/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
2,303 சேதமடைந்த வீடுகளை சீரமைக்க...அனுமதி!: ரூ.14 கோடி ஒதுக்கியது ஊரக வளர்ச்சி துறை
/
2,303 சேதமடைந்த வீடுகளை சீரமைக்க...அனுமதி!: ரூ.14 கோடி ஒதுக்கியது ஊரக வளர்ச்சி துறை
2,303 சேதமடைந்த வீடுகளை சீரமைக்க...அனுமதி!: ரூ.14 கோடி ஒதுக்கியது ஊரக வளர்ச்சி துறை
2,303 சேதமடைந்த வீடுகளை சீரமைக்க...அனுமதி!: ரூ.14 கோடி ஒதுக்கியது ஊரக வளர்ச்சி துறை
ADDED : ஆக 25, 2024 01:04 AM

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாவட்டத்தில், 2,303 சேதமடைந்த வீடுகளை சீரமைக்க, ஊரக வளர்ச்சித்துறை நிர்வாக அனுமதி அளித்து, 14 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து உள்ளது. தனிநபர், ஒப்பந்ததாரர்கள் வாயிலாக சீரமைப்பு பணிகளை நிறைவேற்றிக் கொள்ள அறிவுரை வழங்கப்பட்டு உள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில், காஞ்சிபுரம், வாலாஜாபாத், குன்றத்துார், உத்திரமேரூர், ஸ்ரீபெரும்புதுார் ஆகிய வட்டார வளர்ச்சி அலுவலகங்களின் கட்டுப்பாட்டில், 274 ஊராட்சிகள் உள்ளன. இந்த ஊராட்சிகளில், 2000 - 01ம் நிதி ஆண்டிற்கு முன், ஓட்டு வீடுகள் மற்றும் சாய்தள கான்கிரீட் வீடுகள் கட்டி கொடுத்துள்ளனர்.
அரசு திட்டத்தில் கட்டிக் கொடுத்த பெரும்பாலான வீடுகள், சுவர் விரிசல், கூரை என, பல்வேறு நிலைகளில் சேதம் ஏற்பட்டுள்ளன. இதை, அரசு சீரமைத்துத்தர வேண்டும் என, வீடு கட்டி பயன் அடைந்த பயனாளிகள் இடையே கோரிக்கை எழுந்தது.
ஊரக குடியிருப்பு திட்டத்தின் கீழ், பழுது நீக்குவதற்கு சேதமடைந்த வீடுகளை கணக்கெடுக்கும் பணியை, கடந்த ஆண்டு ஊரக வளர்ச்சித் துறையினர் துவக்கினர்.
நிதி ஒதுக்கீடு
காஞ்சிபுரம் மாவட்டத்தில், 1,950 வீடுகள் சீரமைக்க வேண்டும். இந்த கணக்கெடுப்பின்போது விடுபட்ட 353 வீடுகள் என, மொத்தம் 2,303 வீடுகளை சீரமைக்க பயனாளிகளை தேர்வு செய்துள்ளனர்.
லேசான சேதம், அதிக சேதம் என, இரு விதமான சேதங்களுக்கு ஏற்ப, அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.
உதாரணமாக, லேசான சேதத்திற்கு, 32,000 - 55,000 ரூபாய் வரையும். அதிக சேதத்திற்கு, 70,000 - 1 லட்சத்து 50,000 ரூபாய் வரையில், நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.
அதன்படி, காஞ்சிபுரம் ஒன்றியத்தில், 263 வீடுகள். வாலாஜாபாத் ஒன்றியத்தில், 448 வீடுகள். ஸ்ரீபெரும்புதுார் ஒன்றியத்தில், 474 வீடுகள். குன்றத்துார் ஒன்றியத்தில், 532 வீடுகள். உத்திரமேரூர் ஒன்றியத்தில், 586 வீடுகள் மொத்தம், 2,303 வீடுகள் சேதமடைந்துள்ளன.
குறிப்பாக, ஓட்டு வீடுகளில், 22 சிறு சேதம் மற்றும் 163 அதிக சேதம் என, 185 வீடுகள் சேதம் ஏற்பட்டுள்ளன.
அதேபோல், சாய்தள வீடுகளில், 772 வீடுகள் லேசான சேதம் மற்றும், 1,346 வீடுகள் அதிக சேதம் என, மொத்தம் 2,303 வீடுகள் சேதம் ஏற்பட்டுஉள்ளன. இந்த வீடுகளை சீரமைக்க, 14 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து நிர்வாக அனுமதி அளித்துள்ளது.
இந்த பணிகளை, அந்தந்த பயனாளிகளே செய்து கொள்ளலாம். பின், பணி நிறைவு பெற்ற புகைப்படம், பயனாளிகளின் வங்கி கணக்கு எண் ஆகியவற்றை சமர்ப்பித்தால், அவர்களுடைய வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும்.
பயனாளிகள் எடுத்து செய்ய முடியாதவர்களுக்கு உதவுவோர் என அழைக்கப்படும் ஒப்பந்ததாரர்கள் வாயிலாக செய்து கொள்ளலாம்.
பின், பயனாளிகளின் கையொப்பத்துடன், ஒப்பந்ததாரர் கணக்குகளை சமர்ப்பிக்க வேண்டும் என, வழிகாட்டியில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதன் வாயிலாக, நீண்ட காலமாக சேதம் ஏற்பட்டிருக்கும் வீடுகளுக்கு விமோசனம் கிடைக்கும் என, பயனாளிகள் இடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதுகுறித்து, பயனாளி ஒருவர் கூறுகையில், 'மழைக்காலத்தில் மேற்கூரை சேதத்தில் தண்ணீர் கசிவு ஏற்பட்டு வந்தது. இதை சீரமைக்க முடியாமல், பரிதவித்து வந்தோம்.அதை, அரசே சீரமைக்க நிதி ஒதுக்கீடு செய்திருப்பது வரவேற்கத்தக்கது' என்றார்.
நிர்வாக அனுமதி
இதுகுறித்து, காஞ்சிபுரம் மாவட்ட ஊரக வளர்ச்சித் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
மத்திய, மாநில அரசு திட்டங்களின் கீழ் ஓட்டு வீடு மற்றும் கான்கிரீட் வீடுகளில், சேத விபரங்களை துறை வல்லுனர்கள் கணக்கெடுத்து இணைய தளத்தில் பதிவேற்றம் செய்துள்ளோம்.
சேதமடைந்த வீடுகளுக்கு ஏற்ப, நிதி ஒதுக்கீடு செய்து, நிர்வாக அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.
மேலும், சிறப்பு கிராம சபை கூட்டத்தில், தீர்மானமும் நிறைவேற்றி, பயனாளிகள் மற்றும் ஒப்பந்ததாரர்கள் வாயிலாக சீரமைப்பு பணிகள் துவக்க உள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.