/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
ஒக்கப்பிறந்தான் குளத்தில் படகு குழாம் அமைக்கப்படுமா? மாநகராட்சி நடவடிக்கை எடுக்க நகரவாசிகள் கோரிக்கை
/
ஒக்கப்பிறந்தான் குளத்தில் படகு குழாம் அமைக்கப்படுமா? மாநகராட்சி நடவடிக்கை எடுக்க நகரவாசிகள் கோரிக்கை
ஒக்கப்பிறந்தான் குளத்தில் படகு குழாம் அமைக்கப்படுமா? மாநகராட்சி நடவடிக்கை எடுக்க நகரவாசிகள் கோரிக்கை
ஒக்கப்பிறந்தான் குளத்தில் படகு குழாம் அமைக்கப்படுமா? மாநகராட்சி நடவடிக்கை எடுக்க நகரவாசிகள் கோரிக்கை
ADDED : பிப் 14, 2025 12:10 AM

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாநகராட்சிக்குட்பட்ட பிள்ளையார்பாளையம் பகுதியில், 16வது வார்டில், அமைந்துள்ளது ஒக்கபிறந்தான் குளம். இந்த குளம் மாநகராட்சியின் கட்டுப்பாட்டில் உள்ளது. கடந்த 30 ஆண்டுகளுக்கு முன், இந்த குளத்தில் கழிவுநீர் விடப்பட்டதால் குட்டையாக மாறியது.
மழைக்காலங்களில் சுற்றியுள்ள குடியிருப்பு பகுதி வாசிகள், துர்நாற்றத்தில் அவதிப்பட்டு வந்தனர். எனவே, இந்த குளத்தை சீரமைக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்தது.இந்நிலையில், 2009ல், முன்னாள் முதல்வர் அண்ணாதுரையின் நுாற்றாண்டு விழா, அவர் பிறந்த சொந்த ஊரான காஞ்சிபுரத்தில், அரசு சார்பில் கொண்டாடப்பட்டது.
அப்போது, காஞ்சிபுரத்தை அழகுபடுத்தும் வகையில், அப்போதைய முதல்வர் கருணாநிதி, 20 கோடி ரூபாய் சிறப்பு நிதியை ஒதுக்கினார். இந்த நிதியில், காஞ்சிபுரத்தில் பல்வேறு முக்கிய பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இதில், ஒக்கப்பிறந்தான் குளத்தை சீரமைக்க, 2 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது.
இந்த நிதியில் குளத்தை சுற்றி நடைபாதை, பூங்கா, இருக்கைகள், அலங்கார வளைவு, கோபுர மின் விளக்குகள், அழகு செடிகள், புல்வெளிகள் ஆகியவை அமைக்கப்பட்டன. பணிகள் முடிந்து, 2011ம் ஆண்டு பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது.
மாநகராட்சி நிர்வாகம் முறையாக பராமரிக்காததால், சமூக விரோதிகள், குளத்தை மதுக்கூடமாக பயன்படுத்த துவங்கி விட்டனர். இருக்கைகளும் உடைக்கப்பட்டு, தற்போது வரை மோசமான நிலையில் குளமும், அதை சுற்றியுள்ள பகுதியும் உள்ளன.
அப்போதைய நகராட்சி நிர்வாகம் கண்டுகொள்ளாததால், இரண்டே ஆண்டுகளில், 2 கோடி ரூபாய் அரசு நிதி வீணாணது. மாநகராட்சியாக காஞ்சிபுரம் தரம் உயர்ந்த பின், ஒக்கப்பிறந்தான்குளம் சீரமைக்கப்படும் என, நகரவாசிகள் எதிர்பார்த்தனர். ஆனால், தற்போது வரை சீரமைக்கப்படவில்லை.
இந்த குளத்தை முறையாக சீரமைத்து, படகு குழாம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, நகரவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். நகரின் மத்தியில் மிகப்பெரிய அளவில் இக்குளம் இருப்பதால், படகு குழாம் அமைத்தால், நகரவாசிகளுக்கு சிறந்த பொழுதுபோக்கு தலமாக மாறும்.
மாநகராட்சியும், சுற்றுலா துறையும் இணைந்து படகு குழாம் அமைத்தால், மாநகராட்சிக்கு வருவாயும் கிடைக்கும். குளத்தை சுற்றியுள்ள இடத்தில் இருக்கை, பாதுகாப்பு வசதிகள் போன்றவை ஏற்படுத்தி, இக்குளத்தை சுற்றுலா இடமாக மாற்ற வேண்டும் என, நகரவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.