ADDED : மார் 01, 2024 11:29 PM

தி.நகர்:தி.நகர், ராஜமன்னார் சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில், பெயின்டிங் வேலை நடக்கிறது. இதில் திருவொற்றியூரைச் சேர்ந்த நாராயணன், 32, சிவகுமார், 33, ஆகியோர், நேற்று முன்தினம் இரவு ஈடுபட்டிருந்தனர்.
வீட்டின் பின்புற சுவரில் இரும்பு ஏணியை நிறுத்தி, அதன்மீது ஒருவர் பின் ஒருவராக ஏறினர். அப்போது, ஏணி சரிந்து, அங்கிருந்த உயர் அழுத்த மின்கம்பியில் மோதியது.
அப்போது மின்கசிவு ஏற்பட்டதால், அதிலிருந்து இரும்பு ஏணிக்கு மின்சாரம் பாய்ந்தது. அவர்கள் மீதும் மின்சாரம் பாய்ந்ததில், நாராயணன் கொழுந்துவிட்டு எரிந்தார்.
சிவகுமார் துாக்கி வீசப்பட்டார். உடல் கருகிய நிலையில் மீட்கப்பட்டு, மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே இருவரும் இறந்தனர்.
அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் தொழிலதிபர் ஒருவருக்கு பிரதான கார் ஓட்டுனராக நாராயணன் இருந்து உள்ளார்.
சிறந்த கிரிக்கெட் வீரரான இவருக்கு, மனைவி, ஒரு பெண் குழந்தை உள்ளது. மின்விபத்து குறித்து விசாரிப்பதாக, போலீசார் தெரிவித்தனர்.
