/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
காஞ்சி மாநகராட்சியில் பாதாள சாக்கடைகள்...அடைப்பு! :தெருக்களில் வற்றாத கழிவுநீரால் சுகாதார சீர்கேடு
/
காஞ்சி மாநகராட்சியில் பாதாள சாக்கடைகள்...அடைப்பு! :தெருக்களில் வற்றாத கழிவுநீரால் சுகாதார சீர்கேடு
காஞ்சி மாநகராட்சியில் பாதாள சாக்கடைகள்...அடைப்பு! :தெருக்களில் வற்றாத கழிவுநீரால் சுகாதார சீர்கேடு
காஞ்சி மாநகராட்சியில் பாதாள சாக்கடைகள்...அடைப்பு! :தெருக்களில் வற்றாத கழிவுநீரால் சுகாதார சீர்கேடு
ADDED : ஜூன் 14, 2024 12:03 AM

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாநகராட்சியில் உள்ள பல தெருக்களில், பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டு, கழிவுநீர் தொடர்ந்து வெளியேறி சாலையில் ஆறாக ஓடுவதால், சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. மாநகராட்சி அதிகாரிகள் பாதாள சாக்கடை திட்டத்தை சரிவர பராமரிக்காததால், இத்திட்டம் செயலிழப்பதாக நகரவாசிகள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
காஞ்சிபுரம் மாநகராட்சியில் தற்போதுள்ள 51 வார்டுகளில், ஓரிக்கை, செவிலிமேடு, தேனம்பாக்கம், நத்தப்பேட்டை, திருக்காலிமேடு ஆகிய பகுதிகள், 2011ல், காஞ்சிபுரத்துடன் இணைக்கப்பட்டன. அதற்கு முன்பாக, 40 வார்டுகளுடன், நகராட்சியாக காஞ்சிபுரம் இயங்கி வந்தது.
ஏற்கனவே 40 வார்டுகளில், 1975ம் ஆண்டு, 1.34 கோடி ரூபாய் மதிப்பில், 33.09 கி.மீ., நீளம் பைப்லைன் கொண்ட, பாதாள சாக்கடை திட்டம் கொண்டு வரப்பட்டு இப்போது வரை பயன்பாட்டில் உள்ளது.
கழிவுநீர் கலக்கிறது
நகரில் உள்ள அனைத்து பகுதிகளில் இருந்தும் சேகரமாகும் கழிவுநீர், நத்தப்பேட்டை அருகேயுள்ள கழிவுநீர் சுத்திகரிக்கும் தொட்டிகளுக்கு அனுப்பி சுத்திகரிப்பு செய்தபின், நத்தப்பேட்டை ஏரியில் விடப்பட்டது.
ஆனால், கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் பழுதாகி பல ஆண்டுகளான நிலையில், நேரடியாக நத்தப்பேட்டை ஏரியில், காஞ்சிபுரம் மாநகராட்சியின் கழிவுநீர் கலக்கிறது. இதனால், நத்தப்பேட்டை ஏரியின் நீர் முழுதுமாக சாக்கடையாக மாறிவிட்டது.
மாநகராட்சியில் வணிகம், குடியிருப்பு என, 23,000 கட்டடங்களில் கழிவுநீர் இணைப்பு உள்ளன. காஞ்சிபுரம் மாநகராட்சியில் பல தெருக்களில் பாதாள சாக்கடை தொட்டி, குழாய்களில் அடைப்பு ஏற்பட்டு, தெருவிலேயே கழிவுநீர் தேங்குவது சமீப காலமாக அதிகரித்து காணப்படுகிறது.
சமீப காலமாக, பல்லவர்மேடு அருந்தியர்பாளையம், ஏகாம்பரநாதர் கோவில் வடக்கு மாடவீதி, சின்ன காஞ்சிபுரம் கன்னிக்கோவில் தெரு, மாகாளியம்மன் கோவில் தெரு, பஞ்சுகோட்டி தெரு, குப்பு தெரு, சாலை தெரு, தாமல்வார் தெரு, தாத்திமேடு, பள்ளிக்கூடத்தான் தெரு, உலகளந்த பெருமாள் கோவில் தெரு, இரும்புக் கடை சந்து, பிள்ளையார்பாளையம் உள்ளிட்ட இடங்களில் அடிக்கடி பாதாள சாக்கடை பிரச்னை ஏற்பட்டு சாலையிலேயே கழிவுநீர் வழிந்தோடுகிறது. இதனால், துர்நாற்றம் வீசுவதோடு, சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது.
நகரவாசிகள் புகார்
காஞ்சிபுரம் மாநகராட்சியில், 6 இடங்களில் கழிவு நீரேற்று நிலையங்களும், 4 இடங்களில் கழிவுநீர் உந்து நிலையங்களும் இயங்கி வருகின்றன. மேலும், கழிவுநீர் அடைப்பு நீக்கும் லாரி பயன்பாட்டில் உள்ளது. மேலும் ஒரு லாரி வாங்க மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.
இத்தனை அடிப்படை வசதிகளும் இருந்தும், மாநகராட்சி முழுதும் பல இடங்களில் கழிவுநீர் வெளியேறி, ஊரே நாறுவதாக நகரவாசிகள் புகார் தெரிவிக்கின்றனர்.
பாதாள சாக்கடை பிரச்னை அதிகமுள்ள பகுதியில் அவற்றை சரிசெய்ய அதிகாரிகள் முயற்சிக்கவில்லை எனவும், மழைக்காலத்தில் சாலையில் வழிந்தோடும் மழைநீர் மில்லியன் லிட்டர் கணக்கில், பாதாள சாக்கடை இணைப்பில் செல்வதாக நகரவாசிகள் தெரிவிக்கின்றனர்.
அதிகாரிகள் வேடிக்கை
அவற்றை சரிசெய்ய வேண்டிய மாநகராட்சி அதிகாரிகள் வேடிக்கை பார்ப்பதாக நகரவாசிகள் புகார் தெரிவிக்கின்றனர்.
கோவில் நகரமான காஞ்சிபுரத்திற்கு அன்றாடம், வெளியூர், வெளிநாடுகளில் இருந்து சுற்றுலா பயணியர் வந்து செல்கின்றனர். பட்டு சேலை வாங்கவும் ஏராளமானோர் வருகின்றனர். நாட்டின் ஏழு புண்ணிய நகரங்களில் காஞ்சிபுரமும் ஒன்றாக திகழ்கிறது.
இத்தனை பெருமைகள் இருந்தபோதும், வெளியூர் பயணியர் அவதிப்படும் வகையில், நகரின் பல இடங்களில் கழிவுநீர் வழிந்தோடுவது, மாநகராட்சி நிர்வாகத்தின் அலட்சியத்தைக் காட்டுவதாக நகர மக்கள் குற்றச்சாட்டு தெரிவிக்கின்றனர்.