்டபம் கட்டி பொது மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
இந்த சிறு மண்டபம் சிறிய அளவிலான நிகழ்ச்சிகளை நடத்துவதற்கு சவுகரியமாக கூடம், தனித்தனி அறைகள் மட்டுமே உள்ளன.
இருப்பினும், சமையல் அறை, உணவு பரிமாறும் அறை என, இரு வசதிகளை ஏற்படுத்தினால் கிராமப்புற மக்களுக்கு அதிகளவு பயனுள்ளதாக இருக்கும் என, கிராம மக்கள் தெரிவித்தனர்.
இதுகுறித்து, காஞ்சிபுரம் மண்டல கூட்டுறவு இணைப் பதிவாளர் ஜெயஸ்ரீ கூறியதாவது:
தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள் தோறும் சிறு மண்டபங்கள் கட்டும் திட்டத்தை செயல்படுத்தி வருகிறோம்.
நடவடிக்கை
ஒவ்வொரு கட்டடத்திற்கு, 30 லட்ச ரூபாய் முதல், 50 லட்ச ரூபாய் வரையில் கட்டடம் கட்டி வருகிறோம். கடந்த நிதி ஆண்டில் முத்தியால்பேட்டை தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கத்தின் கட்டுப்பாட்டில் வில்லிவலம் கிராமத்தில் கட்டி முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வந்துள்ளோம்.
ஒரு நிகழ்ச்சி நடத்துவதற்கு, 5,000 ரூபாய் கட்டணமாக வசூலித்து வருகிறோம். இது, தனியார் திருமண மண்டபங்களை காட்டிலும் கட்டணம் குறைவாக தான் உள்ளது.
நடப்பாண்டு மதுரமங்கலம், திருமுடிவாக்கம் ஆகிய பகுதிகளில் கட்டடம் கட்டும் பணி துவக்கப்பட்டுள்ளது.
அதேபோல, தேவை இருக்கும் கூட்டுறவு கடன் சங்கங்கள் திட்ட மதிப்பீடு தயாரித்து கொடுத்தால் ஒதுக்கீடு கிடைக்கும் நிதிக்கு ஏற்ப சிறு மண்டபம் கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.