/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
பராமரிப்பில்லாத ரங்கசாமிகுளம் துார்வாரி சீரமைக்க வலியுறுத்தல்
/
பராமரிப்பில்லாத ரங்கசாமிகுளம் துார்வாரி சீரமைக்க வலியுறுத்தல்
பராமரிப்பில்லாத ரங்கசாமிகுளம் துார்வாரி சீரமைக்க வலியுறுத்தல்
பராமரிப்பில்லாத ரங்கசாமிகுளம் துார்வாரி சீரமைக்க வலியுறுத்தல்
ADDED : ஜூலை 16, 2025 12:38 AM

காஞ்சிபுரம்:பராமரிப்பின்றி சீரழியும், காஞ்சிபுரம் ரங்கசாமி குளத்தை துார்வாரி சீரமைக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.
காஞ்சிபுரம் காந்தி சாலையில் அமைந்துள்ள ரங்கசாமி குளம், கடந்த, 2011ம் ஆண்டு, 23 லட்சம் ரூபாய் செலவில் குளம் துார்வாரப்பட்டதோடு, குளத்தின் உட்பகுதியில், நடைபயிற்சிக்கான நடைபாதை, இருக்கை வசதி, மின் விளக்கு உள்ளிட்ட வசதிகளுடன் சீரமைக்கப்பட்டது.
குளத்தை சுற்றியுள்ள பகுதியில் வசிப்போர் காலை, மாலையில் நடைபயிற்சி மேற்கொண்டு வந்தனர்.
முறையான பராமரிப்பு இல்லாததால், நடைபாதையில் அமைக்கப்பட்டிருந்த மின்விளக்குகளை உடைத்த சமூக விரோதிகள் இரவு நேரத்தில் மது அருந்தி விட்டு, காலி மதுபாட்டில்களை உடைத்து விட்டு சென்றனர்.
இதனால், பொது மக்கள் நடைபயிற்சி மேற்கொள்வதை தவிர்த்தனர். பயன்பாடின்றி இருந்ததால், ரங்கசாமி குளம் மூடப்பட்டது.
கடந்த, 2018 ல் மத்திய அரசின், சுற்றுலா துறை சார்பில், 25.39 லட்சம் ரூபாய் செலவில், ரங்கசாமி குளம் மீண்டும் சீரமைக்கப்பட்டது.
இருப்பினும் குளத்திற்கு மழைநீர் வரும் கால்வாய் ஆக்கிரமிப்புகளை அகற்றி, துார்வாரி சீரமைக்கவில்லை. இதனால், இக்குளம் 'வர்தா, கஜா' போன்ற புயலின்போது பெய்த மழைக்குகூட முழுமையாக நிரம்பவில்லை.
மாறாக, குளத்திற்கு மழைநீர் வரும் கால்வாயில், சிலர் முறைகேடாக கழிவுநீரை விட்டதால், குளத்தில் கழிவுநீர் தேங்கியது.
தற்போது, குளத்தில் செடி, கொடிகள், கோரைப்புல் வளர்ந்துள்ளது, குளத்தில் தேங்கியுள்ள நீரும் பாசிபடர்ந்து பச்சை நிறமாக மாறியுள்ளது. இதனால், அப்பகுதி நிலத்தடிநீரும் மாசடையும் சூழல் உள்ளது.
எனவே, பராமரிப்பின்றி சீரழியும் ரங்கசாமி குளத்தையும், குளத்திற்கு மழைநீர் வரும் கால்வாய்களையும் முழுமையாக துார்வாரி சீரமைக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.