காஞ்சிபுரம் மாவட்டத்திற்கான தொலைநோக்கு திட்டம்- 2030 வெளியீடு
காஞ்சிபுரம் மாவட்டத்திற்கான தொலைநோக்கு திட்டம்- 2030 வெளியீடு
ADDED : மார் 07, 2026 06:24 AM

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்திற்கான தொலைநோக்கு திட்டம் - 2030 திட்ட அறிக்கை, காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த கனவுகள் மெய்ப்படும் நிகழ்ச்சியில் நேற்று வெளியிடப்பட்டது.
முதல்வரின் முகவரித்துறை, பல்வேறு திட்டங்களின் சென்றடையும் வகையில், செயல்திறன் மற்றும் தாக்கத்தை மதிப்பிடுவதற்காக ஒரு விரிவான கணக்கெடுப்பை நடத்துவதற்காக அரசாணை பிறப்பித்துள்ளது. அதன்படி, சுய உதவிக்குழுவினர் மூலம் கணக்கெடுப்பு நடத்தி வருகின்றனர். இத்திட்டத்தின் மூலம் பொதுமக்களின் கனவுகளும், நோக்கங்களும் சேகரிக்கப்பட்டு, மாவட்டத்தில் உள்ள துறைசார் வல்லுநர்களின் உள்ளீடுகளுடன் மாவட்ட, மாநில மற்றும் துறைசார் அளவிலான தொலைநோக்கு பார்வை - 2030 தயாரிக்கப்பட்டது.
திட்டத்தை வெளியிடும் வகையில், சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நடைபெற்ற 'கனவுகள் மெய்ப்படும்' நிகழ்ச்சி முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நேற்று நடந்தது.
நிகழ்ச்சியில் தொலைநோக்கு திட்டம் -- 2030 அறிக்கை வெளியிடப்பட்டது. அதன் ஒரு பகுதியாக, காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலக வளாகத்தில், கலெக்டர் சினேகா தலைமையில் நேற்று கனவுகள் மெய்ப்படும் நிகழ்ச்சி நடந்தது. இதில், காஞ்சிபுரம் தொலைநோக்கு பார்வை - 2030 கையேடு வெளியிடப்பட்டது. தொடர்ந்து தமிழக அரசின் ஐந்தாண்டு சாதனை மலர் வெளியிடப்பட்டது.
