/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
கிடப்பில் கைவிடப்பட்ட கல் குவாரிகளுக்கு பாதுகாப்பு வேலி அமைக்கும் நடவடிக்கை அதிகாரிகள் அலட்சியத்தால் கிராமத்தில் வசிப்போர் பரிதவிப்பு
/
கிடப்பில் கைவிடப்பட்ட கல் குவாரிகளுக்கு பாதுகாப்பு வேலி அமைக்கும் நடவடிக்கை அதிகாரிகள் அலட்சியத்தால் கிராமத்தில் வசிப்போர் பரிதவிப்பு
கிடப்பில் கைவிடப்பட்ட கல் குவாரிகளுக்கு பாதுகாப்பு வேலி அமைக்கும் நடவடிக்கை அதிகாரிகள் அலட்சியத்தால் கிராமத்தில் வசிப்போர் பரிதவிப்பு
கிடப்பில் கைவிடப்பட்ட கல் குவாரிகளுக்கு பாதுகாப்பு வேலி அமைக்கும் நடவடிக்கை அதிகாரிகள் அலட்சியத்தால் கிராமத்தில் வசிப்போர் பரிதவிப்பு
ADDED : ஜூலை 30, 2025 12:26 AM

வாலாஜாபாத், காஞ்சிபுரம் மாவட்டத்தில் பணி முடிவடைந்து கைவிடப்பட்ட கல் குவாரிகள் பல்வேறு இடங்களில் திறந்தவெளியாக காணப்படுகிறது. காலாவதியான இக்குவாரிகளுக்கு பாதுகாப்பு வேலி அமைப்பதான நடவடிக்கையில் அதிகாரிகள் அலட்சியம் காட்டுவதால் கிராமங்களில் விபத்து அபாயம் ஏற்படும் வாய்ப்புள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டத்தின் பல பகுதிகளில், அரசு மற்றும் தனியார் கல் குவாரிகள், 15 ஆண்டுகளாக தொடர்ந்து இயங்குகிறது. தற்போது மாவட்டம் முழுக்க 50க்கும் மேற்பட்ட இடங்களில் கல் குவாரிகள் செயல்படுத்தப்படுகின்றன.
ஏற்கனவே செயல்பாட்டில் இருந்து, பணிக்காலம் முடிவுற்ற காலாவதியான கல் குவாரிகளும் ஏராளமாக உள்ளன. குறிப்பாக உத்திரமேரூர் மற்றும் வாலாஜாபாத் ஆகிய ஒன்றிய கிராமங்களில் காலாவதியான கல் குவாரிகள் அதிகம் உள்ளன.
அவ்வாறாக கைவிடப்பட்ட கல் குவாரிகளில் ஒரு சில குவாரிகள் தவிர்த்து மற்றவை திறந்தவெளி கல் குவாரிகளாக பாதுகாப்பு வேலி இல்லாமல் உள்ளது.
பணி முடிவுற்ற கல் குவாரிகள் அபாயகரமான பள்ளம் கொண்டதாகவும், விபத்து ஏற்படுத்தும் நீர்த்தேக்க பகுதியாகவும் காணப்படுகிறது.
இக்குவாரிகள் விவசாய நிலப் பகுதிகளை சார்ந்தும், கால்நடை மேய்ச்சல் இடங்களின் அருகாமையிலும் உள்ளதால் எப்போது வேண்டுமானாலும் விபத்து அபாயத்திற்கு வழி வகுப்பதாக உள்ளது.
கை விடப்பட்ட கல் குவாரிகளில் அவ்வப்போது நீரில் மூழ்கி மனித உயிரிழப்புகளும், குவாரி பள்ளங்களில் தவறி விழுந்து கால்நடைகள் இறப்புகளும் தொடர்ந்த வண்ணம் உள்ளன.
இவ்வாறான பயன்பாடற்ற கைவிடப்பட்ட கல் குவாரிகளால் ஆபத்து ஏற்படாமல் தடுக்கும் பொருட்டு காலாவதியான கல் குவாரிகளை சுற்றிலும் பாதுகாப்பு வேலி அமைக்க வேண்டும்.
ஆபத்தான பகுதி என எச்சரிக்கை பலகை வைத்து தடை செய்யப்பட்ட இடமாக அறிவித்து பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் என, சமூக ஆர்லவலர் பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.
இதனிடையே, கைவிடப்பட்ட கல் குவாரிகளுக்கு பாதுகாப்பு வேலி அமைப்பது குறித்து அரசு ஏற்கனவே திட்டமிட்டும் இதுவரை செயல்படுத்தாமல் இருப்பது கிராம வாசிகள் இடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
இதுகுறித்து, அருங்குன்றம் கிராம விவசாயியும், தமிழ்நாடு விவசாயிகள் இயக்க மாநில அமைப்பாளருமான தேவராசன் கூறியாவது:
காஞ்சிபுரம் மாவட்டத்தில் அனுமதிக்கப்படும் அனைத்து கல் குவாரிகளும், விவசாய நிலம் மற்றும் கால்நடை மேய்ச்சல் நிலங்களை சார்ந்துதான் உள்ளன.
ஆனால், இவ்வாறு அனுமதி வழங்குகின்ற கல் குவாரிகளின் பணிக்காலம் முடிவுற்றதும் அக்குவாரிகளால் விபத்து ஏற்படாமல் பாதுகாப்பதற்கான நடவடிக்கையை மாவட்ட நிர்வாகம் மேற்கொள்வதில்லை.
கைவிடப்பட்ட கல் குவாரி பள்ளங்களில் நீரில் மூழ்கி மனித உயிரிழப்புகளும், தவறி விழுந்து இறந்த கால்நடைகள் எண்ணிக்கையும் அதிகரித்தபடி உள்ளது.
எனவே, இனியும் காலந்தாழ்த்தாமல் காலாவதியான கல் குவாரிகளை சுற்றி பாதுகாப்பு வேலி அமைத்து அவை நீண்டகால பயன்பாட்டில் இருக்கும்படியான நடவடிக்கை மேற்கொள்ள அதிகாரிகள் தீவிரம் காட்ட வேண்டும்,
இவ்வாறு அவர் கூறினார்.
காஞ்சிபுரம் மாவட்ட கனிமவள அலுவலர் ஒருவர் கூறியதாவது,
காஞ்சிபுரம் மாவட்டத்தில் பணி முடிந்து பயன்பாடு இல்லாமல் கைவிடப்பட்ட கல் குவாரிகள் குறித்து ஏற்கனவே கணக்கெடுக்கப்பட்டுள்ளது. அவ்வாறு அரசு சார்ந்த மற்றும் தனியார் உட்பட மொத்தம், 15 குவாரி பள்ளங்களில் முதற்கட்டமாக மிக அவசியமான 10 குவாரி பள்ளங்களுக்கு பாதுகாப்பு முள்வேலி அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதற்காக நிதி வேண்டி திட்ட மதிப்பீடு தயார் செய்து அரசு பரீசிலனையில் உள்ளது.
விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.