/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
அமரம்பேடு - இரும்பேடு ஏரிகளை இணைத்து புது தடுப்பணை வெள்ள பாதிப்பை தடுக்க நீர்வள துறை திட்டம்
/
அமரம்பேடு - இரும்பேடு ஏரிகளை இணைத்து புது தடுப்பணை வெள்ள பாதிப்பை தடுக்க நீர்வள துறை திட்டம்
அமரம்பேடு - இரும்பேடு ஏரிகளை இணைத்து புது தடுப்பணை வெள்ள பாதிப்பை தடுக்க நீர்வள துறை திட்டம்
அமரம்பேடு - இரும்பேடு ஏரிகளை இணைத்து புது தடுப்பணை வெள்ள பாதிப்பை தடுக்க நீர்வள துறை திட்டம்
UPDATED : ஆக 10, 2025 01:17 AM
ADDED : ஆக 10, 2025 01:13 AM

குன்றத்துார்:அடையாறு ஆற்றில் இருந்து வெளியேறும் உபரி நீரால் வரதராஜபுரம், சுற்றுப் புறத்தில் ஆண்டுதோறும் ஏற்படும் வெள்ளப் பாதிப்பை தடுக்கவும், வீணாகும் மழைநீரை தேக்கி வைக்கவும், நீர்வளத்துறை திட்டமிட்டுள்ளது. அதற்காக, அமரம்பேடு - இரும்பேடு ஏரிகளை இணைத்து, 16.50 கோடி ரூபாயில் புதிய நீர்த்தேக்கம் அமைக்கும் பணிகளை, 16.50 கோடி ரூபாய் மதிப்பில் நீர்வளத் துறையினர் துவங்க உள்ளனர்.
மேலும், செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்வரத்து கால்வாயான 'சவுத்ரி' கால்வாயில் செல்லும் வெள்ள நீரின் ஒரு பகுதி, அமரம்பேடு அருகே பிரிந்து, சோமங்கலம் அடையாறு கால்வாயில் கலக்கிறது.
இந்த கால்வாய்களில், வடகிழக்கு பருவ மழைக்காலத்தில் பெருக்கெடுக்கும் வெள்ள நீரால், புறநகர் பகுதிகளான வரதராஜபுரம், முடிச்சூர் உள்ளிட்ட குடியிருப்பு பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்து பாதிப்பு ஏற்படுவது, ஆண்டுதோறும் தொடர்கதையாக நடக்கிறது.
இதை தடுக்க, அமரம்பேடு - இரும்பேடு ஏரிகளுக்கிடையே புதிதாக தடுப்பணை கட்ட நீர்வளத் துறை திட்டமிட்டு, இது சம்பந்தமான திட்ட அறிக்கை தயாரித்து, அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்நிலையில், அரசு அனுமதி வழங்கியதோடு, 16.50 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியுள்ளது.
முதற்கட்டமாக அமரம்பேடு - இரும்பேடு ஏரிகளுக்கிடையே, 100 மீட்டர் நீளத்திற்கு தடுப்புச்சுவர் அமைத்து, கூடுதலாக தண்ணீரை தேக்கி வைக்க, 1 கி.மீட்டரில் கரை அமைக்கும் பணி துவங்கியுள்ளது. அதோடு, 11.50 கி.மீ., சோமங்கலம் அடையாறு கிளை ஆற்றை துார்வாரும் பணிகளையும் நீர்வளத் துறை துவங்க உள்ளது.
சோமங்கலம் கிளையாறு வழியே, மழைக்காலத்தில் வினாடிக்கு 3,500 கன அடி நீர் செல்வதால், வரதராஜபுரத்தில் வெள்ளப் பாதிப்பு ஏற்படுகிறது. மேலும், 2 டி.எம்.சி., வரை மழைநீர் வீணாக கடலில் கலக்கிறது.
அதனால் வெள்ளப் பாதிப்பை தடுக்கவும், வீணாகும் நீரை சேமிக்கவும், அமரம்பேடு - இரும்பேடு ஏரிகளை இணைத்து புதிதாக தடுப்பணை அமைக்கப்படுகிறது. தவிர, செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து சவுத்ரி கால்வாய் வழியாக செல்லும் நீரை தடுத்து நிறுத்தி, செம்பரம்பாக்கத்திற்கு திருப்பி விட முடிவு செய்யப்பட்டு உள்ளது. இதனால், வீணாகும் நீரின் ஒரு பகுதியை சேமித்து வைப்பதோடு, வெள்ளப் பாதிப்பையும் தடுக்க முடியும்.
தடுப்பணை அமைக்கும் பணிக்கு, பூமி பூஜை நடத்தியுள்ளோம்; நான்கு மாதங்களில் பணிகளை முடிக்க திட்டமிட்டுள்ளோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.