அதிகாரிகள் புறக்கணிப்பதாக உள்ளாட்சி பிரதிநிதிகள் புலம்பல்! மக்களுக்கும் ஏதும் செய்ய முடியலை எனவும் புகார்
அதிகாரிகள் புறக்கணிப்பதாக உள்ளாட்சி பிரதிநிதிகள் புலம்பல்! மக்களுக்கும் ஏதும் செய்ய முடியலை எனவும் புகார்
UPDATED : செப் 01, 2026 08:16 PM
ADDED : செப் 01, 2026 08:03 PM

காஞ்சிபுரம்:மக்கள் பிரதிநிதிகளாக தொடரும் எங்களை புறக்கணித்துவிட்டு, அதிகாரிகள் தன்னிச்சையாக செயல்படுவதாக, காஞ்சியில் உள்ள ஊரக, நகர்ப்புற உள்ளாட்சிகளின் மக்கள் பிரதிநிதிகள் புலம்புகின்றனர். கடைசி நேரத்திலும் மக்களுக்கு ஏதும் செயய முடியவில்லை எனவும் அவர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
காஞ்சிபுரத்தில், காஞ்சிபுரம் மாவட்ட ஊராட்சி, காஞ்சிபுரம், வாலாஜாபாத், குன்றத்துார், ஸ்ரீபெரும்புதுார், உத்திரமேரூர் ஆகிய ஐந்து ஊராட்சி ஒன்றியம், 274 ஊராட்சிகள் என, ஊரக உள்ளாட்சி நிர்வாகங்கள் உள்ளன.
இதில், பல்வேறு அரசியல் கட்சிகளின் நிர்வாகிகள் பதவி வகித்து வருகின்றனர். இவர்களின் பதவிக்காலம், அக்டோபர் மாதத்துடன் நிறைவு பெறுகிறது.
அதேபோல, காஞ்சிபுரம் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி ஆகிய நகர்ப்புற உள்ளாட்சி பிரதிநிதிகளின் பதவிக்காலம், அடுத்த ஆண்டு மார்ச்சில் நிறைவு பெறுகிறது.
தமிழகத்தில் விஜய் தலைமையிலான த.வெ.க., ஆட்சி நடந்து வரும் நிலையில், நகர்ப்புற உள்ளாட்சிகளுடன், ஊரக உள்ளாட்சி தேர்தலையும் சேர்த்து நடத்தலாமா என, ஆலோசனை நடந்து வருகிறது.
தேர்தல் நடக்கும் வரை, ஊரக உள்ளாட்சிகள் தனி அலுவலர்களின் கீழும், நகர்ப்புற உள்ளாட்சிகள் செயல் அலுவலர்களின் கீழும் செயல்படும்.
ஊரக, நகர்ப்புற உள்ளாட்சி பிதிநிதிகளின் பதவிக்காலம் இன்னும் முடியாத நிலையில், அவர்களை அதிகாரிகள் கண்டு கொள்வதில்லை; அவர்களின் கோரிக்கைகளுக்கு செவி சாய்ப்பதில்லை என, குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதுகுறித்து, காஞ்சிபுரம் மாவட்ட ஊரக உள்ளாட்சி நிர்வாகி ஒருவர் கூறியதாவது:
ஊரக உள்ளாட்சி நிர்வாகிகளின் பதவிக்காலம், அடுத்த மாதத்துடன் நிறைவு பெறவிருப்பதால், அதிகாரிகள் எங்களிடம் ஆலோசிக்காமல் பணிகளை தேர்வு செய்கின்றனர். அனுமதி அளிக்கப்பட்ட பணிகளுக்கும், டெண்டர் விடாமல் இழுத்தடிக்கின்றனர்.
உதாரணமாக, வாலாஜாபாத் தி.மு.க., ஒன்றிய தலைவரின் பார்வைக்கு கோப்புகள் அனுப்பப்படுவதில்லை. வழிகாட்டி நெறிமுறைகள் உள்ளது எனக்கூறி, ஒன்றிய தலைவரை ஆலோசிக்காமல் வளர்ச்சி பணிகளை தேர்வு செய்யப்படுகின்றன.
வாலாஜாபாத் பேரூராட்சியில், தி.மு.க., பெண் தலைவரின் கவனத்திற்கு கொண்டு வராமல், சில பணிகளுக்கு ஆன்லைன் டெண்டர் விடப்பட்டுள்ளது.
இதே நிலைதான், மாவட்டம் முழுதும் உள்ள உள்ளாட்சிகளில் நிலவி வருகிறது. மக்கள் பிரதிநிதிகள், கலெக்டர் மற்றும் பேரூராட்சிகள் இயக்குநர் ஆகியோருக்கு புகார் அனுப்பியும் எந்த பயனும் இல்லை.
எங்களின் பதவிக்காலம் இருக்கும் வரை, எங்கள் ஊராட்சிக்கு தேவையான பணிகளை செய்து முடிக்க, முழு சுதந்திரம் அளிக்க வேண்டும். இதற்கு, அதிகாரிகள் முட்டுக்கட்டை போடக்கூடாது.
இவ்வாறு அவர் கூறினார்.
இதுகுறித்து, காஞ்சிபுரம் மாவட்ட கூடுதல் கலெக்டர் ஆசிக் அலி கூறியதாவது:
நம் மாவட்டத்தில், பல்வேறு திட்டங்களில் வளர்ச்சி பணிகள் தேர்வு செய்து, அந்தந்த உள்ளாட்சி நிர்வாகங்களின் ஒப்புதல் பெற்றுள்ளோம். இதில், குடிநீர் பணிகளுக்கு முன்னுரிமை அளிக்க, உள்ளாட்சிகளுக்கு பரிந்துரை செய்கிறோம்.
சில உள்ளாட்சி நிர்வாகிகள், புதிய கட்டடங்களை கட்டி தர கேட்கின்றனர். பழைய கட்டடங்களின் தன்மை குறித்து, அதிகாரிகள் ஆய்வு செய்யும்போது, பழுது நீக்கலாம் என, பரிந்துரைக்கும்போது, சில மன கசப்புகள் ஏற்படும். இதனால், ஊராட்சி தலைவர்கள் புகார்கள் கூறுகின்றனர்; வேறு ஒன்றுமில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
