/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
வாலிபர் கொலை வழக்கில் அண்ணன் உட்பட இருவர் கைது
/
வாலிபர் கொலை வழக்கில் அண்ணன் உட்பட இருவர் கைது
ADDED : அக் 08, 2024 12:49 AM
காஞ்சிபுரம், வேடல் கிராமத்தைச் சேர்ந்தவர் சம்பத் மகன் நேதாஜி, 24; ஆட்டோ ஓட்டுநர். இவர், நேற்று முன்தினம், தன் வீட்டில் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார். இவர் இறந்து கிடந்தது குறித்து, அவரது பெரியம்மா ராணி என்பவர், மாகரல் போலீசிற்கு தகவல் தெரிவித்துள்ளார். மாகரல் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.
அப்போது, தலையில் பலத்த காயம் ஏற்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. இறந்த நேதாஜி கொலை செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகித்த போலீசார், அவரது அண்ணன் பாரதி, 29, என்பவரை பிடித்து விசாரித்தனர்.
விசாரணையில், சொத்து மற்றும் திருமணம் செய்து வைப்பது தொடர்பாக ஏற்பட்ட பிரச்னையில், கொலை செய்தது தெரியவந்தது.
பாரதியை, மாகரல் போலீசார், தீவிர விசாரணை செய்ததில், அவரது சித்தப்பா வேடல் கிராமத்தைச் சேர்ந்த தினேஷ், 35. என்பவரும் சேர்ந்து, இரும்பு பைப்பால், நேதாஜியை தலையில் அடித்து, கொலை செய்தது தெரியவந்தது. இருவரையும் கைது செய்த போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி வேலுார் சிறையில் அடைத்தனர்.
கொலை சம்பவம் பற்றி போலீசார் கூறியதாவது:
இவர்களுக்கு சொந்தமான நிலத்தை இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக விற்பனை செய்து, அதில் கிடைத்த தொகையை பங்கு பிரிப்பதில் அண்ணன் பாரதிக்கும், தம்பி நேதாஜிக்கும் இடையே ஏற்கனவே பிரச்னை இருந்துள்ளது.
மேலும், திருமணம் செய்து வைக்க வேண்டும் எனவும், நேதாஜி வீட்டில் பிரச்னை செய்து வந்துள்ளார். அடிக்கடி குடித்து விட்டு பிரச்னை செய்து வந்ததால், அண்ணன் பாரதி மற்றும் சித்தப்பா தினேஷ் ஆகியோர் இருப்பு பைப் மூலம் அடித்து, நேதாஜியை கொலை செய்துள்ளனர்.
இவ்வாறு போலீசார் கூறினர்.