/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
வீடு கட்டிய பிறகும் காலிமனை வரி பில் கலெக்டர்களின் ஆய்வு அவசியம்
/
வீடு கட்டிய பிறகும் காலிமனை வரி பில் கலெக்டர்களின் ஆய்வு அவசியம்
வீடு கட்டிய பிறகும் காலிமனை வரி பில் கலெக்டர்களின் ஆய்வு அவசியம்
வீடு கட்டிய பிறகும் காலிமனை வரி பில் கலெக்டர்களின் ஆய்வு அவசியம்
ADDED : நவ 22, 2025 01:00 AM
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாநகராட்சியில் வசிப்போர், வீடு கட்டிய பிறகும் காலி மனைக்கான வரியை தொடர்ந்து செலுத்தி வருவதாக புகார் எழுந்துள்ளது.
காஞ்சிபுரம் மாநகராட்சியில், 4 மண்டலங்களின் கீழ், 51 வார்டுகள் உள்ளன. இதில், 51,000 கட்டடங்களுக்கு சொத்து வரியும், 7,000 இடங்களுக்கு காலி மனை வரியும், 4,300 பேருக்கு தொழில் வரியும், 21,000 கட்டடங்களுக்கு பாதாள சாக்கடை வரியும் விதிக்கப்பட்டு வசூலிக்கப்படுகின்றன. இதில், வீடு கட்டுவதற்கான இடங்களை காலி மனைகளாக வைத்திருப்பவர்கள், அதற்கான வரியை, சதுரடிக்கு ஒரு ரூபாய் என ஆறு மாதங்களுக்கு கணக்கிட்டு, மாநகராட்சிக்கு செலுத்தி வருகின்றனர்.
காலி மனையில் வீடு கட்டிய பிறகு, 3 ஆண்டுகளுக்குள்ளாக வீடு கட்டி முடித்ததற்கான ஆவணங்களை சமர்ப்பித்து, அதிகாரிகள் ஆய்வுக்கு பிறகு, வீட்டு வரி விதிக்கப்படுகிறது. வீடு கட்டிய பிறகு, சதுரடிக்கு கணக்கிட்டு சொத்து வரி புதிதாக விதிக்கப்படுகிறது.
ஆனால், காலி மனைகளில் வீடு கட்டிய பிறகும், காலி மனைகளாகவே மாநகராட்சிக்கு பலரும் வரி செலுத்துவதாக புகார் எழுந்துள்ளது. சொத்து வரியை காட்டிலும், காலி மனை வரி மிக குறைவு என்பதால், காலி மனைக்கான வரியை தொடர்ந்து செலுத்துவதாக தெரிகிறது.
ஒவ்வொரு பகுதிக்கும் பணியில் உள்ள பில் கலெக்டர்கள் காலிமனை, புதிய வீடு ஆகியவற்றை அடிக்கடி ஆய்வு செய்ய வேண்டும். ஆனால், அதுபோன்ற ஆய்வு நடவடிக்கைகள் சரிவர இல்லாததால், காலி மனை வரியாகவே பலரும் செலுத்துவதாக புகார் எழுகிறது.
இதனால், மாநகராட்சிக்கு கணிசமான வருவாய் பாதிக்கப்படும். எனவே, மாநகராட்சிக்கு காலி மனை வரி செலுத்துவோரின் மனைகளை, அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

