/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
மேயர் ஆதரவாளர்கள் இருவர் கட்சியிலிருந்து...நீக்கம்!:29ல் வெளிப்படை ஓட்டெடுப்பு நடத்த திட்டம்
/
மேயர் ஆதரவாளர்கள் இருவர் கட்சியிலிருந்து...நீக்கம்!:29ல் வெளிப்படை ஓட்டெடுப்பு நடத்த திட்டம்
மேயர் ஆதரவாளர்கள் இருவர் கட்சியிலிருந்து...நீக்கம்!:29ல் வெளிப்படை ஓட்டெடுப்பு நடத்த திட்டம்
மேயர் ஆதரவாளர்கள் இருவர் கட்சியிலிருந்து...நீக்கம்!:29ல் வெளிப்படை ஓட்டெடுப்பு நடத்த திட்டம்
UPDATED : ஜூலை 27, 2024 12:50 AM
ADDED : ஜூலை 27, 2024 12:46 AM
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாநகராட்சி மேயர் ஆதரவாளர்கள் இருவர் தி.மு.க.,விலிருந்து தற்காலிகமாக நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அதேபோல், வரும் 29ல் நடைபெறும் மேயர் மீதான ஓட்டெடுப்பு, வெளிப்படை ஓட்டெடுப்பாக நடக்கும் என, மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
காஞ்சிபுரம் மாநகராட்சியில், தி.மு.க.,வைச் சேர்ந்த மேயர் மகாலட்சுமிக்கு எதிராக, வரும் 29ம் தேதி நம்பிக்கையில்லா தீர்மான கூட்டம் மற்றும் அவர் பதவி மீதான ஓட்டெடுப்பும் நடக்க உள்ளது. மேயருக்கு எதிராக, 30க்கும் மேற்பட்ட கவுன்சிலர்கள் அதிருப்தியில் உள்ளனர்.
இதற்கிடையே கமிஷனர் செந்தில்முருகன், மேயருக்கு ஆதரவாக செயல்படுவதாக கூறி, கடந்த திங்கள், செவ்வாய் என, இரு நாட்களும், கமிஷனர் செந்தில்முருகன் அறையில் அவரை முற்றுகையிட்டும், மாநகராட்சி வளாகத்தில் தர்ணா போராட்டத்தையும் கவுன்சிலர்கள் நடத்தினர்.
மாநகராட்சியில் கவுன்சிலர்கள் தொடர்ந்து பிரச்னை செய்வதால், அவர்களை சமாதானம் செய்ய, தி.மு.க.,வின் அமைப்பு செயலர் அன்பகம் கலை, காஞ்சிபுரத்திற்கு நேற்று முன்தினம் வந்தார்.
பொன்னேரிக்கரையில் உள்ள நட்சத்திர விடுதியில், தி.மு.க., கவுன்சிலர்களை அழைத்து, நேற்று காலை பேச்சு நடத்தினார். ஆனால், முடிவு எட்டப்படாததால், அதிருப்தி கவுன்சிலர்கள் தங்கள் நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளனர்.
இதற்கிடையே, மேயர் மகாலட்சுமியின் கணவரான, இளைஞர் அணி மாவட்ட அமைப்பாளர் யுவராஜின் ஆதரவாளர்கள் இருவரை, கட்சியிலிருந்து தற்காலிகமாக நேற்று நீக்கியதால், மேயர் தரப்பு அதிர்ச்சியடைந்துள்ளது.
தி.மு.க.,வின், காஞ்சிபுரம் மாவட்ட பிரதிநிதி பிரகாஷ் என்பவரையும், மாவட்ட கலை, இலக்கிய பகுத்தறிவு பேரவை துணை அமைப்பாளர் டில்லிகுமார் என்பவரையும், கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து தற்காலிகமாக நீக்கி, பொதுச்செயலர் துரைமுருகன் நேற்று அறிவித்துள்ளார்.
கழக கட்டுப்பாட்டை மீறியதாக இருவர் மீதும் குற்றச்சாட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில், எதிர்தரப்பு கவுன்சிலர்களின் குற்றச்சாட்டுக்களே, இருவரின் நீக்கத்திற்கு காரணமாக இருக்கும் என, கட்சியினர் தெரிவிக்கின்றனர்.
மேயர் தரப்புக்கு ஆதரவான இருவரை கட்சியிலிருந்து நீக்கியதாலும், மாநகராட்சியில் பிரச்னை தொடர்வதாலும், மேயருக்கும், அவரது கணவருக்கும் தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.
மேயர் மகாலட்சுமி மீதான நம்பிக்கையில்லா தீர்மான கூட்டம், திங்கட்கிழமை நடைபெற உள்ள நிலையில், ஆக., 6ல், பணிக்குழு தலைவருக்கான தேர்தல் நடைபெற உள்ளது.
மாநகராட்சி டெண்டர்களை கையாளக்கூடிய பணிக்குழுவின் தலைவராக இருந்த கவுன்சிலர் சுரேஷ், தனது தலைவர் பதவியை ஐந்து மாதங்கள் முன் ராஜினாமா செய்தார்.
இந்நிலையில், கோவை, நெல்லை ஆகிய மாநகராட்சிகளுக்கு புதிய மேயர் தேர்வு செய்வதற்கான தேர்தல், ஆக., 6ல் நடைபெற உள்ளது.
அன்றைய தினமே, காஞ்சிபுரம் மாநகராட்சியில் காலியாக உள்ள பணிக்குழுவின் தலைவர் பதவிக்கான தேர்தலும் நடைபெற உள்ளதாக மாநில தேர்தல் கமிஷனர், மாநகராட்சி கமிஷனர்களுக்கு கடிதம் அனுப்பியுள்ளது.
பணிக்குழுவின் தலைவராக இருந்த சுரேஷ் மீண்டும் போட்டியிடுவாரா அல்லது வேறு கவுன்சிலர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படுமா என்பதை, கட்சி நிர்வாகிகள் முடிவு செய்வர்.