காஞ்சி பஸ் நிலைய பணிக்கு ரூ.2.88 கோடி லஞ்சம்? : தி.மு.க.,வினர் மீது வனத்துறை அமைச்சர் குற்றச்சாட்டு
காஞ்சி பஸ் நிலைய பணிக்கு ரூ.2.88 கோடி லஞ்சம்? : தி.மு.க.,வினர் மீது வனத்துறை அமைச்சர் குற்றச்சாட்டு
UPDATED : ஆக 26, 2026 06:38 AM
ADDED : ஆக 25, 2026 09:22 PM

காஞ்சிபுரம் : பேருந்து நிலைய பணிக்காக ஒப்பந்ததாரரிடம், காஞ்சிபுரம் மாநகராட்சி தி.மு.க., மேயர் மகாலட்சுமியின் கணவர் மூலமாக, 2.88 கோடி ரூபாயை, தி.மு.க.,வை சேர்ந்த முன்னாள் அமைச்சரும், முன்னாள் எம்.எல்.ஏ.,வும் லஞ்சம் பெற்றுள்ளதாக, வனத்துறை அமைச்சர் ரஞ்சித்குமார் குற்றம் சாட்டியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கு, ''அரசியல் ரீதியாகவும், சட்ட ரீதியாகவும் பதில் அளிப்போம்,'' என, மேயர் மகாலட்சுமி, நேற்று நடந்த மாநகராட்சி கூட்டத்தில் பதில் அளித்தார்.
காஞ்சிபுரம் பொன்னேரிக்கரை பகுதியில், புதிய பேருந்து நிலையம் அமைக்க, தமிழக அரசு மூன்று ஆண்டுகளுக்குமுன், 38 கோடி ரூபாய் ஒதுக்கியது.
பொன்னேரிக்கரையில் பக்தவத்சலம் கல்வி அறக்கட்டளை கட்டுப்பாட்டில் இருந்த, 19 ஏக்கர் இடத்தை கையகப்படுத்த மாநகராட்சி முயன்றது. நிலத்திற்கு அறக்கட்டளை உரிமை கோரி, நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டதால், பணிகள் தடைபட்டிருந்தன.
தொடர்ந்து நடந்த சட்டப் போராட்டங்களுக்குப்பின், சில தினங்களுக்கு முன், உச்ச நீதிமன்ற உத்தரவு அடிப்படையில், புதிய பேருந்து நிலையத்திற்கான ஆரம்பகட்ட பணிகள் தொடங்கப்பட்டு உள்ளன.
இந்நிலையில், 'பேருந்து நிலையம் தி.மு.க., ஆட்சி காலத்தில் அமைக்கப்பட்டது. த.வெ.க.,வுக்கும், இங்குள்ள வனத்துறை அமைச்சருக்கும் பேருந்து நிலையம் பற்றி என்ன தெரியும். அதன் சர்வே எண்ணாவது தெரியுமா என, தி.மு.க.,வின் முன்னாள் எம்.எல்.ஏ., எழிலரசன் கேள்வி எழுப்பி இருந்தார்.
இந்நிலையில், பேருந்து நிலைய டெண்டர் விவகாரத்தில், தி.மு.க., நிர்வாகிகள், ஒப்பந்ததாரரிடம், 2.88 கோடி ரூபாய் லஞ்சம் பெற்றதாக, வனத்துறை அமைச்சர் ரஞ்சித்குமார், வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், ரஞ்சித்குமார் கூறியிருப்பதாவது:
புதிய பேருந்து நிலையம் அமைப்பதற்கு, தற்போதைய காஞ்சிபுரம் கலெக்டர் சினேகா, கட்சி சாராமல் நடவடிக்கை எடுத்துள்ளார். எனக்கு சர்வே எண் கூட தெரியாது என்கின்றனர். அந்த இடம் 19 ஏக்கர், சர்வே எண் 354ல் வருகிறது.
முருகன் என்ற ஒப்பந்ததாரரிடம், 2.88 கோடி ரூபாய், 'பார்ட்டி பண்ட்' ஆகவோ அல்லது தனிப்பட்டதாகவோ, மேயரின் கணவர் மூலம், அப்போதைய தி.மு.க., அமைச்சரும், எம்.எல்.ஏ.,வும் லஞ்சமாக பெற்றது தான் சாதனை.
ஒப்பந்ததாரர் முருகன் என்னிடம் போன் செய்து, நிமோனியா காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளேன்; கிட்னியில் பிரச்னையும் உள்ளது என்கிறார்.
புதிய பேருந்து நிலையம் அமைக்க, 100 கோடி ரூபாய் செலவாகும். அந்த நிதியை காஞ்சிபுரத்திற்காக முதல்வர் விஜய் கொடுப்பார்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
மாநகராட்சி கூட்டம்
இந்நிலையில், காஞ்சிபுரம் மாநகராட்சி கூட்டம், மேயர் மகாலட்சுமி தலைமையில் நேற்று நடந்தது.
இக்கூட்டத்தில், அ.தி.மு.க.,வின், 11வது வார்டு கவுன்சிலர் சண்முகானந்தம் பேசும்போது, ''புதிய பேருந்து நிலைய பணிக்காக, தி.மு.க.,வினர் மேயரின் கணவர் யுவராஜ் மூலம் லஞ்சம் வாங்கியதாக, வனத்துறை அமைச்சர் ரஞ்சித்குமார் கூறியிருக்கிறார்,'' என்றார்.
இதற்கு மேயர் மகாலட்சுமி, ''நாங்கள் அரசியல் ரீதியாகவும், சட்ட ரீதியாகவும் இந்த விஷயத்தில் பதில் அளிப்போம்,'' என்றார்.
புதிய பேருந்து நிலையத் திட்டம், தற்போது நடைமுறைக்கு வந்துள்ள நேரத்தில், ஒப்பந்தப் பணிகளில், 2.88 கோடி லஞ்சம் பெறப்பட்டதாக எழுந்துள்ள குற்றச்சாட்டு பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.
---------------------------------------------------------------------------மாநகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் கூறியதாவது:
கார்த்தி, தி.மு.க.,: கொசு மருந்து அடிப்பதில் சுகாதாரத் துறை அதிகாரிகள் ஊழல் செய்கின்றனர். டீசலுடன் மருந்து கலந்து, சில தெருக்களுக்கே அடிக்கின்றனர். டீசல் பயன்பாட்டிலும், இஷ்டம் போல் பில் போடுவதில் ஏகப்பட்ட ஊழல் நடந்துள்ளது. அது தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும்.
சுரேஷ், தி.மு.க.,: மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள அரசு ஆவணங்களை எடுத்து சிலர் பயன்படுத்துகின்றனர். அதை வைத்து அதிகாரிகளையும் மிரட்டுகின்றனர். அரசு ஆவணங்கள் வெளியே கசிவது நிர்வாகத்திற்கு நல்லது கிடையாது.
கார்த்தி, தி.மு.க.,: ஊழல் சம்பந்தமான புகார்களை தெரிவிக்கிறோம். யார் மிரடப்பட்டார்கள் என்பதையும் இங்கேயே கூற வேண்டும். பொதுவாக பேசக்கூடாது.
இவ்வாறு விவாதம் நடந்தது.
