பிளாஸ்டிக் குப்பை கிடங்கில் விஷ பாம்புகளின் நடமாட்டம்
பிளாஸ்டிக் குப்பை கிடங்கில் விஷ பாம்புகளின் நடமாட்டம்
ADDED : மார் 11, 2026 05:23 AM

காஞ்சிபுரம்: குப்பை கிடங்கில் குவிந்திருக்கும் பிளாஸ்டிக் மூட்டைகளில், விஷப்பாம்புகளின் நடமாட்டம் இருப்பதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.
காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் பேரூராட்சியில், 15 வார்டுகளிலும் நுாற்றுக்கும் மேற்பட்ட தெருக்கள் உள்ளன. இதில், சேகரிக்கப்படும் குப்பை, மட்கும் குப்பை, மட்காத குப்பை என, இரு விதமாக தரம் பிரிக்கப்படுகின்றன.
மட்கும் குப்பை தரம் பிரித்து, உரமாகவும், மட்காத பிளாஸ்டிக் குப்பைகளை மறு சுழற்சிக்கும் பயன்படுத்தப்படுகிறது.
மறு சுழற்சிக்கு பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் குப்பையை, கிடங்கில் இருந்து அகற்றுவதில்லை என, குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
குறிப்பாக, சில மாதங்களாக வாலாஜாபாத் குப்பை கிடக்கில், மட்கும் குப்பை, மட்காத குப்பை என, இரு விதமாக தரம் பிரிக்கும் பணி முடங்கி கிடக்கிறது.
இதனால், பிளாஸ்டிக் குப்பை, மூட்டை மூட்டையாக கிடங்குகளில் குவிக்கப்பட்டுள்ளன. இதனால், விஷ பாம்புகளின் புகலிடமாக கிடங்கு மாறியுள்ளது.
எனவே, குப்பை கிடங்கில் தேங்கி கிடக்கும் பிளாஸ்டிக் குப்பையை அகற்ற வேண்டும் என, பல்வேறு தரப்பினர் இடையே கோரிக்கை எழுந்துள்ளது.
