/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
பாலாற்று நீர்வரத்து கால்வாய் ஆக்கிரமிப்பு அகற்ற வலியுறுத்தல்
/
பாலாற்று நீர்வரத்து கால்வாய் ஆக்கிரமிப்பு அகற்ற வலியுறுத்தல்
பாலாற்று நீர்வரத்து கால்வாய் ஆக்கிரமிப்பு அகற்ற வலியுறுத்தல்
பாலாற்று நீர்வரத்து கால்வாய் ஆக்கிரமிப்பு அகற்ற வலியுறுத்தல்
ADDED : ஜூலை 10, 2025 01:11 AM

வாலாஜாபாத்:வல்லப்பாக்கம் ஏரிக்கான பாலாற்று நீர்வரத்துக் கால்வாய் ஆக்கிரமிப்புகளை அகற்றி துார்வாரி சீரமைக்க அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வாலாஜாபாத் பேரூராட்சி, 5வது வார்டில், வல்லப்பாக்கம் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் உள்ள ஏரிக்கு வாலாஜாபாத் பாலாற்றில் இருந்து, பேரூராட்சியின் பல்வேறு தெருக்கள் வழியாக நீர்வரத்து கால்வாய் சென்றடைகிறது.
பாலாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் சமயங்களில் இக்கால்வாய் வழியாக செல்லும் தண்ணீர் வல்லப்பாக்கம் ஏரி நிரம்ப முக்கிய வழிவகுக்கிறது.
இதனிடையே, இக்கால்வாயின் இருபுறமும் வீடுகள் கட்டி வசிக்கும் குடியிருப்பு வாசிகள், கடந்த ஆண்டுகளில் தங்கள் வீடுகளின் கழிவுநீரை கால்வாய் மூலம் வெளியேற்றி வருகின்றனர்.
இதனால், வல்லப்பாக்கம் ஏரிக்கான பாலாற்று நீர்வரத்து கால்வாய் நாளடைவில் கழிவுநீர் கால்வாயாக மாறி உள்ளது.
மேலும், இக்கால்வாயையொட்டி உள்ள குடியிருப்பு மக்கள் சிலர், கால்வாயை துார்த்து கட்டடங்கள் கட்டியும், தங்கள் வீட்டு மனைகளோடு சமன் செய்தும் ஆக்கிரமித்துள்ளனர்.
இதனால், அக்கால்வாயில் அடைப்புகள் அதிகரித்து கழிவுநீர் தேங்கி துார்நாற்றம், கொசு உற்பத்தி மற்றும் தொற்று போன்ற சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது.
எனவே, வாலாஜாபாத் பாலாற்றில் இருந்து வல்லப்பாக்கம் ஏரிக்கு செல்லும் நீர்வரத்து கால்வாயை துார்வாரி பராமரிக்க சமூக ஆர்வலர் பலரும் வலியுறுத்தி உள்ளனர்.
இதுகுறித்து, அப்பகுதி கிராம நிர்வாக அலுவலர் சுரேஷ் கூறியதாவது:
வாலாஜாபாத் பாலாற்றில் இருந்து, வல்லப்பாக்கம் ஏரிக்கு செல்லும் ஒன்றரை கி.மீ., துாரம் கொண்ட கால்வாய் ஆக்கிரமிப்புகள் குறித்து ஏற்கனவே கணக்கெடுத்து உயர்மட்ட அதிகாரிகள் கவனத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது.
ஆக்கிரமிப்புகள் அகற்றுதல் மற்றும் துார் வாருதல் போன்றவை குறித்து துறை சார்ந்த அதிகாரிகள்தான் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

