/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
லண்டனில் உள்ள ஸ்கந்தர் சிலையும் மீட்கப்படுமா? சிலை கடத்தல் தடுப்பு போலீஸ் நடவடிக்கை தேவை
/
லண்டனில் உள்ள ஸ்கந்தர் சிலையும் மீட்கப்படுமா? சிலை கடத்தல் தடுப்பு போலீஸ் நடவடிக்கை தேவை
லண்டனில் உள்ள ஸ்கந்தர் சிலையும் மீட்கப்படுமா? சிலை கடத்தல் தடுப்பு போலீஸ் நடவடிக்கை தேவை
லண்டனில் உள்ள ஸ்கந்தர் சிலையும் மீட்கப்படுமா? சிலை கடத்தல் தடுப்பு போலீஸ் நடவடிக்கை தேவை
ADDED : நவ 09, 2024 12:27 AM

காஞ்சிபுரம்:வெளிநாடுகளுக்கு கடத்தப்பட்ட சிலைகள் மற்றும் பழங்கால கலை பொருட்கள் குறித்து, சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தமிழக சிலைகளின் படங்கள் குறித்து, இணையதளங்களை ஆய்வு செய்த போது, காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலுக்கு சொந்தமான சோமாஸ்கந்தர் உலோகச்சிலை, அமெரிக்காவுக்கு கடத்தப்பட்டு இருப்பதை போலீசார் கண்டறிந்தனர்.
இச்சிலையின் மதிப்பு 8 கோடி ரூபாய். இதுதொடர்பாக, போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர்.
சிலை தொடர்பான ஆவணங்கள், ஆதாரங்களை, அமெரிக்கா மியூசிய அதிகாரிகளுக்கும், அமெரிக்க அரசுக்கும் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் அளித்துள்ளனர். அதன்படி, சிலையை ஒப்படைக்க சம்மதம் தெரிவித்துள்ளதாக, போலீசார் தெரிவிக்கின்றனர்.
அதேசமயம், ஏகாம்பர நாதர் கோவிலில் இருந்து கடத்தப்பட்டு, லண்டன் மியூசியத்தில் இருப்பதாக கூறப்படும் ஸ்கந்தர் சிலையை, சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் மீட்க வேண்டும் என, காஞ்சிபுரம் பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அதாவது, காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில் தற்போது அருள்பாலிக்கும் ஆயிரம் ஆண்டு பழமையான சோமாஸ்கந்தர் உற்சவர் உள்ளது.
அதில் உள்ள ஸ்கந்தர் சிலை, 1993ம் ஆண்டு புதிதாக செய்யப்பட்டு பொருத்தப்பட்டுள்ளது. சோமாஸ்கந்தர் சிலையிலிருந்து மாயமான ஸ்கந்தர் சிலை, லண்டனில் உள்ள தனியார் அருங்காட்சியகம் ஒன்றில் இருப்பதாக பக்தர்கள் தெரிவிக்கின்றனர்.
இதுசம்பந்தமான புகைப்படங்கள், வீடியோக்கள் இணையதளத்தில் பரவி வருகிறது. அமெரிக்காவுக்கு சோமாஸ்கந்தர் சிலை கடத்தப்பட்டது போல், லண்டனுக்கு ஸ்கந்தர் சிலை கடத்தியிருப்பதாக பக்தர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
எனவே, மிக பழமையான ஸ்கந்தர் சிலையை மீட்டு, ஏகாம்பரநாதர் கோவிலுக்கு சிலையை கொண்டு வர சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் நடவடிக்கை எடுக்க பக்தர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.