ADDED : நவ 17, 2024 09:47 PM
காஞ்சிபுரம்:அனைத்திந்திய கூட்டுறவு வார விழாவையொட்டி, உத்திரமேரூர் அடுத்த இளநகர் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு கடன் சங்கத்தின் சார்பில், கால்நடைகளுக்கான மருத்துவம் மற்றும் பராமரிப்பு முகாம், காஞ்சிபுரம் மாவட்ட கூட்டுறவு ஒன்றியத்தின் செயலர் பிரேம்குமார் தலைமையில் நேற்று நடந்தது.
இதில், இளநகர் கால்நடை மருத்துவர் ஜி.மாலதி தலைமயைிலான மருத்துவ குழுவினர், கால்நடைகளுக்கு குடற்புழு நீக்கம், மலடு நீக்கு சிகிச்சை, குடல் பரிசோதனை, வளர்ப்பு நாய்களுக்கு வெறி நாய்க்கடி தடுப்பூசி, கோழிக்கழிச்சல் தடுப்பூசி, பசு மாடுகளுக்கு சினைப் பரிசோதனை உள்ளிட்ட சிகிச்சை அளித்தனர்.
கால்நடைகளின் உரிமையாளர்களுக்கு தாது உப்புக் கரைசல் பாக்கெட்டுகள் மற்றும் கால்நடைகளுக்கு தேவையான மாத்திரை வழங்கப்பட்டு, கால்நடைகளை சிறப்பாக பராமரிப்பது குறித்தும் விளக்கம் அளிக்கப்பட்டது.