ADDED : அக் 11, 2024 09:43 PM
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாவட்டத்தில், வருவாய் துறையில் பணியாற்றும் தாசில்தார்களை, அவ்வப்போது பணியிட மாற்றம் செய்வது வழக்கம். அந்த வகையில், நிர்வாக காரணங்களுக்காக மூன்று தாசில்தார்களை பணியிட மாற்றம் செய்து, கலெக்டர் கலைச்செல்வி உத்தரவிட்டுள்ளார்.
வாலாஜாபாத் ரெகுலர் தாசில்தாராக பணியாற்றி வந்த கருணாகரன், சிப்காட் நில எடுப்பு தாசில்தாராக இடமாற்றம் செய்யப்பட்டார். இவருக்கு பதிலாக, வாலாஜாபாதில் சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் இந்துமதிக்கு, கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
சிப்காட் நில எடுப்பு பிரிவு தாசில்தார் ராதாகிருஷ்ணன், உத்திரமேரூர் சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தாராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
வாலாஜாபாத்தில் கடந்த சில மாதங்களாக பணியாற்றி வந்த தாசில்தார் கருணாகரன், விதிமீறல் லாரிகள் மீது தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வந்த நிலையில், அவர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.