/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
ஊராட்சிகளில் குடிநீர், வீட்டு வரி நிலுவை...ரூ.21.86 கோடி: பாதிகூட எட்டாததால் அதிகாரிகள் புலம்பல்
/
ஊராட்சிகளில் குடிநீர், வீட்டு வரி நிலுவை...ரூ.21.86 கோடி: பாதிகூட எட்டாததால் அதிகாரிகள் புலம்பல்
ஊராட்சிகளில் குடிநீர், வீட்டு வரி நிலுவை...ரூ.21.86 கோடி: பாதிகூட எட்டாததால் அதிகாரிகள் புலம்பல்
ஊராட்சிகளில் குடிநீர், வீட்டு வரி நிலுவை...ரூ.21.86 கோடி: பாதிகூட எட்டாததால் அதிகாரிகள் புலம்பல்
ADDED : மார் 31, 2025 12:46 AM

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாவட்டத்தில் குடிநீர் மற்றும் பிற வரியினங்களில், 21.86 கோடி ரூபாய் நிலுவையில் உள்ளது. இதை வசூலிக்க முடியாமல் உள்ளாட்சி நிர்வாகத்தினர் பரிதவித்து வருகின்றனர்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில், காஞ்சிபுரம், வாலாஜாபாத், குன்றத்துார், ஸ்ரீபெரும்புதுார், உத்திரமேரூர் ஆகிய ஐந்து ஊராட்சி ஒன்றியங்களில், 274 ஊராட்சிகள் உள்ளன. இந்த ஊராட்சிகளில் குடிநீர், தொழில் வரி, வீட்டு வரி, வணிக வரி உள்ளிட்ட பல்வேறு வரியினங்கள் வசூலிக்கப்படுகின்றன.
வரியினங்களை குடியிருப்புவாசிகள் மற்றும் தொழிற்சாலை நிர்வாகத்தினர் செலுத்துவதில் தாமதம் ஏற்படுவதால், அனைத்து வரியினங்களையும், 'ஆன்லைன்' வாயிலாக வசூலிக்கும் திட்டம், சில ஆண்டுகளுக்கு முன் துவக்கப்பட்டன.
ஊராட்சி குடிநீர், வீட்டு வரி, தொழில் வரி வசூலிப்பதில் சுணக்கம் ஏற்பட்டிருப்பதாக குற்றசாட்டு எழுந்துள்ளது.
ஏப்ரல் மாதம் துவங்கும் நிதி ஆண்டு, மார்ச் மாதம் இறுதிக்குள் பெரும்பாலான ஊராட்சிகளில் வீட்டு வரி, குழாய் வரி, தொழில் வரி, தொழில் உரிமம் உள்ளிட்ட பல்வேறு விதமான வரியினங்களை அந்தந்த ஊராட்சிகளில் தீர்மானத்தின்படி கட்டணங்களை வசூலிக்க வேண்டும் என, ஊரக வளர்ச்சி தெரிவித்துள்ளது.
குற்றச்சாட்டு
அதன்படி ஊராட்சி நிர்வாகத்தினர் வரியினங்களை வசூலித்து வருகின்றனர். இருப்பினும், இலக்கு நிர்ணயம் செய்த வரியை வசூலிக்க முடியாமல் உள்ளாட்சி நிர்வாகங்கள் பரிதவித்து வருகிறது.
ஊராட்சிகளில், தொழில் உரிமம், தொழில் வரி உள்ளிட்ட பல்வேறு வரியினங்களை காட்டிலும், குடிநீர் வரியினங்களின் கட்டணம் குறைவாகவே வசூலிக்கப்படுகின்றன. ஊராட்சிகளில் வரி வசூலிப்பை ஊராட்சி நிர்வாகத்தினர் ஊக்குவிப்பதில்லை என, குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
குறிப்பாக, காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருக்கும், 274 ஊராட்சிகளில், 9.16 கோடி ரூபாய் குடிநீர் வரியினங்களை வசூலிக்க வேண்டும் என, இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதில், 1.95 கோடி ரூபாய் மட்டுமே வசூலிக்கப்பட்டுள்ளது. மீதம், 7.21 கோடி ரூபாய் நிலுவையில் உள்ளது.
அதேபோல, தொழில் வரி, தொழில் உரிமம், வீட்டு வரி உள்ளிட்ட வரியினங்களை வசூலிக்க 47.04 கோடி ரூபாய் இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டது.
நடவடிக்கை
இதில், 32.39 கோடி ரூபாய் வசூலிக்கப்பட்டு உள்ளது. மீதம், 14.65 கோடி ரூபாய் நிலுவையில் உள்ளது.
இதை கண்காணிக்க வேண்டிய ஊரக வளர்ச்சி துறை உதவி இயக்குநர் அலுவலக வட்டாரத்தினர் கண்டுக்கொள்வதில்லை என, குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
ஊராட்சிகளுக்கு தேவையான குடிநீர் வளர்ச்சி பணிகள் மற்றும் இதர வளர்ச்சி பணிகளை கவனிக்க முடியவில்லை என, குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
மேலும், பெரும்பாலான ஊராட்சி செயலர்களுக்கு கணினி மற்றும் ஆன்லைனில் வரியினங்களை வசூலிக்கும் வசதிகள் இருந்தாலும், ஊராட்சி செயலர்கள் தனியார் கணினி மையங்களை சார்ந்து வரி இனங்களின் ரசீது வழங்கி வருகின்றனர்.
இதுகுறித்து, காஞ்சிபுரம் மாவட்ட ஊரக வளர்ச்சி துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
ஊராட்சி வரியினங்களை நிலுவை இன்றி வசூலிக்க வேண்டும் என, அந்தந்த ஊராட்சி செயலர்களுக்கு அறிவுரை வழங்கி வருகிறோம். இருப்பினும், 50 சதவீதத்திற்கும் மேல் வரியினங்களை வசூலிக்க முடியவில்லை. இனி வரும் காலங்களில், 100 சதவீதம் வரியினங்களை வசூலிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.