/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
ஏரிநீர் வரத்து கால்வாய் உடைப்பால் தண்ணீர் வீண்
/
ஏரிநீர் வரத்து கால்வாய் உடைப்பால் தண்ணீர் வீண்
ADDED : மார் 19, 2025 12:16 AM

உத்திரமேரூர்:காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பெரிய ஏரிகளுள் ஒன்று உத்திரமேரூர் ஏரி. இந்த ஏரி நீரைப் பயன்படுத்தி குப்பைநல்லூர், காவனூர் புதுச்சேரி, புலியூர், கம்மாளம்பூண்டி ஆகிய பகுதிகளில் உள்ள விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.
உத்திரமேரூர் ஏரியில் இருந்து, குப்பைநல்லூர் வழியே செல்லும் நீர்வரத்து கால்வாய் உள்ளது. இந்த கால்வாயை பயன்படுத்தி, அப்பகுதி விவசாயிகள் விளைநிலங்களுக்கு நீர்ப்பாசனம் செய்து வருகின்றனர்.
இந்த நீர் வரத்து கால்வாய் முறையான பராமரிப்பு இல்லாமலும், கரைகள் சேதமடைந்தும் உள்ளன. தற்போது, ஏரியில் இருந்து பாசனத்திற்காக தண்ணீர் நீர் வரத்து கால்வாயில் திறந்து விடப்பட்டுள்ளது.
இந்நிலையில், காவனூர் புதுச்சேரி செல்லும் சாலையில் உள்ள சிறுபாலம் அருகே, நீர் வரத்து கால்வாய் உடைந்து இருப்பதால், தண்ணீர் வீணாக வெளியேறி வருகிறது.
உடைந்து உள்ள கால்வாயை சீரமைக்க விவசாயிகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால், இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை.
எனவே, உடைந்த நீர்வரத்து கால்வாயை சீரமைத்து, தண்ணீர் வீணாகி வருவதை தடுக்க, துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.