/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
உலகளந்த பெருமாள் கோவில் தேர் பாகங்கள் சேதம் பிரம்மோற்சவ தேரோட்டம் இந்தாண்டு இல்லை
/
உலகளந்த பெருமாள் கோவில் தேர் பாகங்கள் சேதம் பிரம்மோற்சவ தேரோட்டம் இந்தாண்டு இல்லை
உலகளந்த பெருமாள் கோவில் தேர் பாகங்கள் சேதம் பிரம்மோற்சவ தேரோட்டம் இந்தாண்டு இல்லை
உலகளந்த பெருமாள் கோவில் தேர் பாகங்கள் சேதம் பிரம்மோற்சவ தேரோட்டம் இந்தாண்டு இல்லை
ADDED : பிப் 05, 2025 12:23 AM

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் உலகளந்த பெருமாள் கோவில், 108 திவ்ய தேசங்களில், 54வது திவ்யதேசமாக விளங்குகிறது. பல்வேறு சிறப்பு பெற்ற இக்கோவிலில், ஆண்டுதோறும் தை மாதத்தில் பிரம்மோற்சவம் 10 நாட்கள் விமரிசையாக நடக்கும்.
அதன்படி, நடப்பாண்டுக்கான தை மாத பிரம்மோற்சவம், கடந்த 2ம் தேதி காலை கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து சப்பரத்திலும், சிம்ம வாகனத்திலும் உலகளந்த பெருமாள் வீதியுலா வந்தார். மூன்றாம் நாளான நேற்று காலை, கருடசேவை உற்வசவம் நடந்தது.
இதில், கருட வாகனத்தில் மலர் அலங்காரத்தில் எழுந்தருளிய உலகளந்த பெருமாள், நான்கு ராஜ வீதிகளிலும் உலா வந்தார். இரவு ஹனுமந்த வாகன உற்சவமும் நடந்தது. இதை தொடர்ந்து, ஏழாம் நாள் உற்சவமான தேரோட்டம், வரும் 8ம் தேதி நடைபெற உள்ளதாக, கோவில் உற்சவ பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆனால், தேர் பழுதடைந்து உள்ளதால், நடப்பாண்டு தேரோட்டம் நடைபெறாது என தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 2014ல் நடந்த பிரம்மோற்வத்தில், தேர் உற்சவம் நடந்த போது, தேரின் முன் சக்கரம் உடைந்தது. இதையடுத்து, தற்காலிகமாக அமைக்கப்பட்ட சக்கரம் வாயிலாக தேர் நிலை நிறுத்தப்பட்டது.
தேருக்கு 2.60 லட்சம் ரூபாய் செலவில், மூன்றரை டன் எடை கொண்ட இரண்டு அச்சு மற்றும் நான்கு சக்கரங்கள் பொருத்தப்பட்டது. இதையடுத்து, 2015ம் ஆண்டு முதல் புதிய சக்கரத்தில் தேரோட்டம் நடந்தது.
இந்நிலையில், கொரோனா ஊரடங்கு மற்றும் கோவிலில் பாலாயம் நடத்தப்பட்டு, திருப்பணி நடந்ததால், 2021 முதல் 2024 வரை பிரம்மோற்சவம் நடைபெறவில்லை. வெயில், மழையில் இருந்து தேரை பாதுகாக்கும் வகையில், கோவில் அருகே நிறுத்தப்பட்டு, இரும்பு தகடுகளால் மேற்கூரை அமைத்து மூடப்பட்டுள்ளது.
இதில், மேற்கூரையின் ஒரு பகுதி சரியாக மூடப்படாததால், தேர் மழையில் நனைந்து தேரின் பாகங்கள் உளுத்துப்போகும் நிலை உள்ளதாக, கடந்த 2023ம் ஆண்டு ஜூன் மாதம் நம் நாளிதழில் செய்தி வெளியானது.
இருப்பினும் அதிகாரிகள் தேரை பாதுகாப்பதில் அலட்சியமாக இருந்ததால், தற்போது தேரின் பல பாகங்கள் சேதமடைந்து, பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. நடப்பாண்டு, வரும் 8ம் தேதி தேரோட்டம் நடைபெறாது என, அறநிலையத்துறையினர் தெரிவிக்கின்றனர்.
கோவில் புதுப்பிக்கப்பட்டு கும்பாபிஷேகம் நடந்து முடிந்த நிலையில், நடப்பாண்டு பிரம்மோற்சவத்தில் தேரோட்டம் நடைபெறும் என, பக்தர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் நிலையில், தேரோட்டம் நடைபெறாது என்பது, பக்தர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தேருக்கு திருப்பணி செய்ய இருப்பதால், இம்முறை தேரோட்டம் நடைபெறாது. 50 லட்சம் ரூபாய் மதிப்பில் தேரை சீரமைக்க வேண்டியுள்ளது. அதற்கான நிதி இல்லை. உபயதாரர்களிடம் நிதி பெற்று தேர் சீரமைக்கப்படும். சுவாமி பல்லக்கில் வீதியுலா வருவார்.
அறநிலையத் துறை அதிகாரி,
காஞ்சிபுரம்.