/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
உத்திரமேரூர் -- செய்யாறு பேருந்து சேவை துவங்குமா?
/
உத்திரமேரூர் -- செய்யாறு பேருந்து சேவை துவங்குமா?
ADDED : பிப் 09, 2024 11:08 PM
உத்திரமேரூர்:உத்திரமேரூர்- செய்யாறு வழித்தடத்தில், பெருநகர், மானாம்பதி, இளநகர், ஆர்.என்.கண்டிகை, தண்டரை, ராவத்தநல்லுார் உள்ளிட்ட கிராமங்கள் உள்ளன.
இந்த கிராமங்களில் உள்ள பள்ளி, கல்லுாரி மாணவ - மாணவியர், உத்திரமேரூர் கல்விக்கூடங்களில் பயின்று வருகின்றனர். அதேபோல், செய்யாறு பகுதியில் உள்ள கல்லுாரிகளிலும் பயில்கின்றனர்.
அதுமட்டுமின்றி பலதரப்பு மக்களும் செய்யாறு - -உத்திரமேரூர் இடையே பல்வேறு பணிகள் காரணமாக தினமும் பயணிக்கின்றனர். செய்யாற்று பணிமனையில் இருந்து, தடம் எண்: 'டபிள்யூ 5' என்ற அரசு பேருந்து உத்திரமேரூர் வரை இயங்குகிறது.
இந்த பேருந்து சேவை மட்டும் போக்குவரத்துக்கு போதுமானதாக இல்லாததால், உத்திரமேரூர் பணிமனையில் இருந்து, செய்யாறு வரை அரசு பேருந்து இயக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து உத்திரமேரூர் பகுதிவாசிகள் கூறியதாவது:
கடந்த ஆண்டுகளில் உத்திரமேரூர் பணிமனை வாயிலாக செய்யாறு- - தாம்பரம் இடையிலான தடம் எண்: 504 என்ற அரசு பேருந்து இயங்கியது.
செய்யாறில் இருந்து நெடுங்கல், அத்தி, இளநீர்குன்றம், பெருநகர், மானாம்பதி, உத்திரமேரூர், செங்கல்பட்டு வழியாக தாம்பரம் வரை இந்த பேருந்து இயக்கப்பட்டது.
இரண்டு ஆண்டுகளாக அறிவிப்பு ஏதுமின்றி, இப்பேருந்து சேவை நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது. எனவே, செய்யாறு சென்று வர வசதியாக உத்திரமேரூர் அரசு போக்குவரத்து பணிமனை வாயிலாக பேருந்து இயக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.