/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
மூலப்பொருள் வழங்காததால் நெசவாளர்கள்...கவலை!: பட்டு சேலை உற்பத்தி முடங்கியதால் அவதி
/
மூலப்பொருள் வழங்காததால் நெசவாளர்கள்...கவலை!: பட்டு சேலை உற்பத்தி முடங்கியதால் அவதி
மூலப்பொருள் வழங்காததால் நெசவாளர்கள்...கவலை!: பட்டு சேலை உற்பத்தி முடங்கியதால் அவதி
மூலப்பொருள் வழங்காததால் நெசவாளர்கள்...கவலை!: பட்டு சேலை உற்பத்தி முடங்கியதால் அவதி
ADDED : பிப் 20, 2025 09:08 PM

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் நெசவாளர்கள் பல கட்ட போராட்டங்களை மேற்கொண்டு வரும் நிலையில், பட்டு மூலப்பொருளான கோறா வழங்காமல் இரண்டு மாதங்களாக வேலையின்றி உள்ளனர். இந்நிலையில் அண்ணா பட்டு கைத்தறி சங்கத்தினர் நேற்று உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கைத்தறி நெசவு தொழில் நாளுக்கு நாள் நலிவடைந்து வரும் நிலையில், மூலப்பொருட்களின் விலை உயர்வு, நிர்வாக குளறுபடி, பணி முடக்கம் போன்ற காரணங்களாலும், நெசவாளர்களின் வாழ்வாதாரம் மேலும் பாதிக்கிறது. கைத்தறி பட்டு சேலைக்கு புகழ் பெற்ற காஞ்சிபுரத்தில், நெசவாளர்கள் இதுபோன்ற பிரச்னைகளில் சிக்கி தவித்து வருகின்றனர்.
கைத்தறி கூட்டுறவு சங்கங்களில் வழங்கப்படும் கூலி ரொக்கமாக வழங்கப்பட்டு வந்த நிலையில், கூலியை வங்கியில் வரவு வைக்க புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
வங்கியில் வரவு வைப்பதில் நடைமுறை சிக்கல் இருப்பதால், நெசவாளர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வந்தனர். சில சங்கங்களில் கூலி ரொக்கமாக வழங்குவது தொடரும் நிலையில், மற்ற சங்கங்களிலும் கூலியை ரொக்கமாக வழங்க வேண்டும் என கேட்டு வருகின்றனர். ஆர்ப்பாட்டம், முற்றுகை என பலகட்ட போராட்டங்களை நெசவாளர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.
இதற்கிடையே, அண்ணா பட்டு கைத்தறி சங்கங்த்தில், 1,500 க்கும் மேற்பட்ட நெசவாளர்களுக்கு, கடந்த இரு மாதங்களாக கோறா எனப்படும் பட்டு வழங்காமல், தொழில் முடக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால், இரண்டு மாதங்களாக வேலையின்றி, வருமானம் பாதிக்கப்பட்டிருப்பதாக, நெசவாளர்கள் கவலையுடன் தெரிவிக்கின்றனர்.
நெசவாளர்கள் மத்தியில் ஏற்பட்ட அதிருப்தி காரணமாக, 100 க்கும் மேற்பட்ட நெசவாளர்கள், வழக்கறுத்தீஸ்வரர் கோவில் அருகே உள்ள அண்ணா கைத்தறி கூட்டுறவு சங்க அலுவலலகத்தில், உள்ளிருப்பு போராட்டத்தில் நேற்று ஈடுபட்டனர்.
விஷ்ணுகாஞ்சி போலீசார் நெசவாளர்களிடம் போராட்டத்தை கைவிட கேட்டனர். இருப்பினும், 'கைத்தறி துறை அதிகாரிகள் நேரில் வர வேண்டும் எனவும், தொழில் முடக்கத்தை சரிசெய்ய பட்டு மூலப்பொருட்களை உடனடியாக வழங்க வேண்டும்' என்றனர்.
கைத்தறி துறை மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் பேச்சு வார்த்தைக்கு வந்த பின், அவர்களிடம் தங்களது தொழில் முடக்கம் பிரச்னையை சரிசெய்ய வேண்டும் என்றனர். இதனால், சங்கத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
அண்ணா கைத்தறி பட்டு கூட்டுறவு சங்கத்தில், 1,200 க்கும் மேற்பட்ட நெசவாளர்கள் உறுப்பினர்களாக உள்ளனர். தமிழகத்தின் முன்னணி சங்கம். இங்கு, ஆண்டுதோறும் 50 கோடி ரூபாய்க்கு பட்டு சேலை விற்பனையாகும்.
இந்த சங்கத்திலேயே பணி முடக்கம் ஏற்பட்டது நெசவாளர்களுக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளது. மூன்று சேலை கொண்ட ஒரு பாவு நெய்வதற்கு, 10,000 ரூபாய் 15,000 ரூபாய் வரை கூலி பெறும் பெரும்பாலான நெசவாளர்கள் இரண்டு மாதங்களாக வேலையின்றி இருப்பது, வேதனையாக இருப்பதாக தெரிவிக்கின்றனர்.
கோறா எனப்படும் பட்டு மூலப்பொருள், தர பரிசோதனை செய்த பிறகு தான், பயன்படுத்த வேண்டும் என்ற கைத்தறி துறையின் நடைமுறையால், சரியான அவகாசத்தில் பட்டு மூலப்பொருள் நெசவாளர்களுக்கு கிடைக்கவில்லை என தெரிவிக்கின்றனர்.
மாதம் ஒன்றுக்கு 1,000 கிலோ கோறா எங்கள் சங்கத்திற்கு தேவை. ஆனால், வெறும் 200 கிலோ தான் வருகிறது. தர பரிசோதனை காரணமாக, நெசவாளர்களுக்கு பட்டு மூலப்பொருள் கிடைக்க மிக தாமதம் ஏற்படுகிறது. கோறா இல்லாமல் நெசவாளர்கள் வாழ்வாதாரம் பாதித்துள்ளோம். கோறா வழங்க உடனடி நடவடிக்கை வேண்டும். கூலியை எங்களுக்கு ரொக்கமாக வழங்க வேண்டும்.
- ஆர். நாகேஸ்வரன், உறுப்பினர்,
அண்ணா கைத்தறி சங்கம்,
காஞ்சிபுரம்.
கோறா சரிவர கொடுக்காததால் இரண்டு மாதங்களாக பணியின்றி உள்ளோம். வெறும் 8,000 ரூபாய் கூலி கிடைக்கும் பட்டு சேலைகள் தான் நாங்கள் நெய்கிறோம். ஆனால், எங்களுக்கே பணி வழங்காமல் முடங்கி உள்ளோம். இரண்டு மாதங்களாக எங்களது குடும்ப செலவுகளை எப்படி சமாளிப்பது. நெசவு கூலியையும் ரொக்கமாக கையில் வழங்க வேண்டும் என்பதே எங்களின் கோரிக்கை.
- ஆர்.தேன்மொழி, உறுப்பினர்,
அண்ணா கைத்தறி சங்கம்,
காஞ்சிபுரம்.