sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 02, 2025 ,கார்த்திகை 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

பொங்கல் 'போனஸ்' வழங்க முடியாமல் கைத்தறி சங்கங்கள்... கைவிரிப்பு! 4 ஆண்டுகளில் ரூ.474 கோடிக்கு விற்பனை நடந்தும் லாபம் இல்லை

/

பொங்கல் 'போனஸ்' வழங்க முடியாமல் கைத்தறி சங்கங்கள்... கைவிரிப்பு! 4 ஆண்டுகளில் ரூ.474 கோடிக்கு விற்பனை நடந்தும் லாபம் இல்லை

பொங்கல் 'போனஸ்' வழங்க முடியாமல் கைத்தறி சங்கங்கள்... கைவிரிப்பு! 4 ஆண்டுகளில் ரூ.474 கோடிக்கு விற்பனை நடந்தும் லாபம் இல்லை

பொங்கல் 'போனஸ்' வழங்க முடியாமல் கைத்தறி சங்கங்கள்... கைவிரிப்பு! 4 ஆண்டுகளில் ரூ.474 கோடிக்கு விற்பனை நடந்தும் லாபம் இல்லை


ADDED : டிச 02, 2025 12:08 AM

Google News

ADDED : டிச 02, 2025 12:08 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் உள்ள 22 கைத்தறி சங்கங்களில் இரண்டு சங்கங்களை தவிர, மற்ற சங்கங்களில் நெசவாளர்களுக்கு போனஸ் வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. கடந்த நான்கு ஆண்டுகளில் 474 கோடி ரூபாய்க்கு பட்டு சேலை விற்பனை நடந்தும், பெரும்பாலான சங்கங்கள் லாபம் இல்லாததால், நெசவாளர்கள் கவலையடைந்துள்ளனர். ஜவுளித்துறையில் புகழ்பெற்று விளங்கும் முக்கிய நகரங்களில், காஞ்சிபுரம் நகரம் முக்கிய பங்காற்றி வருகிறது. நாட்டின் பல்வேறு இடங்களில் இருந்து வரும் சுற்றுலா பயணியர், காஞ்சிபுரம் நகருக்கு வந்து பட்டு சேலைகளை வாங்கி செல்கின்றனர்.

காரணம், நேர்த்தியாக, கைகளால் நெய்யப்படும் பட்டு சேலைகள் பல நுாற்றாண்டுகளாகவே புகழ் பெற்றது. தனியார், அரசு கூட்டுறவு சங்கங்கள் மூலமாக, கோடிக்கணக்கான ரூபாய் வர்த்தகம், பட்டு சேலை வாயிலாக நடைபெறுகிறது.

நெசவாளர்கள் கவலை பட்டு சேலையில் உள்ள ஜரிகைகள் மின்னுவது போல, அதை நெய்யும் நெசவாளர்களின் வாழ்க்கை மின்னுவதில்லை. காரணம், கூலி குறைவும், அதிக உழைப்பும் நெசவாளர்களை கடுமையாக பாதிக்கிறது.

ஒவ்வொரு ஆண்டும் நெசவாளர்களுக்கு போனஸ் கிடைக்கக் கூடிய பொங்கல் பண்டிகை நெருங்கி வரும் சூழலில், சொற்ப நெசவாளர்களுக்கு மட்டுமே போனஸ் கிடைப்பதால், ஆயிரக்கணக்கான நெசவாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

தனியாரிடம் 4,500 நெசவாளர்களும், பட்டு கூட்டுறவு கைத்தறி சங்கங்களிடம் 4,600 நெசவாளர்களும் தற்போது நெசவு பணியில் உள்ளனர். இதில், தனியாரிடம் பணியாற்றும் நெசவாளர்களுக்கு பொங்கல் போனஸ், பெரும்பாலான முதலாளிகள் வழங்குவதில்லை.

ஆனால், பட்டு கைத்தறி கூட்டுறவு சங்கங்களின் கீழ் உறுப்பினர்களாக இருக்கும் நெசவாளர்களுக்கு, சங்க நிர்வாகம் லாபத்தில் போனஸ் வழங்குகிறது.

அந்த வகையில், காஞ்சி புரம் மாவட்டத்தில், 22 பட்டு கைத்தறி கூட்டுறவு சங்கங்களில், வெறும் மூன்று சங்கங்கள் மட்டுமே, நெசவாளர்களுக்கு போனஸ் வழங்கி வந்தன.

அறிஞர் அண்ணா கைத்தறி கூட்டுறவு சங்கத்தில் 1,100 நெசவாளர்களுக்கும், திருவள்ளுவர் பட்டு கைத்தறி கூட்டுறவு சங்கத்தில் 400 நெசவாளர்களுக்கும், கே.எஸ்.பார்த்தசாரதி சங்கத்தில் 200 நெசவாளர்களுக்கும் போனஸ் வழங்குவது வழக்கம். நடப்பாண்டிலும், இந்த மூன்று சங்கங்களும் லாபம் ஈட்டி உள்ளன.

ஆனால், திருவள்ளுவர் மற்றும் அண்ணா ஆகிய இரு கைத்தறி சங்கங்கள் மட்டுமே, இந்தாண்டும் தொடர்ந்து போனஸ் வழங்க உள்ளது. கே.எஸ்.பார்த்தசாரதி சங்கம், லாபம் ஈட்டினாலும், போனஸ் கொடுக்கும் அளவுக்கு லாபம் இல்லை என தெரிவித்துள்ளது.

ஆறுதல் ஆனால், மீதமுள்ள 19 சங்கங்கள் இம்முறையும், தன் சங்க உறுப்பினர்களான, நெசவாளர்களுக்கு போனஸ் வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

உற்பத்தியில் முன்னணி சங்கங்களான முருகன், காமாட்சி போன்ற சங்கங்கள் கூட, லாபம், நஷ்டத்தை கணக்கிட்டு இம்முறை போனஸ் வழங்க போவதில்லை என நெசவாளர்கள் தெரிவிக்கின்றனர்.

அதேபோல, பெரும்பாலான சங்கங்கள் போனஸ் வழங்காத நிலையில், மூன்று சங்கங்கள் மட்டுமே லாபம் ஈட்டி, இரண்டு சங்கங்கள் மட்டுமே போனஸ் வழங்க உள்ளதால், அந்த சங்கங்களைச் சேர்ந்த நெசவாளர்கள் ஆறுதல் அடைந்துள்ளனர்.

சிக்கல் திருவள்ளுவர் சங்கத்தில், 22 சதவீதமும், அண்ணா சங்கத்தில் 33 சதவீதமும் போனஸ் வழங்க இருப்பதாக சங்க மூத்த நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர்.

கடந்த 2021 - 2025 வரையிலான நான்கு ஆண்டுகளில், கைத்தறி கூட்டுறவு சங்கங்கள் மூலம், 329.1 கோடி ரூபாய்க்கு பட்டு சேலைகள் உற்பத்தி செய்யப்பட்டு, 474.3 கோடி ரூபாய்க்கு விற்பனை நடந்துள்ளது.

இருப்பினும், பெரும்பாலான சங்கங்கள் லாபத்தில் இயங்காமலும், 10 சங்கங்கள் நலிந்தும் கிடக்கின்றன. பல சங்கங்கள் உற்பத்தியும் இன்றி, சங்கமே நஷ்டத்தில் இயங்கும் நிலையில், நெசவாளர்களின் வாழ்வாதாரம் மேலும் சிக்கலாகி வருகிறது.

நலிந்த சங்கங்களை மேம்படுத்த, அவர்களை நம்பியுள்ள நெசவாளர்களின் வாழ்வாதாரம் காக்க, கைத்தறி துறை புதிய முயற்சி எடுக்க வேண்டும் என, நலிந்த சங்கங்களின் நிர்வாகிகள் கோரிக்கை விடுக்கின்றனர்.

உற்பத்தி பாதிப்பு ஜி.எஸ்.டி., வரி மற்றும் தங்கம் விலை காரணமாகவே, பட்டு சேலை விலை மிக அதிகமாக உள்ளது. இன்றைய சூழலில், 15,000 ரூபாய்க்கு குறைவாக பட்டு சேலை வாங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. விற்பனை குறைவு காரணமாகவே, பல சங்கங்களுக்கு உற்பத்தி பாதிக்கிறது. தனியார் கடைகள் இந்த சூழலை பயன்படுத்தி லாபம் அடைகின்றன. ஜி.எஸ்.டி., வரி விலக்கு அளித்தால், நெசவாளர்கள் வாழ்க்கை மேம்படும். - எஸ்.வி.சங்கர், தலைவர், ஏ.ஐ.டி.யு.சி.,கைத்தறி சங்கம், காஞ்சிபுரம்.






      Dinamalar
      Follow us