/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
கால்வாய் போல் மாறிய வேகவதி ஆறு 1,400 ஆக்கிரமிப்பு அகற்றுவது எப்போது? அமைச்சர் கூறி 3 ஆண்டாகியும் நடவடிக்கை இல்லை
/
கால்வாய் போல் மாறிய வேகவதி ஆறு 1,400 ஆக்கிரமிப்பு அகற்றுவது எப்போது? அமைச்சர் கூறி 3 ஆண்டாகியும் நடவடிக்கை இல்லை
கால்வாய் போல் மாறிய வேகவதி ஆறு 1,400 ஆக்கிரமிப்பு அகற்றுவது எப்போது? அமைச்சர் கூறி 3 ஆண்டாகியும் நடவடிக்கை இல்லை
கால்வாய் போல் மாறிய வேகவதி ஆறு 1,400 ஆக்கிரமிப்பு அகற்றுவது எப்போது? அமைச்சர் கூறி 3 ஆண்டாகியும் நடவடிக்கை இல்லை
ADDED : டிச 28, 2024 01:34 AM

காஞ்சிபுரம்:பாலாற்றின் கிளை ஆறான வேகவதி ஆறு, காஞ்சிபுரம் நகரின் மையப் பகுதியில் செல்கிறது. ஆற்றின் இரு கரைகளிலும், 1,400க்கும் மேற்பட்ட வீடுகள் ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளன.
கடந்த 30 ஆண்டுகளாக சிறுக சிறுக முளைத்த இந்த வீடுகளை அகற்ற முடியாமல், அதிகாரிகள் விழிபிதுங்கி வருகின்றனர். கடந்த 2015ல் பெய்த பெருமழை காரணமாக, இந்த ஆக்கிரமிப்பு வீடுகளை கட்டாயம் அகற்ற வேண்டிய சூழல் ஏற்பட்டது.
கடந்த 20215ல், காஞ்சிபுரம் சப் - கலெக்டராக பொறுப்பேற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரி அருண் தம்புராஜ், இந்த ஆக்கிரமிப்புகளை அகற்ற முயன்றார். ஆனால், அடுத்தடுத்த ஆண்டுகளில் இவற்றை அகற்ற முடியவில்லை.
பத்து ஆண்டுகள் கழித்து, காஞ்சிபுரம் சப் - கலெக்டராக ஆஷிக்அலி என்பவர் பொறுப்பேற்றுள்ளார். இவராவது, இந்த ஆக்கிரமிப்புகளை அகற்றுவாரா என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
ஆக்கிரமிப்பாளர்களை மறுகுடியமர்வு செய்ய, கீழ்கதிர்பூரில் 2,112 வீடுகள், குடிசை மாற்று வாரியத்தால், எட்டு ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது. அவற்றை, 2019ல் முன்னாள் முதல்வர் பழனிசாமி திறந்து வைத்தார்.
ஆனால், தற்போது வரை ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்ற முடியாமல் வருவாய் துறையும், பொதுப்பணித் துறையினரும் திணறுகின்றனர். 10 ஆண்டுகளில், ஐந்து கலெக்டர்கள் பணியாற்றினர். ஆனால், எந்த கலெக்டரும் இதுவரை வேகவதி ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்கவில்லை.
ஆக்கிரமிப்புகளை அகற்ற முயன்று, மேலிட அழுத்தம் காரணமாக, நடவடிக்கையை கைவிட்ட சம்பவங்களும் அரங்கேறின. ஆக்கிரமிப்பாளர்களுக்கு புதிய அடுக்குமாடி குடியிருப்பு கட்டி, அதை திறந்து வைத்து ஐந்து ஆண்டுகளாகிறது.
இருப்பினும், ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்ற முடியாமல் உள்ளது. ஆக்கிரமிப்புகளை அகற்றாததற்கு, வருவாய் துறையினர், பொதுப்பணித் துறையினர் என, இரு துறையினரும் மாறி, மாறி குற்றஞ்சாட்டுகின்றனர். ஆனால், நடவடிக்கை எடுக்கப்படாமலேயே உள்ளது.
தி.மு.க., ஆட்சிக்கு வந்த 2021ல், சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள் துறை அமைச்சர் அன்பரசன், 'வேகவதி ஆற்றின் ஆக்கிரமிப்புகளை பார்வையிட்டு, விரைவில் அகற்றப்படும்' என தெரிவித்தார். தி.மு.க., ஆட்சியமைத்து இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்த போதும், தற்போது வரை வேகவதி ஆறு மீட்டெடுக்கப்படாமல் உள்ளது.
அகலமான வேகவதி ஆறு, கால்வாய் போல் மாறி, கழிவுநீர் கலந்து மோசமான நிலையில் உள்ளது. ஆக்கிரமிப்பிலிருந்து ஆற்றை மீட்டு, விரைவில் சீர்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என, காஞ்சிபுரம் நகரவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.