பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மஞ்சள்நீர் வடிகால் துார்வாரும் பணி தொடக்கம்
பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மஞ்சள்நீர் வடிகால் துார்வாரும் பணி தொடக்கம்
ADDED : செப் 03, 2026 03:20 PM

காஞ்சிபுரம்: வடகிழக்கு பருவமழையையொட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, காஞ்சிபுரம் திருக்காலிமேடு பிரதான சாலையோரம் செல்லும் மஞ்சள்நீர் வடிகால் பொக்லைன் இயந்திரம் மூலம் துார்வாரும் பணி நேற்று தொடங்கி உள்ளது.
காஞ்சிபுரம் நகரில் பெய்யும் மழைநீர் வெளியேறும் வகையில் அமைக்கப்பட்ட மஞ்சள்நீர் வடிகால், புத்தேரி தெரு – கிருஷ்ணன் தெரு சந்திப்பில் தொடங்கி, பிள்ளையார்பாளையம், பல்லவர்மேடு, ஆனந்தாப்பேட்டை, திருக்காலிமேடு, நேதாஜி நகர் வழியாக சென்று நத்தப்பேட்டை ஏரியில் கலக்கிறது.
வடகிழக்கு பருவமழையையொட்டி, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, மாவட்டம் முழுதும் மழைநீர் வடிகாலை துார்வாரும்படி காஞ்சிபுரம் கலெக்டர் சினேகா உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி, காஞ்சிபுரம் மாநகராட்சி நிர்வாகம் சார்பில், மஞ்சள்நீர் வடிகாலில் வளர்ந்துள்ள செடிகள், கோரைப்புற்கள், குப்பை கழிவுகள், மழைக்கு அடித்து வரப்பட்ட மண் குவியல் உள்ளிட்டவை பொக்லைன் இயந்திரம் வாயிலாக துார்வாரும் பணி நேற்று தொடங்கி உள்ளது.
