/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
அழிசூரில் பைப் உடைந்து வீணாகும் குடிநீர்
/
அழிசூரில் பைப் உடைந்து வீணாகும் குடிநீர்
ADDED : செப் 18, 2024 11:46 PM

உத்திரமேரூர்:உத்திரமேரூர் ஒன்றியம், அழிசூர் கிராமத்தில் 300க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். அழிசூர் கிராம மக்களின் குடிநீர் தேவைக்காக அப்பகுதி ஏரி அருகே, இரண்டு திறந்தவெளி கிணறுகள் அமைக்கப்பட்டுள்ளன.
அதில் உறிஞ்சும் தண்ணீரை பூமிக்கு அடியில் புதைத்த குடிநீர் பைப் வாயிலாக டேங்க்கில் ஏற்றி, வீட்டு குழாய்களில் குடிநீர் வினியோகிக்கப்படுகிறது.
இதனிடையே, குடிநீர் கிணற்றில் நீர் ஊற்றுகள் குறைந்ததால், போதுமான தண்ணீர் கிடைக்காத நிலை உள்ளதாக கூறப்படுகிறது. இதனால், அழிசூரில் சில மாதங்களாக குடிநீர் தட்டுப்பாட்டால் சுழற்சி அடிப்படையில் வாரத்திற்கு ஒருமுறை என வீட்டு குழாய்களில் குடிநீர் வினியோகிக்கப்படுகிறது.
இதனால், அப்பகுதியினர் குடிநீர் தட்டுப்பாட்டால் சிரமப்பட்டு வருகின்றனர். இதனிடையே, அழிசூர் ஏரியில் இருந்து, அப்பகுதி மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கு குடிநீர் பைப் செல்கிறது.
அப்பகுதி பேருந்து நிறுத்தம் அருகே நிலத்தின் கீழ் புதைத்துள்ள இந்த குடிநீர் பைப் உடைந்துள்ளது. இதனால், நீர் கசிவு ஏற்பட்டு குடிநீர் வீணாக வெளியேறி அப்பகுதி பிரதான சாலையில் வழிந்தோடுகிறது.
ஏற்கனவே அழிசூரில் குடிநீர் தட்டுப்பாடு உள்ள நிலையில், பைப் உடைந்து குடிநீர் வீணாவதால் குடிநீர் பிரச்னை அதிகரித்துள்ளது.
எனவே, அழிசூர் பேருந்து நிறுத்தம் அருகே உடைப்பு ஏற்பட்ட குடிநீர் பைப்பை உடனடியாக சீர் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.