ADDED : பிப் 27, 2026 05:36 AM
வாலாஜாபாத்: வாலாஜாபாதில் புதிதாக அமைத்த புறவழிச்சாலையை தமிழக முதல்வர் ஸ்டாலின், 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக நேற்று திறந்து வைத்ததையடுத்து, பயன்பாட்டிற்கு வந்தது.
காஞ்சிபுரம் - செங்கல்பட்டு சாலையில், வாலாஜாபாத் மையமாக உள்ளதால் சுற்றியுள்ள 100க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு முக்கிய நகராக அமைந்துள்ளது.
இந்நிலையில், வாலாஜாபாத் ராஜவீதி சாலையில் காலை மற்றும் மாலை நேரங்களில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பல தரப்பினரும் பல ஆண்டுளகாக அவதிப்பட்டு வருகின்றனர்.
இப்போக்குவரத்து நெரிசலை குறைக்க சென்னை - கன்னியாகுமரி தொழிற்தட திட்டத்தின் கீழ், 141.59 கோடி ரூபாய் செலவில் வாலாஜாபாத் புறவழிச்சாலை திட்டம் ஏற்படுத்தப்பட்டது.
அதாவது, காஞ்சி - செங்கை சாலையில், வெண்குடி அருகே துவங்கி கிதிரிப்பேட்டை வழியாக புளியம்பாக்கம் சாலையை சென்றடையும் வகையில், 6.5 கி.மீ., துாரத்திற்கான பைபாஸ் சாலை அமைக்கும் பணி கடந்த 2022ல் துவங்கியது.
வாலாஜாபாத் புறவழிச்சாலைக்கான பணிகள் 2 மாதத்திற்கு முன் முழுமையாக நிறைவு பெற்றது. எனினும், பயன்பாட்டிற்கு விடாமல் போக்குவரத்திற்கு தடை செய்யப்பட்டு இருந்தது.
இதனால், வாலாஜாபாத் ராஜவீதி சாலையில் வாகன ஓட்டிகள் நெரிசலில் சிக்கி தொடர்ந்து அவதிப்பட்டு வந்தனர்.
இதுகுறித்து, அவ்வப்போது நம் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், வாலாஜா பாதில் புறவழிச்சாலையை தமிழக முதல்வர் ஸ்டாலின், 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக நேற்று திறந்து வைத்தார்.
அதை தொடர்ந்து, உத்திரமேரூர் தி.மு.க., - எம்.எல்.ஏ., சுந்தர் மற்றும் காஞ்சிபுரம் தி.மு.க., - எம்.பி., செல்வம் ஆகியோர் புறவழிச்சாலையில் ரிப்பன் வெட்டி பயன்பாட்டிற்கு கொண்டு வந்தனர்.
இதில், வாலாஜாபாத் ஒன்றியக் குழு தலைவர் தேவேந்திரன் மற்றும் சென்னை - கன்னியாகுமரி தொழிற்தட திட்ட அதிகாரிகள் உட்பட பலர் பங்கேற்றனர்.
