/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
சமுதாய கூடம் அமைக்க கிராமவாசிகள் எதிர்பார்ப்பு
/
சமுதாய கூடம் அமைக்க கிராமவாசிகள் எதிர்பார்ப்பு
ADDED : ஜன 27, 2025 04:30 AM
உத்திரமேரூர், ஜன. 27--
உத்திரமேரூர் ஒன்றியம் மருத்துவன்பாடி ஊராட்சியில் அருந்ததிபாளையம், சித்தமல்லி, நாகமேடு, மாகரயான்மேடு, கொருக்கந்தாங்கல் ஆகிய துணை கிராமங்கள் உள்ளன. இந்த கிராமத்தில், 2,000-க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.
இங்கு, சமுதாயக் கூடம் இல்லாததால், அப்பகுதிவாசிகள் திருமணம், காதணி விழா, திருமண நிச்சயதார்த்தம், பிறந்த நாள் விழா, வளைகாப்பு ஆகிய நிகழ்ச்சிகளை, உத்திரமேரூரில் உள்ள திருமண மண்டபங்களில் நடத்தி வருகின்றனர்.
தற்போது, தனியார் திருமண மண்டபங்களில் வாடகை 30,000 - 40,000 வரை வசூலிக்கப்பட்டு வருகின்றன. இதனால், ஏழை, எளிய மக்கள் சுபநிகழ்ச்சிகளை, தனியார் மண்டபங்களில் நடத்த மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர்.
மருத்துவன்பாடி கிராமத்தில் சமுதாயக் கூடம் அமைக்க பகுதிவாசிகள், மாவட்ட குறைதீர் கூட்டத்தில் பலமுறை மனு அளித்தும், தற்போது வரை நடவடிக்கை எடுக்கவில்லை.
எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, மருத்துவன்பாடியில் சமுதாயக் கூடம் அமைக்க, விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதிவாசிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.